''மன்னிக்க முடியாது; தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும்'' - எழுவர் விவகாரத்தில் நாராயணசாமி ஆவேசம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை நாங்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டோம் என்று புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தார். அவரது கடிதத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் வந்தது. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் தமிழக அரசின் கடிதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், அவர் பேசியிருப்பதாவது,
“ புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தேவையான ஆக்சிஜன் படுக்கைகள், வென்டிலேட்டர்கள் இல்லை. அதற்கான கட்டமைப்பை குறுகிய காலத்தில் உருவாக்காமல் இருந்ததால் பலர் உயிரிழந்துள்ளனர். போர்க்கால அடிப்படையில் ஆக்சிஜன் படுக்கைகளை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜிப்மரில் குறைந்தபட்சம் 1,000 படுக்கைகள் அமைக்க வேண்டும். அதில் 70 சதவீதம் ஆக்சிஜன் படுக்கைகளாகவும், 30 சதவீதம் வென்டிலேட்டர் படுக்கைகளாகவும் அமைத்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் 700 ஆக்சிஜன் படுக்கைகளை உருவாக்க வேண்டும்.
தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 75 சதவீத படுக்கைகளை மாநில அரசு கையகப்படுத்தி, அதன் மூலம் ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் படுக்கைகளை அதிகரிக்க வேண்டும். தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், ஆஷா பணியாளர்களை போர்க்கால அடிப்படையில் நியமிக்க வேண்டும். இவ்வாறு செய்தால்தான் புதுச்சேரி மக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க முடியும்.
மத்திய அரசு தடுப்பூசி வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது. மிகக்குறைந்த அளவே தடுப்பூசி வந்துள்ளது. அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடும் பணியை மாநில அரசு நிர்வாகம் துரிதமாக செய்ய வேண்டும். மாநில நிதியில் இருந்து தடுப்பூசி பெற்று மக்களுக்கு போட வேண்டும். கருப்பு பூஞ்சை நோய்க்கு எதிரான மருந்துகளை உடனடியாக கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜீவ்காந்தியை கொன்றவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது, அவர்கள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யலாம் என சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பெருந்தன்மையோடு கூறியுள்ளனர்.
ஆனால், ராஜீவ்காந்தியின் இழப்பு நாட்டிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பு. அவரை கொன்றவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. அது சில அரசியல் கட்சி மற்றும் பொதுநலவாதிகளின் கருத்தாக இருக்கலாம்.
ஆனால், காங்கிரஸ் தொண்டன் என்ற முறையில் சொல்கிறேன். தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும். அவர்களை நாங்கள் மன்னிக்க மாட்டோம். இது மன்னிக்க முடியாத குற்றம். அவர்கள் நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.” இவ்வாறு அவர் பேசியுள்ளார்.