O.Paneerselvam : பண்ணை வீட்டில் 2 நாட்கள் ஆலோசனை... முக்கிய முடிவு எடுக்கும் ஓபிஎஸ்
ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

அதிமுக
அதிமுகவில் இரட்டை தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்னை வானகரத்தில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பொதுக்குழுவுக்கு எதிராக, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவரின் ஆதராவாளர்களை கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார். தனக்கு ஆதரவாக இருக்கும் நிர்வாகிகளையும் எடப்பாடி பழனிசாமி நியமனம் செய்தார்.
ஓபிஎஸ் தரப்பில் புதிய நிர்வாகிகள்
இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனியாக மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்தார். ஒன்றிய செயலாளர்களும் நியமிக்கப்பட்டனர். அதன்படி தமிழகம் முழுவதும் தங்கள் ஆதரவாளர்களை பொறுப்பாளர்களாக ஓபிஎஸ் நியமித்துள்ளார். கட்சியில் 75 மாவட்டங்கள் இருந்தன. அதில் சில மாவட்டங்களை பிரித்து அமைப்பு ரீதியாக 88 மாவட்டங்களை உருவாக்கி அதற்கு மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்தார். இதுமட்டுமின்றி தலைமை கழக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.
நாளை கூடுகிறது
இதனை தொடர்ந்து நியமிக்கப்பட்ட புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் நாளை கூட்ட உள்ளார். சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் காலை 10 மணியளவில் கூட்டம் நடைபெற உள்ளது. நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பின்பு, செய்தியாளர்களை சந்திக்கும் ஓபிஎஸ், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை பற்றிய அறிவிப்புகளை தெரிவிக்க உள்ளார்.‘
இரண்டு நாளாக ஆலோசனை
கடந்த 2 நாட்களாக தேனி மாவட்ட பெரியகுளம் பண்ணை வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கும் நிர்வாகிகளை தன்வசப்படுத்தும் முயற்சியில் ஓபிஎஸ் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், கொங்கு மண்டலத்தில் இருக்கு இபிஎஸ் ஆதரவாளர்கள் பலர், ஓ.பன்னீர்செல்வத்தை நேற்று சந்தித்தனர். 50க்கும் மேற்பட்டோர் சந்தித்து தங்கள் ஆதரவுகளை தெரிவித்தனர். இதுமட்டுமின்றி இம்மாதத்தில் இறுதியில் பொதுக்குழுவையும் கூட்ட ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து தேனியில் இருந்து சென்னை திரும்பும் ஓபிஎஸ் நாளை நடைபெற உள்ள கூட்டம் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க
Jallikattu 2023: ஜல்லிக்கட்டு போட்டிக்கு புதிய விதிமுறைகளா? - அமைச்சர் ஆலோசனையில் முக்கிய முடிவு!
Jallikattu: ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்க்க உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு...!





















