' கர்நாடக சல்யூட் அண்ணாமலை சொந்த மாவட்டத்தை தாண்ட முடியாது' - திமுக அமைச்சர் எச்சரிக்கை
உங்களது மிரட்டல்களுக்கு திமுக அஞ்சாது. கர்நாடகத்தில் உள்ள அரசுக்கு சல்யூட் அடிக்கும் அண்ணாமலை சொந்த ஊரான கரூர் மாவட்டத்தையே தாண்ட முடியாது" என எம்.ஆர்.கே. காட்டமாக தெரிவித்துள்ளார்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கடைவீதியில் திமுக அரசின் ஒரு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தமிழ்நாட்டில் பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம், நகைக் கடன் தள்ளுபடி, நெகிழி பயன்பாட்டை குறைக்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தொடரும் 4 ஆண்டுகளும் மக்களுக்கு பயன்பெறும் வகையில் தமிழக அரசின் சாதனை திட்டங்கள் தொடரும் என்றார்.
72 மணி நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை எனில் கோட்டையை முற்றுகையிடுவோம் என்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பேச்சு தொடர்பாகவும் விமர்சனம் செய்தார். எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். இது திமுக ஆட்சி. சொன்னதை செய்து காட்டியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உங்களது மிரட்டல்களுக்கு திமுக அஞ்சாது. கர்நாடகத்தில் உள்ள அரசுக்கு சல்யூட் அடிக்கும் அண்ணாமலை சொந்த ஊரான கரூர் மாவட்டத்தையே தாண்ட முடியாது என காட்டமாக தெரிவித்தார். மேலும், கர்நாடகாவில் இருந்து காவிரி நீரைத் தமிழகத்துக்கு கொடுக்கக் கூடாது என பேசிய அண்ணாமலை, தற்போது தமிழக பாஜக தலைவர். இவர் தமிழகத்துக்கு என்ன செய்யப் போகிறார். மதக்கலவரத்தை உருவாக்க பார்க்கிறார் அண்ணாமலை. இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி. சவாலுக்கு பயப்பட மாட்டோம் என்று பேசினார்.
மேலும் இதற்கு முன்னதாக குறிஞ்சிப்படியில் பேசியதாவது;-
தமிழக முதலமைச்சர் 24 மணி நேரமும் ஓயாமல் தொடர்ந்து உழைத்து வருகிறார். அவரை பார்த்து அமைச்சர்களும் உழைக்க வேண்டிய நிலை உள்ளது. தமிழக அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பான்மையானவற்றை இந்த ஓராண்டில் நிறைவேற்றி உள்ளோம். நமது தொகுதியில் 165 மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கரும்பு விலை, நெல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் அறிவித்து, அதுவும் நான் வேளாண்துறை அமைச்சராக இருந்து அதனை படித்தது உங்களுக்கெல்லாம் பெருமை.
5-வது முறையாக என்னை தொகுதியில் வெற்றி பெற செய்த குறிஞ்சிப்பாடி தொகுதி மக்களை நான் என்றும் மறக்கமாட்டேன். உங்களுக்கு என்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன். தமிழக அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் இங்கு நிறைவேற்ற பாடுபடுவேன். விவசாயத்திற்கு என அறிவிக்கப்பட்ட தனி பட்ஜெட் குழந்தையாக இருந்து தற்போது, தவழ்ந்து விரைவில் எழுந்து நடக்க உள்ளது. அப்போது விவசாயிகள் வாழ்வில் வசந்தம் வீசும், விவசாயிகள் தலைநிமிர்ந்து நடக்க கூடிய நிலை ஏற்படும். குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் விரைவில் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்