5 மாநில தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றது காங்கிரஸ் தான் - காதர் மொய்தீன்
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை விட காங்கிரஸ் கட்சி 10 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது.
சேலம் மாநகர் 31 வது கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாமன்ற உறுப்பினர் சையது மூஸா தலைமையில் நடைபெற்றது. இதில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்களை வழங்கினார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் தலைவர் காதர் மொய்தீன், "இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்தியாவில் உள்ள பூர்வீக கட்சிகளில் ஒன்றாகும். ஆங்கிலேயர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடிய கட்சிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் ஒன்றாகும். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் இந்தியா முழுவதும் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. கேரளாவில் 25 லட்சம் பேர் உறுப்பினர் ஆக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினராக இணைந்துள்ளனர். டிசம்பர் 31 க்குள் இந்தியாவில் முழுமையாக நிறைவு பெற்று. ஜனவரி மாதம் தேசிய பொதுக்குழு கூடி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க உள்ளோம். விரைவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அலுவலகம் டெல்லியில் திறக்கப்பட உள்ளது. அதற்கு இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களை அழைக்க உள்ளேன்.
தமிழகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிடம் ராமநாதபுரம் தொகுதி உள்ளது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலின் போது ராமநாதபுரம் தொகுதி கேட்பதோடு மற்றொரு இடத்தையும் ஒதுக்குமாறு கேட்க உள்ளோம். 5 மாநில தேர்தலில் பொருத்தவரை, இந்தியா கூட்டணி சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி அல்ல. நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி. நாடாளுமன்ற தேர்தலில் அதில் ஈடுபட்டுள்ள அனைத்து கட்சிகளும் நாடாளுமன்ற தொகுதிகளை பிரித்து கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். அதற்கான வியூகங்கள் அமைப்பதற்கு மட்டுமே இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் உள்ளாட்சி தேர்தல்களில் அதிக முக்கியத்துவங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இந்தியா கூட்டணிக்கு இல்லை. நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை விட காங்கிரஸ் கட்சி 10 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது.
இதை வைத்துப் பார்க்கும்போது மூன்று மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்திருந்தாலும் ஐந்து மாநில தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றது காங்கிரஸ் தான். நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் பிரதமராக வேண்டும் என்பதை தேர்வு செய்வார்கள். சென்னை மழை வெள்ள பாதிப்பு பொருத்தவரை எதிர்பார்க்காமல் பெய்த மழை. இது எதிர்பாராமல் நடந்த ஒன்று. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும், இயற்கை சீற்றம் அதை காட்டிலும் அதிகமாக இருப்பதால் அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை தமிழக அரசாங்கம் நன்றாக செய்து வருகிறார்கள். தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது ராஜநாத் சிங் போன்ற மூத்த அமைச்சர் வருகை தந்து முதல்வருடன் சந்தித்து பேசியது வரவேற்கத்தக்கது. முதல்வர் ஸ்டாலின் கேட்டது போன்று மத்திய அரசு ரூ.5000 கோடியை உடனடியாக தர வேண்டும் என்பது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கிறேன்” என்றார்.