(Source: ECI/ABP News/ABP Majha)
"அவர் புலியின் மகன்; உத்தவ் தாக்கரே எல்லா தேர்தல்களிலும் வெல்வார்" - உறுதி கூறிய கெஜ்ரிவால்!
"அவரது கட்சியின் பெயர் மற்றும் சின்னம் திருடப்பட்டது. அவருக்கு நீதி கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் வரவிருக்கும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறுவார்", என்றார்.
உண்மையான சிவசேனா கட்சி ஷிண்டேயுடையது என்று தேர்தல் ஆணையத்தின் முடிவு தாக்கரேவிற்கு எதிராக வந்த சில நாட்களுக்குப் பிறகு தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெள்ளிக்கிழமை மும்பையில் சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரேயைச் சந்தித்தார். கெஜ்ரிவாலுடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உடனிருந்தார்.
எதிராக வந்த தேர்தல் ஆணைய தீர்ப்பு
பால் தாக்கரே மறைவுக்கு பின்னர் கட்சியை நடத்தி வந்த அவரது மகன் உத்தவ் தாக்கரேயிடம் இருந்து, அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஏக்நாத் ஷிண்டே, 40 எம்.எல்.ஏ.க்களுடன் பிரிந்து சென்று ஆட்சியைக் கவிழ்த்தார். இந்நிலையில் ஷிண்டே கடந்த ஆண்டு ஜூன் மாதம் பா.ஜ.க.வுடன் கை கோர்த்து புதிய ஆட்சியை அமைத்தார். இதனால் கட்சி இரண்டாக மாறிய பின்பு உண்மையான சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரேயினுடையதா, ஏக்நாத் ஷிண்டேயினுடையதா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டேயினுடையதுதான் உண்மையான சிவசேனா கட்சி என்று கடந்த வாரம் தேர்தல் கமிஷன் அறிவித்ததோடு சிவசேனாவின் வில்-அம்பு சின்னமும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு வழங்கப்பட்டது. இது உத்தவ் தாக்கரே அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வரும் ஆன அரவிந்த் கெஜ்ரிவால் அவரை சந்தித்துள்ளார். "நாங்கள் நீண்ட நாட்களாக சந்திக்க விரும்பினோம். ஏன் சந்திக்க விரும்பினோம் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. நாடு முழுவதும் உள்ள பல மூத்த தலைவர்கள் என்னை சந்திக்க சமீபத்தில் தொடர்பு கொள்கிறார்கள்," என்று உத்தவ் தாக்கரே கூறினார்.
பாராட்டிய கெஜ்ரிவால்
கொரோனா தொற்றுநோய்களின் போது முதலமைச்சராக "குறிப்பிடத்தக்க பணி" செய்ததற்க்காக உத்தவ் தாக்கரேவைப் பாராட்டிய டெல்லி முதல்வர், "டெல்லியிலிருந்து நாங்கள் மும்பை மற்றும் மகாராஷ்டிராவைப் பார்த்து நிறைய கற்றுக்கொண்டோம் என்று கூறுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. தொற்றுநோயின் போது அவர்களின் (உத்தவ்) அரசாங்கத்தால் பல நல்ல நடைமுறைகள் தொடங்கப்பட்டன, அதை நாங்கள் பின்பற்றினோம். இப்போது அவரை நேரில் சந்திக்க விரும்பினேன். இன்று, அவரை, அவரது குடும்பத்தினர், ஆதித்யாவை சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. தற்போது நாட்டில் நிலவும் சூழல் உட்பட பல விஷயங்களை நாங்கள் ஒருவருக்கொருவர் விவாதித்தோம்," என்று கூறினார்.
பகவந்த் மான்
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், இரு மாநிலங்களுக்கிடையிலான உறவை பற்றி பேசினார். அப்போது, பகத் சிங் பஞ்சாப்பைச் சேர்ந்தவர், ராஜ்குரு புனேவைச் சேர்ந்தவர் என்று இருவரையும் பற்றி பேசினார். "பல தியாகங்களுக்குப் பிறகு இந்த சுதந்திரம் கிடைத்துள்ளது. அதை இழக்கக் கூடாது. நமது சுதந்திரத்தைப் பேணுவது நமது கடமை", என்றார். மேலும் பாஜக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்று கூறிய கெஜ்ரிவால் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், க்ரோனிக் கேபிடலிசம் போன்ற பல பிரச்சனைகளை எழுப்பினார்.
AAP national convener and Delhi CM Arvind Kejriwal, Punjab CM Bhagwant Mann and party MP Raghav Chadha met Uddhav Thackeray in Mumbai today. pic.twitter.com/c2TUOHiRyz
— ANI (@ANI) February 24, 2023
அவர் புலியின் மகன்
"நாம் எப்பொழுதும் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்ள வேண்டும். நம் நாட்டிற்குள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு உள்ளது. நாங்கள் ஒரு பயனுள்ள விவாதம் செய்தோம் மற்றும் தீவிரமான பிரச்சனைகளை விவாதித்தோம்," என்று கெர்ஜிவால் கூறினார். வரவிருக்கும் பிஎம்சி தேர்தல்கள் பற்றி பேசுகிறீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, கெஜ்ரிவால், "தேர்தல் பற்றி 24 மணிநேரமும் நினைக்கும் கட்சி ஒன்று மட்டுமே உள்ளது. நாங்கள் அதைச் செய்யவில்லை, நாங்கள் நாட்டைப் பற்றி சிந்திக்கிறோம். தேர்தல் வரும்போது, நாங்கள் அதுபற்றி விவாதிப்போம்", என்றார். சிவசேனா மீதான தேர்தல் ஆணையத்தின் முடிவிற்கு பதிலளித்த கெஜ்ரிவால், "உத்தவ் ஜியின் கட்சி திருடப்பட்டது. அவரது கட்சியின் பெயர் மற்றும் சின்னம் திருடப்பட்டது. ஆனால் நான் சொல்ல விரும்புவது எல்லாம், அவரது தந்தை ஒரு புலி, அவர் புலியின் மகன். அவருக்கு நீதி கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எனது கருத்துப்படி, அவர் வரவிருக்கும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறுவார்", என்றார்.