MRK.Panneerselvam : ”அமைச்சருக்கு Go Back சொன்ன தருமபுரி திமுக” 2026-லும் ஜெயிக்க வேண்டாமா..?
"அனைவரையும் அனுசரித்துச் செல்பவராகவும், யார் உதவி என்று கேட்டாலும் தயங்காமல் செய்யும் பண்பு கொண்டவராகவும், அறியப்படும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கு தரும்புரியில் இப்படி ஒரு சோதனை”

திமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். கடலூர் மாவட்டத்தின் முடிசூடா மன்னனாக இருந்து வரும் அவருக்கு எதிராக போர்கொடி தூக்கியிருக்கிறது தருமபுரி திமுக.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் ஒரு திமுக எம்.எல்.ஏ கூட வெற்றிப் பெறாத நிலையில், அந்த மாவட்டத்திற்கு அமைச்சருக்கான பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது. அதனால், வன்னியர் சமூக மக்கள் அதிகம் வாழும் அந்த மாவட்டத்திற்கு, வன்னியர் சமூகத்தை சேர்ந்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தையே பொறுப்பு அமைச்சர் ஆக்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தொடக்கம் அமர்க்களம் ; போக, போக ரணகளம்
பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகு தருமபுரி சென்ற எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால், போக, போக வரவேற்புக்கு பதில் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பத் தொடங்கின. அதற்கு காரணம், தருமபுரி திமுக அமைப்புகளுக்குள் அவர் எடுத்த அதிரடி நடவடிக்கைகள்தான். தருமபுரி மாவட்டத்தின் கள நிலவரம் தெரியாமல் அமைச்சர் இப்படியான முடிவுகளை எடுக்கிறார் என்று அவரால் அதிருப்திக்கு உள்ளானவர்கள் பேசத் தொடங்கினர்.
பொறுப்பு அமைச்சர் பன்னீர்செல்வமா? அல்லது அவரது PA தேவ் ஆனந்தா?
இதுமட்டுமின்றி, தருமபுரி மாவட்ட திமுகவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை காட்டிலும் அதிக தலையீடும், முடிவும் அவரது உதவியாளர் தேவ் ஆனந்த் என்பவராலேயே எடுக்கப்படுவதாகவும், உதவியாளர் எடுக்கும் முடிவுகளுக்கும் அவர் சொல்லும் நிபந்தனைகளுக்கும் நாங்கள் ஏன் கட்டுப்படவேண்டும்? என்ற பொறுமல் திமுக நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதோடு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பெயரை பயன்படுத்தி தருமபுரியில் தேவ் ஆனந்த் தனி அரசியல் ஆவர்தனம் செய்வதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
சந்தைக்கு வந்த சண்டை ; Go Back பதிவு போட்ட திமுகவினர்
இப்படி எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கும் அவரது உதவியாளர் தேவ் ஆனந்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து தருமபுரி மாவட்ட திமுகவில் பலர் பனிப்போர் நடத்தி வந்த நிலையில், திடீரென சிலர், முகநூலில் இவர்கள் இருவருக்கும் எதிராக பதிவு போடத் தொடங்கியுள்ளனர். எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கும் அவரது உதவியாளர் தேவ் ஆனந்தும் தருமபுரிக்கு வரக்கூடாது என்பதை குறிக்கும் விதமாக #GoBack என பதிவிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி, அமைச்சரும் அவரது உதவியாளரும் தருமபுரி மாவட்டத்திற்குள் வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். இது தருமபுரி திமுகவில் கலக்கத்தையும் அதிமுகவினர் இடையே மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பழனியப்பனை ஓரம் கட்ட முயற்சியா?
இந்நிலையில், தருமபுரி மாவட்ட மேற்கு மாவட்ட செயலாளராக இருக்கும், அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்த, முன்னாள் அமைச்சர் பழனியப்பனை MRK பன்னீர்செல்வம் தரப்பு ஓரங்கட்ட நினைப்பதாகவும், அவருக்கு உரிய முக்கியத்துவத்தை அவர்கள் கொடுப்பதில்லை என்றும் மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில், தருமபுரி திமுகவில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் அனைவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். ஆனால், பழனியப்பன் வேறு ஒரு சமூகத்தை சேர்ந்தவராக இருப்பதாலும் அவர் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்துள்ளதாலும் அவரின் பல கள செயல்பாடுகள் அங்கீகரிக்கப்படாமல் இருப்பதாகவும் பழனியப்பன் தரப்பு வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
ரிப்போர்ட் படி மாற்றம்?
சட்டப்பேரவை இந்த மாத இறுதியோடு முடிவடையவுள்ள நிலையில், திமுக அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் குறித்து விரிவான ரிப்போர்ட் உளவுத்துறை மற்றும் துறை அதிகாரிகளால் தயார் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, முதல்வரின் நேரடி பார்வையில் இருக்கும் தருமபுரி மாவட்ட அரசியல் நிலவரம் குறித்தும் ‘நோட்’ எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அமைச்சரவையிலும் தமிழக முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகள் அமைப்பிலும் பல்வேறு மாற்றங்கள் வரலாம் என்றும் அமைச்சர் இல்லாத மாவட்டங்களில் பொறுப்பு அமைச்சராக கூடுதல் பொறுப்புகளை வகிக்கும் அமைச்சர்களின் செயல்பாடுகளின் அடிப்படையிலும் மாற்றம் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2026ல் தருமபுரியில் திமுக வெல்லுமா?
கடந்த தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் திமுக தோல்வியடைந்த நிலையில், இந்த முறை அந்த மாவட்டத்தில் வெற்றிக் கனியை சுவைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்பார்க்கிறார். ஆனால், அங்கு திமுகவினர் இடையே நடைபெறும் கோஷ்டி பூசலும், உட்கட்சி குழப்பமும் திமுகவிற்கு தொடர்ந்து இறங்கு முகமாகவே உள்ளதாக கூறப்படுகிறது.
இப்போதே, இதனை உடனடியாக சரிசெய்யாவிட்டால், வரும் தேர்தலிலும் தருமபுரி மாவட்டம் திமுகவிற்கு தோல்வி முகமாகவே மாறிவிடும் என அஞ்சுகிறார்கள் உடன்பிறப்புகள்.
குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த அமைச்சரின் உதவியாளர்
இந்நிலையில், மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள், புகார்கள் குறித்து விளக்கம் கேட்க, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் உதவியாளரான தேவ் ஆனந்தை நமது அலுவலகம் சார்பில் தொடர்புகொண்டு பேசினோம்.
அதற்கு அவர் ‘தருமபுரி திமுகவில் பொறுப்பு கிடைக்காதவர்கள் அல்லது முக்கியத்துவம் பெற முடியாதவர்களே இதுபோன்ற தகவல்களை பரப்புவதாகவும், இதனையெல்லாம் விரைவில் சரிக்கட்டிவிடுவோம் எனவும் தெரிவித்துள்ளார். அதோடு, சட்டப்பேரவை நடைபெற்றுக்கொண்டிருப்பதால், அமைச்சர் இங்குதானே இருந்தாகவேண்டும்? என்றும் கேள்வி எழுப்பிய தேவ் ஆனந்த், விரைவில் மாவட்டத்திற்கு சென்று இப்படியான குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் தீர்வு காணுவார் என்று குறிப்பிட்டுள்ளார்’. தேர்தலை நோக்கி செல்வதால் இப்படியான சின்ன, சின்ன விஷயங்கள் நடக்கத்தான் செய்யும் என்றும் அதனையெல்லாம் சமாளிப்போம் என்றும் தேவ் ஆனந்த் கூறியுள்ளார்.
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை மீறி, பொறுப்பு அமைச்சர் போல நீங்கள் செயல்படுவதாக கூறுவது ஏன்? என கேட்டதற்கு, ‘அப்படிதான் சொல்கிறார்கள். அங்கு நான் இருப்பதால் அப்படி சொல்கிறார்கள். அதை என்னிடமே கூட சொல்கிறார்கள். அதற்கு காரணம், அவர்களுக்கு ஒரு விஷயம் கிடைக்கவில்லையே என்பதற்காக இதை சொல்கிறார்கள் என்றார்.
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் பதில் என்ன ?
மேற்குறிப்பிட்டுள்ள சர்ச்சைகள், அவரின் உதவியாளரின் செயல்பாடுகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தெல்லாம் பதில் கேட்பதற்கு, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டபோது, நமது அழைப்பை எடுத்து, ”தான் ஒரு மீட்டிங்கில் இருப்பதாகவும், தருமபுரி மாவட்ட விஷயங்கள் குறித்து பின்னர் பேசலாம் என்றும் கூறிவிட்டு” வைத்துவிட்டார்.
கடலூரின் மன்னனுக்கு தகடூர் கொடுக்கும் சோதனை
கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை அனைவரையும் அனுசரித்துச் செல்பவராகவும், யார் உதவி என்று கேட்டு வந்தாலும் தயங்காமல் செய்யும் பண்பு கொண்டவராகவும், கடலூர் என்றாலே எம்.ஆர்.கே. என்று அறியப்படும் பாரம்பரியத்திற்கு சொந்தக்காரரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கு தரும்புரியில் இப்படி ஒரு சோதனை ஏற்பட்டிருக்கிறது.
இதற்கான காரணத்தை உனடியாக கண்டறிந்து அவர் களத்தில் இறங்காவிட்டால், அது அவருக்கே இறங்கு முகமாக மாறிப்போய்விடும் சூழல் உருவாகியிருக்கிறது.





















