Kumbakonam Mayor: கும்பகோணத்தின் முதல் மேயராகும் ஆட்டோ ஓட்டுநர் - கை கொடுத்த காங்கிரஸ்; அதிர்ச்சியில் திமுகவினர்
’’ஏற்கெனவே, கும்பகோணத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என நம்பியிருந்தோம் அது கிடைக்கவில்லை. மாவட்ட தலைநகரமாக மாற்றப்படலாம் என இருந்தோம் அதுவும் கிடைக்கவில்லை. அதே போல் மேயர் பதவியும் கிடைக்கவில்லை’’
கும்பகோணம் மாநகராட்சியில் மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு, திமுக தலைமை அறிவித்துள்ளது. இதனால் திமுகவினர் அதிர்ச்சியிலும், வேதனை அடைந்துள்ளனர். அதே நேரத்தில் மேயர் பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இதில் ஆட்டோ ஓட்டுநரான க.சரவணன் (42) என்பவரை மேயர் வேட்பாளராக கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்திலேயே இரண்டு மாநகராட்சிகள் கொண்ட மாவட்டம் தஞ்சாவூர். தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கும்பகோணம் மாநகராட்சியில் முதன் முறையாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
இதில் மொத்தமுள்ள 48 வார்டுகளில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 2, விடுதலை சிறுத்தைகள் கட்சி 1, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1, திமுக 38 வார்டுகளில் வெற்றி பெற்றனர். சுயேட்சையும், அதிமுகவினரும் தலா மூன்று இடங்களில் வெற்றி பெற்றனர். இந்நிலையில் கும்பகோணம் மாநகராட்சியில் முதல் மேயர் பதவியை பெற திமுகவினர் கடுமையாக முயற்சி செய்து வந்தனர். ஆனால் திமுக தலைமை இன்று கும்பகோணம் மாநகராட்சியில் மேயர் பதவியை கூட்டணி கட்சியில் அங்கம் வகித்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்து அறிவித்தது. கும்பகோணம் மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு நான்கு வார்டுகள் ஒதுக்கப்பட்டதில், இரண்டு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 17 ஆவது வார்டில் தேர்வு செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநரான சரவணனை மேயர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
கும்பகோணம் துக்காம்பாளையம் தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் சரவணன். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். தேவி என்கின்ற மனைவியும், மூன்று மகன்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக பொறுப்பு வகித்து வருகிறார். தற்போது வாடடை வீட்டில் வசித்து இவர், நகர துணைத் தலைவராக உள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி தொழில் நடத்தி வரும் சொற்ப வருமானத்தை வைத்து குடும்பத்தை இவர் முதன்முறையாக கும்பகோணம் மாநகராட்சியில் 17 வது வார்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஆட்டோ ஓட்டுநரான சரவணன் மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கும்பகோணத்தின் முதல் மேயராக திமுகவினர் தேர்வு செய்யப்படலாம் என நம்பிக்கையோடு இருந்த நிலையில், துணை மேயர் பதவிக்கு முன்னாள் நகர்மன்றத் தலைவர் சு.ப.தமிழழகனை அறிவித்துள்ளது. இது குறித்து திமுகவினர் கூறுகையில், மேயர் பதவி திமுகவுக்கு கிடைக்கும் என நம்பியிருந்தோம். ஆனால் கூட்டணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தலைமையும், தலைவரும் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். ஏற்கெனவே, கும்பகோணத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என நம்பியிருந்தோம் அது கிடைக்கவில்லை. மாவட்ட தலைநகரமாக மாற்றப்படலாம் என இருந்தோம் அதுவும் கிடைக்கவில்லை. அதே போல் மேயர் பதவியும் கிடைக்கவில்லை. அதே போல, இதையும் எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.
கடந்த 2006 ஆம் ஆண்டு திருவிடைமருதூர் எம்எல்ஏ வேட்பாளராக பாமகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட போது, முன்னாள் எம்எல்ஏவும், தற்போதைய எம்பியுமான செ.ராமலிங்கத்தின் ஆதரவாளர் ஒருவர் தனது சுண்டு விரலை வெட்டிக்கொண்டு திமுக தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அப்போது மாவட்ட செயலாளராக இருந்த கோ.சி.மணி தலைமையின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என கூறினார். அதை திமுகவினராகிய நாங்கள் அப்படியே ஏற்றுக் கொண்டோம். அதே போல் தான் இப்போதும் . ஆனால் இரண்டு உறுப்பினரை வைத்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு மேயர் பதவி வழங்கியுள்ளது வேதனையை அளிக்கின்றது. ஆனாலும் கட்சி தலைமையின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு செயல்படுவோம் என்றனர்.
சுப. தமிழகனுக்கு மேயர் பதவி கிடைக்கும் என நம்பிய திமுகவினர் போஸ்டர்களை அடித்து தயாராக இருந்துள்ளனர். இந்த நிலையில் மேயர் பொறுப்பு கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவது தெரிந்த நிலையில் சு..ப.தமிழகன் ஆதாரவாளர்கள் சாரங்கபாணி கோயில் தெற்கு வீதியில் உள்ள கட்சி அலுவலகம் முன் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் சமாதானம் செய்ததற்கு பிறகு கலைந்து சென்றனர். ராகுல்காந்தி சென்னை வருகைக்கு பிறகே கும்பகோணம் காங்கிரஸ் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அமைச்சர்கள் யாரும் இல்லாத காரணத்தால் கட்சித் தலைமையிடம் இது குறித்து யாராலும் பேச முடியவில்லை எனவும் புலம்புகின்றனர் உடன்பிறப்புகள்.