Kanimozhi : ‘சென்னை மேயர் பதவிக்கு காய் நகர்த்துகிறாரா கனிமொழி?’ அறிவாலயம் வாசலில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு..!
'நாடாளுமன்ற உறுப்பினராக டெல்லி அரசியலில் இருக்கும் கனிமொழி, வார்டு கவுன்சிலராக போட்டியிட்டு தனது தகுதியை குறைத்துக் கொள்வாரா என்ற கேள்வியும் ஒரு பக்கம் எழுகிறது'
தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்.பியாக இருக்கும் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தனது பிறந்த தினத்தை (ஜனவரி 5) நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி, அவரை புகழும் விதமாக சென்னை நகரின் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் கவனிக்க வைத்த ஒன்று, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வாசலில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்.
’அண்ணாவின் உணர்வு, கலைஞரின் பிறப்பு, தளபதியின் போர் வாள்’ என்ற வாசகத்துடன் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரை பார்த்தால், சாதாரணமாக பிறந்தநாளுக்கு ஒட்டப்படும் போஸ்டர்கள் மாதிரிதான் தெரியும். ஆனால், அதனை உற்று கவனித்து பார்த்தால் ஒரு விஷயம் புலப்படும். கனிமொழி அமர்ந்திருக்கும் டேபிளில், முரசொலி நாளிதழுக்கு அருகே இரண்டு துண்டு பிரசுரங்கள் இருக்கும்.
அதில் ஒன்று, திராவிடத்தின் எதிர்காலமே என்ற வாசகம் பொறித்த காகிதம், மற்றொன்று சென்னை மாநகராட்சியின் முத்திரை பொறித்த காகிதம். மாநகராட்சி, நகராட்சி தேர்தல்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி மேயராக கனிமொழி போட்டியிட விரும்புவதின் அடையாளமாகவே இதுபோன்ற போஸ்டர் அச்சிடப்பட்டு அறிவாலயம் வாசலில் ஒட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மாநிலங்களவை எம்.பி, பின்னர் மக்களவை எம்.பி என தனக்கு எம்.பி பதவி மட்டுமே கொடுத்து, திமுக தலைமை தன்னை டெல்லிக்கு அனுப்புவதை விரும்பாத கனிமொழி, தமிழ்நாடு அரசியலில் கால் பதிக்க விரும்புகிறார் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். குறிப்பாக, உதயநிதிக்காக தான் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்படுகிறோம் என்பதை கனிமொழி உணர்ந்துள்ளதாகவும், அதனை சமாளிக்கும் விதமாகவே சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட அவர் முடிவு செய்து மு.க.ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இப்போது இருக்கின்ற விதிமுறைப்படி மாநகராட்சி தேர்தல் என்பது மறைமுக தேர்தலாகவே நடத்தப்படும் நிலையில், நேரடியாக மேயர் வேட்பாளர் என்று கூறி கனிமொழி களமிறங்க முடியாது. அப்படி அவர் போட்டியிட்டாலும் கூட சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 101 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், அதில் ஏதேனும் ஒரு வார்டில் கவுன்சிலராகதான் போட்டியிட முடியும். அப்படி போட்டியிட்டு வெற்றி பெற்ற பின், கவுன்சிலர்கள் அனைவரும் ஓட்டெடுப்பின் மூலமே அவரை மேயராக தேர்ந்தெடுக்க வாய்ப்பிருக்கிறது.
மாநில தேர்தல் ஆணையம் சென்னை மேயரை பெண்களுக்கானதாக அறிவிக்க வேண்டும் என்றும் கனிமொழி தரப்பில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழுத்தம் தரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
ஆனால், நாடாளுமன்ற உறுப்பினராக டெல்லி அரசியலில் இருக்கும் கனிமொழி, வார்டு கவுன்சிலராக போட்டியிட்டு தனது தகுதியை குறைத்துக் கொள்வாரா என்ற கேள்வியும் ஒரு பக்கம் எழுகிறது. இதுபோன்ற போஸ்டர்கள் மூலம் தான் எந்த அளவுக்கும் இறங்குவேன் என்பதை தலைமைக்கு உணர்த்தி, தன்னுடைய முக்கியத்துவத்தை கட்சியில் எந்த காரணம் கொண்டு குறைக்கக் கூடாது, உதயநிதிக்கான தனக்கு நெருக்கடிகள் தரக்கூடாது என்பதை தெரிவிக்கவே கனிமொழி முயல்கிறார் எனவும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.