Local body elections | மக்கள் எண்ணங்களை திமுக பிரதிபலிக்கவில்லை - தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்
இந்தியா முழுவதும் கல்வி கூடங்களில் மாணவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற கோட்பாடுகளை அனைவரும் சாதி, மத, பேதமின்றி அனைவரும் கடைபிடிக்க வேண்டும்
தஞ்சையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில், மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளரை அறிமுகக்கூட்டம் மற்றும் தஞ்சை தெறஅகு மாவட்ட நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே. வாசன் தலைமை வகித்து, நிருபர்களிடம் கூறுகையில், எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தற்போது தான் மருத்துவர்களின் ஆலோசனையின்படி வெளியே வந்துள்ளேன். தமிழகத்தில் பல மாவட்டங்களில் தமாகாவினர் போட்டியிடுகின்றனர். எனவே தேர்தல் பிரசாரத்தில் பொதுமக்களிடம் முழுமையாக ஈடுபட முடியாது.
அதற்கு பதில் அந்தந்த பகுதிக்கு சென்று பத்திரிகையாளர்களை சந்தித்து, வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டப்படும். குறைந்த இடங்களிலேயே உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தமாகா கூட்டணியின் வெற்றிக்காக செல்ல இருக்கின்றேன். தஞ்சை மாநகராட்சியில் தமாகா கட்சியினர் ஏ்ற்கனவே, தேர்தல் பணியினை தொடங்கி விட்டார்கள். 5 வது வார்டுக்கு என்னுடைய மாநிலங்களவை எம்பி நிதியை கொடுப்பேன் என்பதை உறுதி கூறுகிறேன். தஞ்சை மாநகராட்சியில் 5 வது வேட்பாளர் கவிதாவின் வெற்றியை உறுதி செய்யும் வகையிலேயே வீயூகத்தின் அடிப்படையில், தங்களுடைய பணியினை தொடங்கி இருக்கின்றார்கள். தஞ்சை மாநகராட்சியில் அதிமுக ஆட்சியில் ஏராளமான பல்வேறு வளர்ச்சி பணிகளை பற்றி சொல்லி கொண்டே போகலாம்.
உள்ளாட்சியிலே நல்லாட்சி காணப்படும் என்ற நிலையில் வாக்காளர்கள், அதிமுக-தமாகா கூட்டணிக்கு ஆதரவு தருவார்கள் என்பதால், பெரும்பாலான இடங்களில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக நிலை தற்போது காணப்படுகிறது. திமுக ஆட்சி காலத்தில் மக்கள் எண்ணங்களை அவர்கள் பிரதிபலிக்கவில்லை. வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. காற்றாடி போல மக்களுக்கு வாக்குறுதிகளை கொடுத்து எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி, மக்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். இது தான் உண்மை நிலை.
ஹிஜாப் விவகாரத்தில், மத உணர்வுகளை எல்லோரும் மதிக்க வேண்டும். இதில் மாணவர்கள், கல்வி, நாட்டின் ஒற்றுமை, இந்தியா முழுவதும் கல்வி கூடங்களில் மாணவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற கோட்பாடுகளை அனைவரும் சாதி, மத, பேதமின்றி அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்பது தான் எங்களது வேண்டுகோள். இதில் கட்சி, அரசியலுக்கு எல்லாம், இடம் கொடுக்க கூடாது. இதில் சர்ச்சையும் இருக்க கூடாது, சண்டையும் இருக்க கூடாது. நீட் விவகாரத்தில் மாணவர்கள், பெற்றோர்களுடைய விருப்பு வெறுப்புகளை தாண்டி, அரசியல் விருப்பு வெறுப்பாக மாறியுள்ளது உண்மையிலேயே வேதனை அளிக்கிறது.
நீட் விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகளின் மாறுபட்ட கருத்துகளுக்கிடையே ஒரு இறுதியான முடிவு எட்டப்பட வேண்டும் என எல்லோரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்டமன்றத்திலே மசோதா தாக்கல் செய்யப்பட்டும், உச்சநீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்தும் இன்னும் தெளிவு கிடைக்கவில்லை. என்பது வேதனை அளிக்கிறது. இதில் முழுமையான தெளிவு கிடைக்க வேண்டும். தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பு தொடர்பாக தமாகாவுக்கு உடன்பாடு இல்லை.
இலங்கையின் பொருளாதர வளர்ச்சிக்கு இந்தியா 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது. இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை தொடந்து தாக்குவது, படகுகளை ஏலம் விடுவது என்பது போன்ற அத்துமீறல்களுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும். அராஜகங்கள் நிறுத்தப்பட வேண்டும். மொத்தத்தில் இலங்கை அரசு மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என்றார். முன்னதாக நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாநில தலைமை செயற்குழு றுப்பினர் சுரேஷ்மூப்பனார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் நடராஜன், சிதம்பரம், மாவட்ட பொருளாளர் தர்மலிங்கம், செய்தி தொடர்பாளர் கௌதமன், தஞ்சை மாநகராட்சி 5 வது வார்டு வேட்பாளர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொது செயலாளர் கொண்டல் சிவ முரளிசரன் வரவேற்றார், இறுதியில் மாவட்ட பொது செயலாளர் ராம்குமார் நன்றி கூறினார்.