மீண்டும் களத்தில் விஜயபாஸ்கர்... கரூர் அதிமுகவினர் உற்சாகம்!
சோர்ந்திருந்த அதிமுக நிர்வாகிகளுக்கு, அதிமுக மாவட்ட செயலாளர் எம். ஆர். விஜயபாஸ்கர் சூறாவளி பயணம் தற்போது கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கரூர் சட்டமன்ற தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு நான்கு தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்த அதிமுக அதன்பிறகு கரூர் மாவட்டத்தில் திமுக கோட்டையாக மாறி அதிமுக நிர்வாகிகள் சோர்ந்து போய் இருந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் இல்லம் மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அதில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி அதற்கு உரிய விளக்கங்களை கேட்டறிந்தனர். பின்னர், அவர்கள் வங்கிக் கணக்கையும் முடக்கினர்.
இதற்கு இரண்டு நாள் கழித்து கரூர் மாவட்டத்திற்கு வந்திருந்த முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் கரூர் 80 அடி சாலை அருகே உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு நிர்வாகிகளை சந்தித்துப் பேசிய பிறகு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த சோதனை நடைபெற்றதாகவும், எனது வங்கிக் கணக்கு முடக்கப் படவில்லை. எனக்கு கரூரிலும் , சென்னையிலும் சொந்த வீடுகூட இல்லை என பதில் அளித்தார்.
அதன் பிறகு அவர் சற்று அரசியல் நாட்டமில்லாமல் மன விரக்தியில் இருந்தார். அவர் இரண்டு நாட்களுக்கு முன் திடீரென மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தகவல் வெளியாகியது. இது குறித்து நாம் விசாரித்தபோது மாவட்ட ஆட்சித்தலைவரின் செயல்பாடு குறித்தும், சிறப்பாக பணியாற்றி வருவது குறித்தும், அவரை பாராட்டும் விதமாகவும், மரியாதை நிமித்தமாக சென்று அதிமுக மாவட்டச் செயலாளர் எம். ஆர். விஜயபாஸ்கர் சந்தித்தார் என தெரிவித்தனர்.
இந்த சந்திப்பு ஆளும் கட்சியின் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது முன்னாள் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் அவருடைய ஆதரவாளர் தொடங்கிய புதிய தொழில் கூடத்தை நேரில் சென்று வாழ்த்திய விஜயபாஸ்கர், தொழிலை தொடங்கி வைத்தார். அப்பகுதியில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் தாண்டிய நிலையில் கரூர் மாவட்டத்தில் அதிமுக படிப்படியாக அதன் நிர்வாகிகள் திமுக பக்கம் சாய்ந்தனர். தற்போது முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் கழக நிர்வாகிகளின் நிகழ்ச்சிக்கு சென்று வாழ்த்தும் தகவல் தற்போது அதிமுக நிர்வாகிகள் இடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் அதிமுக அவ்வளவுதான் இனி திமுகதான் என்ற நிலையில் தற்போது அதிமுக மாவட்ட செயலாளர் எம். ஆர். விஜயபாஸ்கர் நிர்வாகிகளின் இல்ல விசேஷத்திற்கு சென்று இருப்பது மற்ற அதிமுக நிர்வாகிகளும் புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. எனினும், தமிழக மின்சாரத் துறை அமைச்சரும் கரூர் மாவட்ட அதிமுக பொறுப்பாளருமான வி. செந்தில் பாலாஜி வரும் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து பகுதிகளும் திமுக வெற்றி இலக்கை அடைய வேண்டும். இதற்காக அனைத்து நிர்வாகிகளும் அயராது பாடுபட வேண்டும் என ஆலோசனை நடத்தி வருகிறார்.
கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது சோர்ந்திருந்த அதிமுக நிர்வாகிகளுக்கு, அதிமுக மாவட்ட செயலாளர் எம். ஆர். விஜயபாஸ்கர் சூறாவளி பயணம் தற்போது கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அதேபோல், தேர்தல் காலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக லைட் ஹவுஸ் கார்னர் பகுதியிலிருந்த அதிமுக 100அடி கொடியை அப்போது அகற்றினர். தொடர்ந்து 100 நாட்களாக அந்த கொடி பறக்க விடாத நிலையில் கடந்த ஒரு வார காலமாக மீண்டும் அதிமுக கொடி பறப்பதால் கரூரில் அதிமுக மீண்டும் தலை தூக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி உள்ளது.