முழுநிலவில் கூட்டாஞ்சோறு.. நான் இரும்புப் பெண்.. ஆளுநர் தமிழிசையின் தேநீர் விருந்து பேச்சு..!
அன்பான அழைப்பில் அரசியலை கலப்பது தவறு. எந்த விதத்திலும் நான் அதிகாரத்தை பயன்படுத்தவில்லை என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்
![முழுநிலவில் கூட்டாஞ்சோறு.. நான் இரும்புப் பெண்.. ஆளுநர் தமிழிசையின் தேநீர் விருந்து பேச்சு..! I am not the Chief Minister but I am acting super Governor Governor Tamilisai Saundarajan முழுநிலவில் கூட்டாஞ்சோறு.. நான் இரும்புப் பெண்.. ஆளுநர் தமிழிசையின் தேநீர் விருந்து பேச்சு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/17/6ba85058b8ad48f5ad63ecd7eb7a3671_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அன்பான அழைப்பில் அரசியலை கலப்பது தவறு. எந்த விதத்திலும் நான் அதிகாரத்தை பயன்படுத்தவில்லை என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நேற்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புத்தாண்டு விருந்துக்கு அனைத்துக்கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து இருந்தார். இதில் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க., அ.தி.மு.க. தலைவர்கள் கலந்து கொண்டனர். அதன்பின் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சித்திரை முழு நிலவில் கூடி கூட்டாஞ்சோறு உண்ணும் பழக்கம் இருந்தது. தமிழ் பழக்க வழக்கங்களை நாம் மீட்டெடுக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த நிகழ்வை கொண்டாடுகிறோம். தமிழ் எல்லா இடங்களிலும் ஒலிக்க வேண்டும். தமிழர்களின் பெருமை எல்லாவிதத்திலும் நிலை நிறுத்தப்பட வேண்டும். இந்த அன்பான அழைப்பில் அரசியலை கலப்பது நமது தமிழ் பண்பாட்டுக்கு உகந்தது அல்ல. நான் ஒரு சகோதரியாக, தமிழர் விழாவை கொண்டாட அழைப்பு விடுத்தேன்.
எந்தவிதத்திலும் எனது அதிகாரத்தை நான் பயன்படுத்தியது இல்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். முதலமைச்சர் சுதந்திரமாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். சகோதரத்துவத்தோடு சிறப்பாக புதுச்சேரியில் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். காரணம் இல்லாமல் புறக்கணிப்பது, அரசியலை புகுத்துவது தேவையில்லை. தமிழர் என்ற முறையில் ஒன்றிணைவோம். நான் பாரபட்சமாக நடந்து கொள்வதில்லை. தெலுங்கானா, புதுச்சேரி இரண்டு மாநிலங்களையும் போற்ற வேண்டும் என்பதற்காகத்தான் கடினமாக உழைத்து வருகிறேன்.
சூப்பர் முதலமைச்சராக செயல்படுவதாக கூறியது குறித்து கேட்கிறீர்கள். முத்தரசனுக்கு என்ன தெரியும். அவர் புதுச்சேரியில் இருக்கிறாரா? புதுச்சேரியை தினம் தினம் பார்க்கிறாரா? அவர் தமிழகத்தில் இருக்கிறார். இங்கு நடப்பது அவருக்கு என்ன தெரியும். நான் சூப்பர் முதலமைச்சர் இல்லை. ஆனால் நான் சூப்பராக செயல்படுகிறேன். பாஜக தலைவர்களையே நான் பார்ப்பதில்லை. நான் ஆளுநர் பொறுப்பு வகிப்பதில் இவர்களுக்கு என்ன கஷ்டம்.
தமிழகத்தை சேர்ந்தவர் 2 மாநிலங்களுக்கு பொறுப்பாக இருந்து கொண்டிருப்பதில் இவர்களுக்கு என்ன பிரச்சினை. திறமையின் அடிப்படையில் தான் எனக்கு இந்த பொறுப்பை கொடுத்துள்ளனர். தமிழிசைக்கு நிர்வாக திறமை இல்லை என்று முத்தரசனை சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம். புதுச்சேரிக்கு வந்து ஏதையோ ஒன்றை சொல்ல வேண்டும் என்று சொல்கின்றனர். நான், இரும்புப் பெண்மணி. என்னை வாயில்போட்டு மெல்ல முடியாது. 2 மாநிலங்களையும் தாய்மை உள்ளத்தோடு தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதிகார உணர்வோடு பார்க்கவில்லை என அவர் கூறினார்.
ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
புதுச்சேரி மாநிலத்தை மேலும் மெருகூட்டும் வகையில் பாரம்பரிய விழாக்களை நடத்தி வருகிறோம். மக்களை ஈர்க்கும் வகையில் மாநிலத்தின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புதுச்சேரியில் உள்ள பாரம்பரிய கட்டிடங்களை பராமரிப்பதற்கான நடவடிக்கையையும் அரசு எடுத்து வருகிறது.. ஸ்மார்ட் சிட்டி மூலம் வ.உ.சி., கல்வே காலேஜ் போன்ற பள்ளிகளின் கட்டிடங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படுகின்றன. இடிந்து விழுந்த பழமையான மேரி கட்டிடமும், பழமை மாறாமல் கட்டப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகை தற்போது இருப்பது போன்றே இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம். இந்த கட்டிடத்தை பழுதுபார்க்க தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆராய்ந்து பார்த்தபோது நன்றாக உள்ளது என்று கூறியுள்ளனர். ஆகவே அதனை பராமரிப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது என அவர் கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)