Seeman: "கூமுட்டை.. Very Wrong Bro" விஜய்யை தாறுமாறாக தாக்கிப் பேசிய சீமான்!
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் கொள்கைகளை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மிக கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கி, விக்கிரவாண்டியில் கடந்த மாதம் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் தனது கொள்கைகள், செயல்திட்டங்கள் குறித்து அறிவித்தார். அப்போது, திராவிடமும். தமிழ் தேசியமும் எனது இரு கண்கள் என்று கூறினார். ஆரம்ப காலம் முதலே விஜய்யை ஆதரித்து வந்த சீமானுக்கு, விஜய் திராவிடத்தை ஆதரிப்பாக கூறியது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றா?
இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கூட்டத்தில் சீமான் விஜய்யை மிக கடுமையாகத் தாக்கி பேசினார். அப்போது, அவர் பேசியதாவது, “ என் இன பாலகன் இறந்துவிட்டான் எனத் துடித்து அழுவது தமிழ் தேசியம். என் தங்கை இசைப்பிரியா கொல்லப்பட்டு கிடந்தபோது துடித்து அழுதது தமிழ் தேசியம். தூர இருந்து ரசித்தது, சிரித்தது திராவிடம். இரண்டும் ஒன்றா? உடம்பிலே நெருப்பைக் கொட்டி வெந்தது வீரத்தமிழ் மகன் முத்துக்குமார். அது தமிழ் தேசிய பெருநெருப்பு.
கடற்கரையிலே தலைக்கு ஒரு குளிரூட்டி. காலுக்கு ஒரு குளிரூட்டி. தலைமாட்டிலே மனைவி. கால்மாட்டிலே துணைவி என்று போலி உண்ணாவிரத நாடகம் நடத்துவது திராவிடம். இரண்டும் ஒன்றா? காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் வெல்ல வேண்டும் என்று தமிழர்களிடம் ஓட்டுப்பிச்சை கேட்பது திராவிடம். இரண்டும் ஒன்றா? தண்ணீர் தர மறுக்கும் அவனுக்கு ஒரு சீட்டும் இல்லை. உன்னுடன் தேர்தல் கூட்டும் இல்லை என்று சொல் என சொல்லுவது தமிழ் தேசியம். இரண்டும் ஒன்றா? அடிப்படையே தவறு.
வெரி ராங் ப்ரோ:
உன் கொள்கைகள் என்ன? கூமுட்டை. அதுவும் அழுகிய கூமுட்டை. ஒன்னு சாலையில் அந்த பக்கம் நில்லு. இல்ல இந்த பக்கம் நில்லு. நீ நடுவுல நின்னா லாரி அடிச்சு செத்துப் போயிடுவ. விடுதலைப் போராட்டத்தில் மாவீரன் சுபாஷ்சந்திரபோஸ் பக்கம் நில்லு. இல்ல மவுண்ட் பேட்டன் பக்கம் நில்லு. நான் நடுநிலை என்கிறாய். இது நடுநிலை அல்ல. மிகவும் கொடு நிலை.
வாட் ப்ரோ. இட்ஸ் வெரி ராங் ப்ரோ. வந்தாச்சு. நான் என் கருவிலே என் எதிரி யார்? என்று தீர்மானித்துவிட்டு பிறந்தவன். எவன் என் இனப்பகைவன் என்று முடிவெடுத்துவிட்டு வந்தவன்.”
இவ்வாறு அவர் பேசினார்.
தொடக்க காலம் முதலே விஜய்க்கு ஆதரவாக பேசி வந்த சீமான் தற்போது அவரை மிக கடுமையாக தாக்கிப் பேசி வருவது விஜய்க்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சியையும், தி.மு.க. கூட்டணியில் உள்ள சில கட்சிகளையும் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும் விதமாக விஜய் திராவிடமும், தமிழ் தேசியமும் தனது இரு கண்கள் என்று கூறியிருந்தார்.
ஆனால், தி.மு.க.வையும். திராவிடத்தையும் மிக கடுமையாக எதிர்க்கும் சீமான் விஜய்யின் இந்த கோட்பாட்டை மிக கடுமையாக எதிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.