கூட்டணிக் கட்சிக்கு மரியாதை இல்லை-முதல் கூட்டத்திலேயே வெளிநடப்பு செய்த காஞ்சி துணை மேயர்
துணை மேயரிடம் கூட்டம் தொடர்பாக ஆலோசிக்கவில்லை எனக்கூறி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துணை மேயர் குருநாதன் வெளிநடப்பு
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் இன்று மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் சபை அரங்கத்தில் நடைபெற்றது. இந்த மாமன்ற கூட்டத்தில் முதல் முறையாக பெண்களுக்கு அதிக இடம் அளித்து பெண்ணுரிமையை நிலை நாட்டியதற்கு நன்றி தெரிவித்தல் , தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி, பிளாஸ்டிக் இல்லாத காஞ்சியை உருவாக்குதல், தமிழக அரசின் உத்தரவின்படி சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, திமுக உறுப்பினர்கள் இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்று கொண்டிருந்தபோதே காஞ்சிபுரம் மாநகராட்சியின் துணை மேயரான காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர் குமரகுருநாதன் மாநகராட்சி ஆணையாளர் நாராயணனிடம் மாநகராட்சி நிர்வாகம் முறையாக அரசு விதிகளை கடைபிடிக்கவில்லை எனக்கூறி மாமன்றத்தில் கடும் குற்றம் சாட்டினார். மேலும் இதுகுறித்து துணை மேயர் மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பின் துணை மேயர் மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததாக கூறி அவையை விட்டு வெளியே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதன்பின் செய்தியாளர்களிடம் துணை மேயர் குமரகுருநாதன் பேசுகையில் , தமிழ்நாடு முதல்வர் கூட்டணி கட்சிகளுக்கு தகுந்த மரியாதை அளித்து வரும் நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயராகிய என்னிடம் இக் கூட்டம் குறித்து எந்தவித ஆலோசனையும் நடத்தவில்லை, தாம்பரம் மாநகராட்சியில் மேயர் துணை மேயர் ஆணையாளருக்கு இருக்கை வசதிகள் ஏறடுத்திக்கொடுத்துள்ளதை போல காஞ்சிபுரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நடைபெறும் கூட்டரங்கில் துணை மேயருக்கான இருக்கை வசதிகளிலும் பாரபட்சமாக செயல்பட்டு துணை மேயருக்கான உரிய மரியாதையும் மறுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டிய அவர் ,மாமன்ற உறுப்பினர்களில் சிலர் பகிரங்கமாக துணை மேயரை மாற்றுவோம் என கூறி வருவது அதிர்ச்சியை அளிக்கிறது என தெரிவித்தார்.மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்தில் மூன்று மாமன்ற உறுப்பினர்களின் தலையீடுகளே உள்ளதாகவும்,அவர்களிடம் தான் ஆலோசனைகள் பெற்று அனைத்தும் நடைபெறுவதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திலேயே கடும் வாக்குவாதம் மற்றும் துணை மேயர் வெளிநடப்பு உள்ளிட்டவை நடைபெற்றது காஞ்சிபுரத்தில் சற்று பரபரப்பையும்,சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க:ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் திரும்பி பார்க்க வைத்த அல்லூரி சீதாராமராஜூ - யார் இவர்?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்