One year of DMK Governance : திமுக அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு! முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவுகள் என்னென்ன?
இப்போது திமுக ஆட்சியமைத்து ஓராண்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில், திமுக அரசு கொரோனாவின் இடர்களை கடந்து அதிரடியாக கையில் எடுத்த பல அதிரடிகள் குறித்து பார்க்கலாம்.
'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்ற வார்த்தை முழங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது. பதவி ஏற்பு விழாவில் தொடங்கி தனது அதிரடியை காட்ட தொடங்கினார் முதல்வர். ஆனால் ஆரம்பத்தில் அவர்கள் வேறு எந்த வேளையிலும் கவனம் செலுத்த முடியாமல் கொரோனா என்ற அரக்கன் முன்னால் நின்று கொண்டிருந்தான். கொரோனா இரண்டாம் அலையிலிருந்து தமிழகத்தை எப்படி மீட்பது என்பதில் அரசு முழு கவனத்தையும் செலுத்தியது அரசு. ஆனால் அதன் பிறகு திமுக அரசு செய்தவை அனைத்தும் வரலாறு பேசும் செயல்பாடுகள்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பொறுப்புக்கு வந்து ஒரு ஆண்டை முழுமையாக மே 7-ம் தேதி நிறைவு செய்ய உள்ளது. 10 வருடங்களுக்குப் பிறகு திமுக தலைமையிலான ஆட்சி தமிழ்நாட்டைக் கைப்பற்றியதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் நிலவியது. இப்போது திமுக ஆட்சியமைத்து ஓராண்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில், திமுக அரசு கொரோனாவின் இடர்களை கடந்து அதிரடியாக கையில் எடுத்த அதிரடிகள் குறித்து பார்க்கலாம்.
நீட் தீர்மானம்
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதில் இருந்து நீட்டுக்கு எதிராக இருந்து வருகிறது. மாணவர்கள் உயிரிழப்பும், பன்னிரண்டாம் வகுப்பு நீர்த்துப்போதலும், இந்தி திணிப்பும், தேர்வு நடைமுறையும் என எல்லாவற்றிலும் சிக்கல் உள்ள இந்த நீட் தேர்வை ஒட்டுமொத்தமாக நீக்குவதே திமுகவின் நிலைப்பாடு என்பது இன்றுவரை மாறவில்லை. அதனால் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக நீட் தேர்வை ஆய்வு செய்யும் குழுவை அமைத்தது. அந்த குழு வெளியிட்ட அறிக்கையினை கொண்டு நீட்டுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் அந்த தீர்மானத்தை பல நாட்களாக கிடப்பில் போட்ட ஆளுனருக்கு எதிராக நின்று வெளிப்படையாக எதிர்த்து வந்தது. அப்போதும் நீர் விலக்கு தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் திருப்பி அனுப்பிய ஆளுனருக்கு சுட சுட திருப்பி அனுப்பியது. தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடப்பது அரிது என்பதால் இதன் வீரியம் அப்போதே பெரிதானது. அப்போதுதான் திமுக அரசு இன்னும் உக்கிரமாக நீட்டுக்கு எதிராக களமாட துவங்கியது.
இரண்டாவதாக நேரடியாக பிரதமர் மோடியிடமே முதல்வர் ஸ்டாலின் முறையிட்டார். பிரதமரை நேரில் சந்தித்த போது நேரடியாக முதல்வர் ஸ்டாலின் அவரிடம் நீட் விவகாரம் பற்றி பேசினார். இது தேசிய அளவில் கவனம் பெற தொடங்கியது. உள்துறை அமைச்சரிடம் பல நாள் காத்து கிடந்து தமிழ்நாடு எம்பிக்கள் இது பற்றி முறையிட்டனர். தேர்தல் நேரம் என்று கூறி அமித் ஷா தமிழ்நாடு எம்பிக்களை பார்க்க மறுத்தாலும், காத்திருந்து பார்த்துவிட்டு, நீட் பற்றி புகார் அளித்தனர். இதற்கெல்லாம் மேல் ஆளுநரே வேண்டாம் என்று அவருக்கு எதிராக களமாட, ஆளுநர் தமிழ்நாடு சட்டசபையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். இரண்டாம் முறை அனுப்பப்பட்டால் அனுப்பிதான் ஆகவேண்டும் வேறு வழியும் இல்லை.
ஒரு வழியாக நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறும் பொருட்டு, ஆளுநர் அதனை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் இரு தினங்கள் முன்பு தெரிவித்தார்.
ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும்!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி, மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர திமுக நோட்டீஸ் அனுப்பியது. இது ஏற்கப்படவில்லை என்றாலும் மிக முக்கியமான தீர்மானமாக பார்க்கப்பட்டது. திமுக எம்பி டி ஆர் பாலு மூலம் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானம் தேசிய அளவில் கவனம் பெற்றது. ஆளுநரை எதிர்க்கும் வகையில் அவர் கொடுத்த தேநீர் விருந்தை முதல்வர் ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகள் மொத்தமாக புறக்கணித்தன. ஆளுநருக்கு எதிராக திமுகவின் கூட்டணி கட்சிகள் மயிலாடுதுறையில் தீவிரமாக போராட்டம் நடத்தின. கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்தன. இது ஆளுநருக்கு பெரிய நெருக்கடி கொடுத்தது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க முதல்வர் ஸ்டாலின் போகும் இடங்களில் எல்லாம் ஆளுநரை பற்றி கேள்வி கேட்க தொடங்கினார்.
கேரளாவிலும் ஆளுநருக்கு எதிராக முதல்வர் உரையாற்றினார். போஸ்ட்மேன் வேலையை கூட ஆளுநர் சரியாக செய்யாமல் இருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகு அல்ல என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார். இது போக ஆளுநர் சென்று வந்த அயோத்தி மண்டபத்தை கைப்பற்ற இந்து சமய அறநிலையத்துறை முயன்றது, துணை வேந்தர் மாநாட்டால் ஆளுநரின் துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை நீக்கி மசோதா நிறைவேற்றியது என்று ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் திமுக அரசு கேட் போட்டது.
மாநில கல்வி கொள்கை குழு
தி.மு.க. கடந்த ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, 2021-22ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும்போது, 'மாநிலத்திற்கென புதிய கல்விக் கொள்கையை உருவாக்க ஒரு குழு அமைக்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டது. எதிரிகட்சியாக இருந்தபோதே மத்திய அரசு புதிய கல்வி கொள்கையில் உள்ள பல விஷயங்களை எதிர்த்து போராடி வந்தது. அதில் முக்கியமாக மும்மொழி கொள்கை மூலம் இந்தியை திணிப்பதாக கூறி கடுமையாக எதிர்த்து வந்தது. எனவே மாநில கல்வி கொள்கை அறிவிப்பை தொடர்ந்து, அதற்கென ஒரு குழுவையும் சென்ற மாதம் நியமித்து அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாட்டிற்கென ஒரு புதிய கல்விக் கொள்கையை வகுக்க, இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, சதுரங்கச் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், கல்வியாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழுவை அமைத்தார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்
தமிழ்நாட்டில் உள்ள ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயின்ற 28 பேருக்கு கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. அதில் 24 பேர் அர்ச்சகர்களாகவும் 4 பேர் மடப்பள்ளியிலும் பணிகளைப் பெற்றனர். இருபத்தி நான்கு பேரில் 5 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். இதுதவிர, ஓதுவார், வாத்தியங்களை இசைப்போர் உள்பட திருக்கோயில் பணிகளுக்குத் தேவைப்படும் பல்வேறு பணியிடங்களுக்கும் நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. அனைத்து சாதியினரும் கோவில் கருவறைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டுமென்று கூறிவந்த பெரியார், 1970ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று இதற்காக கிளர்ச்சி ஒன்றை அறிவித்தார்.
இந்த அறிவிப்பையடுத்து, அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டம் விரைவில் இயற்றப்படும் என்று கூறினார். எல்லோரையும் அர்ச்சகராக்க அனுமதிக்கும் இந்தச் சட்டம், ஏற்கனவே இருந்த இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை சட்டத்தின் பிரிவு 55, 56, 116 ஆகியவற்றில் செய்யப்பட்ட திருத்தச் சட்டம்தான். இதற்கான மசோதா 2.12.1970 அன்று தமிழக சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அப்போது எழுந்த பல பிரச்னைகளுக்கு பிறகு 2006 ஆம் ஆண்டு மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்தபோது தான் மீண்டும் சட்டம் முறையாக இயற்றப்பட்டது. இதற்கான பயிற்சிகள் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்டது. அரசு நடத்திய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் மொத்தமாக 207 பேர் படித்து முடித்தனர். இவர்களில் 2 பேர் ஏற்கனவே பணி வாய்ப்பைப் பெற்றுவிட்டனர். ஐந்து பேர் உயிரிழந்து விட்டனர். மீதமுள்ள 200 பேரில் 4 பேர் வேறு அரசு வேலைகளுக்குச் சென்று விட்டனர். மீதமுள்ள 196 பேர் அர்ச்சகர் பணிக்காக காத்திருந்தனர். அவர்களில் வேலைக்கு விண்ணப்பித்தவர்களை மீண்டும் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தபிறகுதான் அர்ச்சகராக பணி அமர்த்தினார்.
சமூக நீதி நாள்
“தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர்-17, இனி ஆண்டுதோறும் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும். அத்துடன், இந்நாளில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட யாவரும் 'சமூக நீதி நாள் உறுதிமொழி' ஏற்பார்கள். இதனைத் தமிழக முதல்வர் செப்டம்பர்- 06 அன்று சட்டப் பேரவையில் பெருமிதம் பொங்க அறிவித்தார்.
அவர் பெரியாரின் பாசறையில், அண்ணாவின் அரவணைப்பில், கலைஞரின் வழிகாட்டுதலில் சமூக நீதிக் கொள்கை ஈர்ப்பால் வளர்ந்த 'திராவிட வார்ப்பு' என்பதை உறுதிப்படுத்தும் வகையில், அவரது இந்த அறிவிப்பு அமைந்தது. மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு இல்லை என்பதும் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமாணம் என்பதும் தந்தை பெரியாரின் அடிப்படைக் கொள்கைகள் என்பதால் அதனை போற்றும் வகையில் இந்த அரசு இருக்கும் என்ற ஸ்டேட்மெண்டாகவும் இது அமைந்தது. சாதி ஒழிப்பும், பெண் அடிமைத்தனம் ஒழிப்பும் தான் அவரது இலக்குகளாக இருந்திருக்கின்றன. பெரியார் போட்ட அடித்தளத்தால் தான், இன்று தேசிய அளவில் சமூகநீதிக் கருத்துக்கள் விதைக்கப்பட்டுள்ளன என்பதால் இதனை வெறும் ஒரு நாளாக அனுசரிக்கமல் அதனை அர்த்தமுள்ளதாக மாற்றினார் என்று அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டனர்.
சமத்துவ நாள்
சென்ற மாதம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பெரியார் பிறந்தநாளை ‘சமூகநீதி நாளாக’அறிவித்ததுபோல, அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 ம் தேதியை ‘சமத்துவ நாள்’ என்று கொண்டாட வேண்டுமென்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்று, ஏப்ரல் 14 ஆம் தேதி இனி சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்றும், சமத்துவ நாள் உறுதிமொழி தமிழ்நாடு முழுவதும் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் மகிழ்ச்சியோடு இந்த அவைக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
அம்பேத்கர் மணிமண்டபத்தில், அவரின் முழு அளவு வெண்கலச் சிலையை நிறுவ வேண்டுமென்று திருமாவளவன் கோரிக்கை வைத்தார். அதை ஏற்று அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழுஉருவ வெண்கலச் சிலை நிறுவப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதேபோல் அம்பேத்கருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களைத் தமிழில் வாசிக்க வாய்ப்பாக மொழிபெயர்த்துப் புதுப்பிக்க வேண்டும் என்று ஆ.ராசா ஒரு கோரிக்கையை விடுத்திருந்தார். அந்தக் கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழக அரசால் அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் செம்பதிப்பாக தமிழில் வெளியிடப்படும்" என்று அறிவித்து இதுவரை யாரும் செய்யாததை உடனடியாக செய்தார்.
நான் முதல்வன்
முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது 69ஆவது பிறந்தநாள் அன்று தனது கனவு திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தை சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெடங்கி வைத்தார். தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாக ‘நான் முதல்வன்’ என்கிற புதிய திட்டம் அமைந்துள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டத்தின் முக்கிய நோக்கம், ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல் ஆகும்.
இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது என்று கூறினார். மாணவர்கள் அடுத்தடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்ற வழிகாட்டுதல்கள் தொடங்கி, தமிழில் தனித் திறன் பெற சிறப்புப் பயிற்சிகள், ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசுவதற்கும், நேர்முக தேர்வுக்கு தயாராவது குறித்த பயிற்சிகள், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு Coding, Robotics போன்ற பயிற்சி வகுப்புகள், தமிழ்ப் பண்பாடு, மரபு குறித்த விழிப்புணர்வு, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்யை உறுதி செய்ய அவரவர் விருப்பத்திற்கேற்ப அயல்நாட்டு மொழிகள் கற்பிக்க படுதல் ஆகிய தொலைநோக்கு பார்வை உடன் அமைந்த இந்த திட்டங்கள் மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்பட்டன. இவை மாணவர்களின் எதிர்காலத்திற்கு பெரும் உதவியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் மூலம் பெண்களுக்கு நிதியுதவி வழங்கி வந்த திட்டத்தை மாற்றி மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டமாக அறிவித்தனர். இதனால், பெண்களுக்குத் திருமணத்தை விட கல்வி தான் முக்கியம். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்குக் கல்லூரி சென்று உயர் கல்வி படிக்க ஒவ்வொரு மாதமும் 1000 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தனர். இந்த திட்டத்தினால் பெண்கள் படித்து வேலைக்குச் சென்றால் எவ்வளவு நகை தனது திருமணத்துக்கு வேண்டும் என்பதை அவர்களே பார்த்துக்கொள்வார்கள் என கூறுகின்றனர். ஆண்டுக்கு 6 லட்சம் மாணவிகள் வரை இந்த திட்டம் கீழ் பயன்பெறுவார்கள். கல்லூரி மட்டுமல்லாமல், டிப்ளோமா, ஐடிஐ படிக்கும் மாணவிகளுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.
பெண்களுக்குப் இலவச பேருந்து
தமிழ்நாட்டில் தினசரி கூலி வேலைக்குச் செல்பவர்களில் 60 சதவீதத்தினர் பெண்கள். இவர்கள் உள்ளூர் அரசு பேருந்துகளில் கட்டணம் ஏதும் இல்லாமல் சென்று வரும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர். அதனால் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மாதம் 200 ரூபாய் முதல் 1000 ரூபாய் சேமிப்பு கிடைப்பதாகக் கூறுகின்றனர்.
இல்லம் தேடி கல்வி
கொரோனா காலத்தில் 2 வருடங்களுக்கும் மேலாக பள்ளி, கல்லூரிகள் சரி வர இயங்காத நிலையில் அவற்றை பலப்படுத்த 36,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பல மாணவர்கள் பள்ளி படிப்பை நிறுத்திய நிலையில் அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர பல்வேறு திட்டங்களை அரசு அமல்படுத்திச் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஏழை, எளிய மாணாக்கர்களுக்கு ஏற்பட்ட கல்வி இடைவெளியை சமப்படுத்தும் நோக்கில், தமிழக அரசு சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் இந்த மையங்கள் மாணவர்களுக்கு நல்வழி காட்டும் மற்றும் பள்ளியில் கற்ற பாடங்களை நினைவுப்படுத்தி, கற்றலில் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் செயல்பட்டு வருகிறது.
மக்களை தேடி மருத்துவம்
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழக சுகாதாரத் துறை சார்பாக மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் பயனாளிகள் இல்லங்களுக்கு சென்று முக்கியமான மருந்து சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய்க்கான மருந்துகளை வழங்குதல் ,நோய் ஆதரவு மற்றும் இயன்முறை சிகிச்சை செய்வதில் வழங்குதல், சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிசிஸ் செய்து கொள்வதற்கு தேவையான பைகளை வழங்குதல், அத்தியாவசிய மருந்து சேவைகளின் பரிந்துரை போன்றவை இந்த சேவைகள் மூலம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் 50 லட்சம் பேருக்கு மேல் பயன் அடைந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை தரப்பில் கடந்த மாதம் தெரிவிக்க பட்டு, ஐம்பது லட்சத்து ஒன்றாவது பயனாளிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
ஆட்சி அதிகாரம் சொகுசு அல்ல, அது மக்களுக்கு சேவை செய்ய நமக்கு கிடைத்த வாய்ப்பு என்பதே ஸ்டாலின் தங்களது கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தரும் ஒரே அட்வைஸ். பேரூராட்சி, மாமன்ற உறுப்பினர்கள் பயிற்சி விழாவிலும் அவர்களுக்கும் அதையேதான் சொன்னார். பதவிகளை பல ஆண்டுகளாக பெருமைகளாக பார்த்து வரும் ஆட்சியாளர்கள் இடையே, பதவி ஒரு பொறுப்பு என்பதை எப்போதும் மனதில் வைத்து, அதையே செயல்படுத்தியும் வந்துள்ளது திமுக அரசின் ஒரு வருட ஆட்சி. அதே நேரத்தில் அமைச்சர்கள் மீது எதிர்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுக்கு முதல்வரின் பதில் என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்