அமைச்சர் அன்பில் மகேஷ் தனது 10ம் வகுப்பு சான்றிதழை வெளியிட வேண்டும் - முன்னாள் எம்பி ராமலிங்கம்
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை நேரடியாக உச்சநீதி மன்ற நீதிபதிகள் நாள்தோறும் கண்காணிக்க முடிவு எடுத்திருப்பது தமிழக அரசு மீதும் காவல்துறை மீதும் நம்பிக்கை இல்லை என கூறும் விதமாக உள்ளது.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கரூர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் எம்பி பாஜக மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பத்தாவது சான்றிதழை வெளியே விட வேண்டும் என ஆவேசமாக பேசினார்.
பாரத பிரதமர் தொடங்கி வைத்த பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், இன்று கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் எம்பியும், பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவருமான ராமலிங்கம் பல்வேறு உறுப்பினர் சேர்க்கை குறித்து அரசியல் நுணுக்கங்கள் குறித்தும், விளம்பர பதாகைகள் குறித்து எடுத்துக் கூறினார்.
மேலும் ஒரு உறுப்பினர் 25 நபர்களை சேர்த்தால் அவர்களுக்கு கிளைச் செயலாளர் பொறுப்பும், 50 உறுப்பினர்கள் சேர்த்தால் அவர்களுக்கு மற்ற நகர, ஒன்றிய, மாவட்ட பொறுப்புகளும் வழங்கப்படும் என நிர்வாகிகள் மத்தியில் கூறினார். மேலும் கட்டாயம் உறுப்பினர் சேர்க்கையில் அனைவரும் ஈடுபட வேண்டும் எனவும் உறுப்பினர் சேர்க்காத நபர்களுக்கு பதவி வழங்கப்பட மாட்டாது என தனது பாணியில் தெரிவித்தார். மேலும் பேசுகையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை நேரடியாக டெல்லி உச்சநீதி மன்ற (சுப்ரீம் கோர்ட்) நீதிபதிகள் நாள்தோறும் கண்காணிக்க முடிவு எடுத்திருப்பது தமிழக அரசு மீதும் காவல்துறை மீதும் நம்பிக்கை இல்லை என கூறும் விதமாக உள்ளது எனவும் தெரிவித்தார்.
அதே போல் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியில் பல்வேறு தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினருக்கான சீட்டு வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழாவில் வார்டு தோறும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என தெரிவித்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது அப்பொழுது நேற்று மாலை தொடங்கிய பாஜக உறுப்பினர் சேர்க்கை அதிக அளவில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் மற்றும் 3 லட்சம் உறுப்பினர்கள் அலைபேசி மூலம் மிஸ்டுகால் கொடுத்து உறுப்பினராக உள்ளனர். இந்த தகவல் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் கரூர் மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை விரைந்து தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக முடிக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் செய்தியாளர்கள் தேசிய கல்விக் கொள்கை குறித்து கேள்வி எழுப்பிய போது தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது பத்தாம் வகுப்பு சான்றிதழை வெளியிட வேண்டும் என கூறினார். அதை தொடர்ந்து தமிழகத்தில் தமிழ் தாய் மொழியாகவும், ஆங்கிலம் இரண்டாவது மொழியாகவும், தொடர்ந்து அவரவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தெலுங்கு, கன்னடம், கேரளம், இந்தி உள்ளிட்ட மொழிகளை கற்கலாம் என தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மதுரை உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் விவி செந்தில்நாதன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளும் நகர, ஒன்றிய, பேரூர் கழக, வார்டு நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.