(Source: ECI/ABP News/ABP Majha)
ஆளும் மாநிலங்களில் மட்டும் சோதனை; பாஜக தோல்விக்கு உதாரணம் - கே.எஸ். அழகிரி விமர்சனம்
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறோம். யாரையும் அரசியலுக்கு வரக்கூடாது என சொல்வதற்கு உரிமை கிடையாது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கட்சி சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரிக்கு நெல்லை மாநகர் மாவட்டம் மற்றும் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் பொழுது, "ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தொழிலாளர் அணி, விவசாய அணி, கொள்கைப்பரப்பு செயலாளர் அணி என்று பல்வேறு பிரிவுகள் உள்ளது. அதே போல பாஜகவினுடைய அணிகள் ஐடியும், ஈடியும் தான். எனவே கட்சி தலைமை என்ன சொல்கிறதோ அதை அவர்கள் செய்கிறார்கள். வருமானவரித்துறை செய்வது பொறுப்பற்ற செயல். தமிழகம், ராஜஸ்தான், கேரளா போன்ற எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் வருமானவரித்துறை சோதனை செய்வது என்பது பாஜகவின் அரசாட்சி தோல்வியடைந்திருக்கிறது என்பதற்கு உதாரணம். இந்தியாவில் இருக்கும் வேறு மாநிலங்களுக்கு இவர்கள் செல்வதே கிடையாது. எதிர்க்கட்சிகள் இருக்கிற இடங்களுக்கு தான் செல்கின்றனர். அப்படி தான் போகிறீர்கள் எதையாவது கண்டுபிடித்தீர்களா? செந்தில் பாலாஜியை சிறையில் வைத்துள்ளனர். அவர் வீட்டில் இருந்து என்ன எடுக்கப்பட்டது? கணக்கில் வராத சொத்து என்று எதையாவது கைப்பற்றுனீர்களா? ஆனால் ஒரு அமைச்சரை சிறையில் வைத்துள்ளீர்கள்.
அதே போல டெல்லியில் கெஜ்ரிவாலை விசாரணைக்கு அழைத்த போது அவர் வர மாட்டேன் என்று சொல்லிவிட்டார். காரணம் இந்தியாவில் சிறப்பாக ஆட்சி செய்யும் மாநிலங்களில் டெல்லியும் ஒன்று. ஆனால் உங்கள் முதலமைச்சர் யாரையும் நீங்கள் விசாரணைக்கு அழைப்பது இல்லை. அப்பட்டமாக வெளிப்படையாக பொதுமக்களுக்கு தெரிகிறது. தமிழகத்தில் இந்திய கூட்டணியை திராவிட முன்னேற்ற கழகம் வலிமையாக நடைமுறைப்படுத்துகிறது என்பதற்காக திமுகவிற்கு தொந்தரவு கொடுக்க இந்த காரியங்களை செய்கின்றனர். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர்வதற்கு தமிழக அரசு ஆளுநருக்கு ஒரு கோப்பே அனுப்பினார்கள். ஆனால் இன்னும் கையெழுத்திடவில்லை. அதிமுகவினர் மீது உள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க கூட ஆளுநர் தயாராக இல்லை.
நீட் தேர்வுக்கு படிப்பதனால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பது உலகத்துக்கே தெரியும். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிப்பவர்களுக்கு மட்டும்தான் நீட் பயன்படும். மெட்ரிக்குலெக்ஷன் மற்றும் மாநில அரசு பாடத்திட்டங்களில் படிப்பவர்களுக்கு நீட் எந்த வகையிலும் பயன் தராது. நீட் தேர்வு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு வரப்பிரசாதமாகவும், அவர்கள் பணத்தை வாரி குவிப்பதற்கு உதவிகரமாக அமைகிறது. இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது என்பதை பார்க்க வேண்டும் ? வாய்க்கு வந்தபடி சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சரியில்லை என சொல்லக்கூடாது. சாதி உணர்வு என்பதும் சாதிய ரீதியான பிரச்சினை என்பதும் தவறானவர்களால் வழிநடத்துபவர்களால் செய்யக் கூடியது. உரிமையை கேட்பது என்பது வேறு, சுயமரியாதையோடு வாழ்வது என்பது வேறு ? உரிமையை கேட்கிறோம் சுயமரியாதையை கேட்கிறோம் என ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொள்வது எந்த சமூகத்தினராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. சாதியின் பெயரைச் சொல்லி சண்டையில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கிறோம். ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயல். அது நீடிக்காது. நாட்டில் பல முக்கியமான பிரச்சனைகள் உள்ளது. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறோம். யாரையும் அரசியலுக்கு வரக்கூடாது என சொல்வதற்கு உரிமை கிடையாது. வரட்டும் பார்ப்போம். நடிகர் ரஜினி அரசியலுக்கு வருகிறார் வருகிறார் என சொல்லப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டது. அதற்கான ஆயத்த கூட்டங்களும் நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.