கரூர் அதிமுக செங்கலை உருவும் செந்தில் பாலாஜி: விஜயபாஸ்கரின் வலதுகரம் காலி!
கரூர் வடக்கு நகர அதிமுக செயலாளர் பாண்டியன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். த
கரூரில் அரசியல் நாளுக்கு நாள் பல்வேறு அதிரடி திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று அதிமுக கரூர் வடக்கு நகர செயலாளர் பாண்டியன் அவர்கள் தன்னை சென்னை அண்ணா அறிவாலயத்தில் மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் திமுகவில் இணைந்தார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவில் இணைந்த பாண்டியனுக்கு, அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாண்டியனை கரூர் வடக்கு நகர செயலாளராக நியமித்து கரூர் நகரத்தை மூன்றாகப் பிரித்தார்.
அவர் நியமித்த மூன்று நகரங்களில் முக்கியம் நகரச் செயலாளராக வடக்கு நகர செயலாளர் பாண்டியன் சிறப்பான முறையில் தேர்தல் காலத்திலும் மற்றும் பல்வேறு நிலைகளிலும் அப்பகுதியில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தினார். அதைத்தொடர்ந்து அதிமுக தொண்டர் இல்லத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிக்கும் தவறாமல் கலந்துகொண்டு தனது இடைவிடாது கட்சிப் பணியாற்றி வந்தார்.
ஒரு கால கட்டத்தில் அவர் பிரமாண்ட மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் என கரூர் நகரத்தையும் பிரம்மிக்கும் பார்க்கும் அளவிற்கு பல்வேறு பிரம்மாண்ட நிகழ்வுகளையும் நடத்தினார். இதனை அப்போதைய எதிர்கட்சியான திமுக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர நிர்வாகிகள் உற்று கவனித்து வந்தனர். அதிமுக வடக்கு நகர செயலாளர் வெங்கமேடு பாண்டியன் தனது இளைஞர் பட்டாளத்துடன் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வந்த நிலையிலும், கடந்த சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதி உட்பட மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் திமுக வென்றது.
சற்றும் எதிர்பாராத இந்த வெற்றியால் பல்வேறு அதிமுக நிர்வாகிகள் பலர் சோர்ந்து போன நிலையில் தள்ளப்பட்டனர். இந்நிலையில் அதிமுக வடக்கு நகரச் செயலாளர் வெங்கமேடு பாண்டியன் தனது அரசியல் பயணத்தையும், தொழில்ரீதியான பல்வேறு இடையூறு காரணமாக கரூர் மாவட்டத்தில் தனது முகம் காட்டாமல் இருந்தார். திமுகவில் தேர்தல் வெற்றிக்குப் பிறகு கடந்த ஒரு மாதமாக தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள முடிவு செய்தார். இந்நிலையில் அவர் திமுகவில் சேர முடிவு செய்து அதற்கான பல்வேறு ஏற்பாடுகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுக உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.
தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் திமுகவில் இணைந்த பாண்டியன் இனி வரும் காலங்களில் தான் முன்னிருந்த அதிமுக கட்சியை எவ்வாறு காலி செய்வது என பல்வேறு வியூகங்களை வகுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தீவிர ஆதரவாளரும் வெங்கமேடு பகுதியில் தனக்கென்று தனி முத்திரை பெற்றுவந்த வடக்கு நகர செயலாளர் பாண்டியன் தற்போது அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்திருப்பது பல்வேறு அதிமுக நிர்வாகிகள் இடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பதிலடி தரும் வகையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் விரைவில் சில யுக்திகளை மேற்கொள்வார் என அதிமுகவின் முக்கிய விசுவாசிகள் தெரிவிக்கின்றனர்.
வரும் நகராட்சி தேர்தலில் அதிமுகவினரை படுதோல்வி அடையச் செய்ய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வகுத்துள்ள தேர்தல் வியூகத்திற்க்கு நிச்சயம் வெங்கமேடு பாண்டியன் முயற்சிகள் பெரும் உதவியாக இருக்கும் என அரசியல் நடுநிலைவாதிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதிமுக மாவட்ட கழக செயலாளர் எம் ஆர் விஜயபாஸ்கர் தற்போது உள்ள சூழ்நிலையில் கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் பணியை விட பல்வேறு மடங்குகள் தேர்தல் பணி மேற்கொண்டால் மட்டுமே நிச்சயம் கரூரில் அதிமுக தாக்குப் பிடிக்கும் என்பதிலும் ஐயமில்லை.