TV Debates | 'இனி டிவி விவாதங்களுக்கு நோ' - தமிழக பாஜக புதிய முடிவு?
பேச நேரம் ஒதுக்குவதில்லை எனக்குறிப்பிட்டு தமிழக பாஜக சார்பில் இனி டிவி விவாதங்களில் யாரும் பங்கேற்கப் போவதில்லை என அக்கட்சி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது
தினம் தோறும் நடக்கும் அரசியல் நகர்வுகள் தொடர்பாக செய்தி தொலைக்காட்சிகள் விவாதங்கள் நடத்துகின்றன. இதில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்குகொண்டு தங்கள் தரப்பு கருத்துகளை தெரிவிப்பார்கள். இதற்காக அரசியல் கட்சிகளும் குறிப்பிட்ட நபர்களை டிவி விவாதங்களில் பங்கேற்க அனுமதி அளிக்கும். இந்த விவாதங்கள் சில நேரங்களில் சண்டைகளில் முடிந்துவிடுவதும் உண்டு. டிவி விவாதங்களில் சிலர் தெரிவிக்கும் கருத்துகள் வைரலாகி பெரும் விமர்சனங்களையும் ஏற்படுத்தும். எனவே டிவி விவாதங்களை அரசியல் கட்சிகள் மிக முக்கியமான ஒன்றாகவே பார்க்கின்றன. இந்த நிலையில் டிவி விவாதம் தொடர்பாக தமிழக பாஜக ஒரு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பேச நேரம் ஒதுக்குவதில்லை எனக்குறிப்பிட்டு தமிழக பாஜக சார்பில் இனி டிவி விவாதங்களில் யாரும் பங்கேற்கப் போவதில்லை என அக்கட்சி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
பாஜக தமிழ்நாடு நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பாஜக தமிழக தலைவர் முருகன், மூத்த தலைவர் இல. கணேசன், அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம், துணை தலைவர்கள் விபி துரைசாமி, எம்.என்.ராஜா, பாஜக எம் எல் ஏக்களான நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், மாநில பொதுச்செயலாளர்கள் கரு.நாகராஜன், குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பாஜக சார்பில் டிவி விவாதங்களில் பங்கேற்போர் சிலரும் கலந்து கொண்டனர்.
பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக டிவி விவாத நிகழ்ச்சிகளில் பாஜக சார்பில் பங்கேற்பவர்கள் கருத்தை சொல்ல நேரம் ஒதுக்கப்படுவதில்லை. அவர்கள் பேசும்போதும் குறுக்கிடும் எதிர்த்தரப்பினர் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் விமர்சிக்கின்றனர். அதனை சரிசெய்ய வேண்டிய நெறியாளர்களும் நடுநிலையாக இருப்பதில்லை. விவாதங்களில் பங்கேற்கும் பாஜகவினர் ஒருதலைபட்சமாகவும், பாரபட்சமாகவும் நடத்தப்படுகின்றனர். எனவே டிவி விவாத நிகழ்ச்சிகளில் தற்காலிகமாக யாரும் பங்கேற்க வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் வென்றது. இதில் அதிமுக 65 இடங்களை கைப்பற்றியது. இந்தத் தேர்தலில் பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. இதில், கோவை தெற்கு தொகுதியில் மட்டுமே அரசியலுக்கு புதுமுகமான கமல்ஹாசனை பாஜக வீழ்த்தியது. மற்ற மூன்று இடங்களில் பாஜக வீழ்த்தியிருப்பது பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற திமுகவை என்பது அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய விஷயமாகும்
அச்சுறுத்தும் கொரோனா தொற்று : தேங்கிய கருப்பட்டி, கவலையில் பனை தொழிலாளிகள்..