TVK Vijay: உசுருங்க போயிடுச்சு விஜய்.. பாட்டு பாடுனா போதுமா பனையூர் பண்ணையாரே? நண்பா, நண்பிகளை கவனிங்க
Karur Stampede TVK Vijay: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பொதுவெளியில் தற்போது வரை வாய் திறக்காதது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Karur Stampede TVK Vijay: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உண்மையான மக்களுக்கான தலைவராக நடந்து கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.
39 உயிர்களை பறித்த விஜயின் பரப்புரை:
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது பரப்புரையின் மூன்றாவது கட்டமாக, கரூரில் நேற்று இரவு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக தற்போது வரை, 10 குழந்தைகள் உட்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 21 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. முழு வீச்சில் செயல்பட்டுள்ள தமிழ்நாடு அரசு, சம்பவம் தொடர்பாக விசாரிக்க விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. இரவோடு இரவாக கரூர் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவர்களது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடும் அறிவித்துள்ளார்.
தனி விமானத்தில் பறந்த விஜய்
பரப்புரையை முடித்துக் கொண்டு விஜய் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, கரூர் துயரம் தொடர்பான செய்திகள் வெளியாக தொடங்கிவிட்டன. இதனால், விஜய் நேரடியாக மருத்துவமனைக்கு வந்து, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த சில மணி நேரங்களுக்கு எந்தவித கருத்தையும் கூட கூறாமல், தனது திட்டப்படி சாலை மார்க்கமாக திருச்சி சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்து பனையூரில் உள்ள வீட்டிற்கு சென்றார். பின்னர் சாவகாசமாக ட்விட்டரில் உயிரிழந்தவர்களுக்காக இரங்கல் தெரிவித்தார். இது பொதுமக்களை மட்டுமின்றி, தவெக தொண்டர்களை கூட கொதிப்படையச் செய்தது.
பாட்டு பாடுனது நியாபகம் இருக்கா?
தேர்தல் பரப்புரையை தொடங்கியது முதலே, “”உங்க விஜய்.. உங்க விஜய்.. உயிரென வரன்னா” என்ற சொந்தக் குரலில் பாடிய பாடலை விளம்பரத்திற்காக விஜய் பயன்படுத்தி வருகிறார். அந்த வரிகள் உண்மை என்றால் இந்நேரம் நேரில் வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்திருக்க வேண்டாமா? பொதுவெளியில் பேசி தனது தரப்பு விளக்கத்தையாவது அளித்திருக்க வேண்டாமா? தன்னை பார்க்கவும், தனது பேச்சை கேட்கவும் கூடியவர்கள் தான் மருத்துவமனையில் பிணங்களாக கிடக்கின்றனர் என்ற எண்ணம் கொஞ்சம்கூடவா உங்களுக்கு ஏற்படவில்லை? நான் எதையும் வார்த்தையாய் சொல்லவில்லை, உங்களுக்காக தான் தேர்தல் களத்திற்கு வந்திருக்கிறேன் என பேசியது அனைத்தும் வெற்று வார்த்தைகள் தான் என்பதையே அவரது இந்த செயல்கள் வெளிச்சம்போட்டு காட்டுகின்றன.
வெறும் சுயநலம் மட்டுமா?
ரஜினி தனது அரசியல் பயண திட்டத்தை கைவிட்டபோது, என்னை நம்பி எனக்கு பின்னால் திரளும் கோடிக்கணக்கான ரசிகர்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை என குறிப்பிட்டார். அதேபோன்று தான், ரசிகர்கள் என் பின்னால் திரள்வதை விடுத்து அவர்களுக்கான வாழ்க்கையை வாழ வேண்டும் என அஜித்குமார் வலியுறுத்தினார். ஆனால், விஜயோ தனது ரசிகர் பலத்தை தமிழ்நாட்டின் மாற்றத்திற்காக தொண்டர்களாக பயன்படுத்தபோவதாக அரசியல் களத்திற்கு வந்தார். அப்படி உண்மையில் அவர்களின் பலத்தை அவர் மதித்து இருந்தால், ஒவ்வொரு பரப்புரையின் போதும் கொளுத்தும் வெயிலில் மணிக்கணக்கில் தொண்டர்களை காத்திருக்கச் செய்திருக்கமாட்டார். அதனை தவிர்த்து இருந்தாலே, நேற்றைய பெருந்துயரை தவிர்த்திருக்க முடியும். ஆனால், கூட்டத்தை காட்டுவது தனக்கான வலுவான பிம்பத்தை கட்டமைக்க உதவும் என விஜய் மனக்கணக்கு போட்டாரோ? என்ற சந்தேகத்தையும் அவரது தற்போதைய செயல்பாடுகள் தூண்டுகின்றன.
நண்பா, நண்பிகளை கவனிங்க பனையூர் பண்ணையாரே?
ஒவ்வொரு பரப்புரை மேடையிலும் எனது நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பீஸ் என கூக்குரலிட்டபடி விஜய் தனது பேச்சை தொடங்குவார். அந்த நண்பா,நண்பிகளின் கூட்டம் இப்போது தலைவனின்றி, மருத்துவமனை வாசலில் கண்ணீரில் மூழ்கி கிடக்கிறது. ஆனால், நீங்களோ வழக்கம்போல பனையூரில் அமர்ந்து கொண்டு, ட்வீட் மூலம் இரங்கல் தெரிவித்து இருக்கிறீர்கள். ஏற்கனவே வீக் எண்ட் பொலிடீசியன், பனையூர் பண்ணையார், பார்ட் டைம் பொலிடீசியன் என பல விமர்சனங்கள் விஜய் மீது உண்டு. தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் போன்ற நேரங்களில் தான் பொதுவெளிக்கு நீங்கள் வரவில்லை. உங்களுக்காக வந்த தொண்டர்கள் இறந்தாலும் கூட வீட்டிலேயே அமர்ந்து இருப்பது, உங்களது பண்ணையார் மனப்பான்மையை தான் பட்டவர்த்தனமாக்குகிறது. தமிழ்நாட்டு அரசியலில் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என நினைத்தால் தாமதமின்றி, உடனடியாக முதலில் வெளியே வந்து வாயை திறங்கள் விஜய்.





















