Seeman-Periyar: பெரியாருக்கு எதிராக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுங்க.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Seeman-Periyar Issue: பெரியாருக்கு எதிராக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர் மனு அளித்த நிலையில், நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவிக்கும் கருத்துகள், சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சீமானுக்கு எதிராக மனு:
பெரியாருக்கு எதிராக பேசிய சீமானுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையானது , இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பெரியாருக்கு எதிராக அவதூறு கருத்தை தெரிவித்த சீமான் மீது , மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும், சீமான் மீது குற்றவியல் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுதாரர் தெரிவித்திருந்தார்.
நீதிமன்றம் உத்தரவு:
இதையடுத்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவிக்கும் கருத்துகள், சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், சீமான் தொடர்பான மனுதாரரின் புகாரை ஏற்று நடவடிக்கை எடுக்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இது தொடர்பாக , விரைந்து நடவடிக்கை எடுத்து, அதன் அறிக்கையை வரும் ஜனவரி 20ல் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீமான் சர்ச்சை பேச்சு:
பெரியார் குறித்து சீமான் பேசியதாவது ,” இதற்கு முன்பு பெரியார் பற்றி தெளிவில்லாமல் ஆதரவு தெரிவித்தேன். இப்போது தெளிவாகிவிட்டேன்; வள்ளலாரைவிட பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்துவிட்டார்? திராவிடம் என கூறுபவர்கள் எல்லாம் திருடர்கள்.
பெரியார் பேசினார் என்றால் பரவாயில்லை; பெரியார்தான் எல்லாம் செய்தார் என்றால் எப்படி? மறைமலை அடிகள், வஉசி, இரட்டைமலை சீனிவாசன் எல்லாம் இல்லையா?; 2008-ல் என் தலைவரை சந்திக்கும்வரை நானும் இந்தக் கூட்டத்தில்தான் ஒருவனாக இருந்தேன். அவரைச் சந்தித்த பிறகுதான் தமிழ் தேசிய அரசியலை முன்னெடுத்து வருகிறேன்
தமிழ் மொழியை மிகவும் மோசமாகப் பேசியவர் பெரியார். எந்த நிலையில் தமிழ் மொழிக்காக நின்றிருக்கிறார். மொழியை விட்டுக்கொடுத்து சமூக சீர்திருத்தம் என என்ன இருக்கிறது?
பெரியாரின் நூல்களை அரசுடைமையாக்கிவிட்டு என்னிடம் ஆதாரம் கேளுங்கள். பெரியார் பெரிய செல்வந்தர். சொத்துக்கு வாரிசு தேடி 72 வயதில் 26 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
பெரியார் எனக்கு வேண்டாம்; திராவிடம் பேசுபவர்களை ஒழிப்பதுதான் எனது கொள்கை' என சீமான் பேசியிருந்தத நிலையில், தற்போது சீமான் பேசியதற்கு மனு கொடுக்கப்பட்ட நிலையில், வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.