தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக் கூடாது: ராமதாஸின் சூசக பேச்சு! 2026 கூட்டணி குறித்தும் பரபரப்பு தகவல்!
பூம்புகாரில் நடைபெற்ற வன்னியர் மகளிர் மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் தந்தையை மிஞ்சும் தனயன் இருக்க கூடாது என பேசியுள்ளது, அன்புமணி ராம்தாஸுக்கான அறிவுரையாக பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

தமிழக அரசு சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும், 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக மீண்டும் போராடுவதற்கு தயார், வன்னிய மகளிர் பெருவிழாவில் டாக்டர் ராமதாஸ் பேச்சு, 2026 ஆம் ஆண்டு நாம் அமைக்கும் கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும் என்று தொண்டர்களிடம் சூளுரைத்துள்ளார்.
பூம்புகாரில் நடைபெற்ற வன்னியர் மகளிர் மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் உரையாற்றினார். அப்போது தந்தையை மிஞ்சும் தனயன் இருக்க கூடாது என சோழ மன்னரில் வரலாறு மற்றும் பிரதமர் மோடியின் தமிழக பயணத்தை குறிப்பிட்டு பேசினார். இதன் மூலம் தன்னை அன்புமணி ராமதாஸ் மிஞ்ச கூடாது என்பதை மறைமுகமாக கூறியதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

வன்னியர் சங்க மகளிர் மாநில மாநாடு
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில், வன்னியர் சங்கம் சார்பில் வன்னிய மகளிர் பெருவிழா மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பெண்கள், நிர்வாகிகள் தொண்டர்கள் என பங்கேற்றனர். நிகழ்ச்சியில் வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பூ.தா அருள்மொழி, பா.ம.க.கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, பாமக நிறுவனர் ராமதாஸின் மனைவி சரஸ்வதி அம்மாள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ராமதாஸ் பேச்சு
முன்னதாக பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து மாநாட்டில் பேசிய டாக்டர் ராமதாஸ் கூறுகையில்; பெண்கள் இல்லாமல் உலகம் இல்லை, ஆக்கம் சக்தி, காக்கும் சக்தி, அழிக்கும் சக்தி என மூன்று சக்திகளாக பெண்கள் உள்ளனர். மாவீரன் குருவை என் மூத்த பிள்ளை என்று சொல்லுவேன். அவர் இருந்தால் எப்படி சிறப்பாக நடத்துவாரோ அப்படி மாவட்டச் செயலாளர்கள் மாநாட்டை நடத்தியுள்ளனர். காவல்துறையினர் சில வண்டிகளை தடுத்து நிறுத்தி மக்களை வரவிடாமல் செய்து விட்டார்கள், அப்படி செய்திருக்கக் கூடாது, மற்றபடி நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள் அவர்களுக்கு நன்றி. பெண்களுக்கு பெருமை சேர்க்கும் மாநாடு இது. பெண்கள் கல்வி தொழில் இவற்றில் முன்னேறி வருகின்றனர். படிப்பில் முதன்மையாக வருகிறார்கள்.
அன்புமணிக்கு சூசகமாக அட்வைஸ்
கங்கைகொண்ட சோழபுரம் கட்டிய ராஜேந்திர சோழன் குறித்து நமது பாரத பிரதமர் என்ன பேசினார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக் கூடாது என்பதற்காக தஞ்சை பெரிய கோயிலையும், கங்கைகொண்ட சோழபுரம் கோயிலையும் கட்டிய ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் வரலாற்றை எடுத்துக் கூறினார்கள்.

10.5% இட ஒதுக்கீட்டுக்காக மீண்டும் ஒரு போராட்டம்
சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சருக்கு வேண்டுகோள் வைக்கிறேன். இதை செய்ய ஏன் முதலமைச்சருக்கு தயக்கம்? இதனை செய்து முதலமைச்சர் சரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டும். 10.5% இட ஒதுக்கீட்டுக்காக மீண்டும் ஒரு போராட்டம் செய்தால் தமிழ்நாடு தாங்காது. மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணர்வோம்.

போதைப்பொருள் பெருக்கம்
உங்கள் ஊரில் மது, கஞ்சா விற்பனை செய்தால் நீங்கள் பெரிய போராட்டத்தில் ஈடுபட வேண்டும் அதை சிறிய பகுதியாக இருந்தாலும் நானே நேரில் வந்து போராடுகிறேன். மது கஞ்சாவை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும். ஆண்கள் பின்னால் தயங்கி தயங்கி முன்னேறாமல் இருப்பதற்கு கஞ்சா தான் காரணம். கஞ்சா விற்பவர்களை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும், காவல்துறையும் கஞ்சா விற்பனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2026 -ஆம் ஆண்டு நாம் பங்குபெறும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும், நான் சொல்வது தான் நடக்கும் என பேசினார்.






















