தனிக்கட்சி தொடங்கும் ஓபிஎஸ் ? பாஜக கொடுக்கும் ஆஃபர் என்ன ? செக் வைக்கும் இ.பி.எஸ்.,
Ops new party: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்குவது குறித்து, ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், இப்போதே பிரதான கட்சிகளின் கூட்டணிகள் முடிவாக தொடங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக பாஜக மற்றும் அதிமுக இணைந்துள்ளன. இந்த அறிவிப்பை நேற்று அமித்ஷா அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி, எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
பாஜக - அதிமுக கூட்டணி
கடந்த 2024 ஆம் ஆண்டு தேர்தலின் போது, அதிமுக மற்றும் பாஜக இணைந்து தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்த்த நிலையில், கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியானது. இதனால் பாஜக, பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், ஓபிஎஸ் அணி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட ஒரு சில கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. அதிமுக, தேமுதிகவுடன் இணைந்த தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகள் படுதோல்வி அடைந்தது.
அந்த தேர்தல் தோல்வி, அதிமுகவை பெரிய அளவில் பாதித்திருந்தது, காரணம் ஒரு சில தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் அளவிற்கு அதிமுக சென்றிருந்தது. ஆனால் மூன்றாவதாக அணியாக களமிறங்கிய பாஜக கூட்டணி வேட்பாளர்கள், பல இடங்களில் கடுமையான போட்டியை கொடுத்தது. இந்தநிலையில் தான், தேர்தலுக்கு 10 மாதங்களுக்கு மேல் இருக்கும் நிலையில், இப்போது பாஜக மற்றும் அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது .
டி.டி.வி தினகரன் நிலைமை என்ன ?
டி.டி.வி தினகரன் அதிமுக ஒன்றிணை வேண்டும் என பேசி வருகிறார். குறிப்பாக திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால், ஜெயலலிதாவின் ஆதவாளர்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அதிமுகவுடன் இணையாது என்ற கருத்தை முன் வைத்திருந்தார் (இடியாப்ப சிக்கலில் சிக்க விரும்பவில்லை என மறைமுகமாக கூறியிருந்தார்).
இதை வைத்துப் பார்க்கும்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனி கட்சியாக இருக்கும். தனி கட்சியை ஏற்றுக் கொள்வதில், எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரிய பிரச்சனை இல்லை என தெரிகிறது. எனவே தேசிய ஜனநாயக கூட்டணியில், டி.டி.வி தினகரன் இடம்பெறுவது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.
ஓ.பி.எஸ் நிலை என்ன ?
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து வெளியேறிய பிறகு, பாஜகவுடன் இணைந்த தேர்தலை சந்தித்தார். ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து அதிமுக ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். தன்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்றே அவர் கூறிய வருவதால், ஓபிஎஸ்-க்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமித்ஷா அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டோம் எனும் தெரிவித்தார்.
தனி கட்சி தொடங்குவாரா ?
ஓ. பன்னீர்செல்வம், தற்போது மிகப்பெரிய சிக்கல் சிக்கி உள்ளார். தணிக்கட்சி தொடங்குவது குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. டிடிவி தினகரன் போல் தனிக்கட்சியை தொடங்கினால், தேசிய ஜனநாயக கூட்டணியில் பயணிப்பதில் பெரிய பிரச்சனை இல்லை என நினைக்கிறாராம்.
அப்படி இல்லை என்றால், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பயணிக்கவும், ஓ.பி.எஸ் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜக தரப்பிலிருந்து, தனி கட்சியாக அல்லது அமைப்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்கு, சிக்னல் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அரசியலில் இருந்து ஓபிஎஸ் ?
இது மட்டுமில்லாமல் பாஜக தரப்பிலிருந்து, ஆளுநர் பதவி தருவதாகவும் அவரது மகன்கள் பாஜகவில் இணைந்து செயல்பட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் அரசியலில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் ஒதுங்கி, கொள்வார். இதன் மூலம் இபிஎஸ்-ஐ சமாதானம் செய்து விட முடியும், கடந்த முறை தங்களுடன் பயணித்த ஓபிஎஸ்சிக்கும், மன வருத்தத்தை போக்கிவிட முடியும் என பாஜக கருதுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

