EPS: செந்தில்பாலாஜி உத்தமரா..? நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தாரா? எடப்பாடி பழனிசாமி கேள்வி
செந்தில்பாலாஜி உத்தமரா? நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தாரா? என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சானார்பட்டி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாகமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வண்ண காகித மழையை பெய்ய வைத்து வித்தியாசமான முறையில் வரவேற்பு அளித்தனர்.
உள்ளாட்சி துறை:
இதைதொடர்ந்து அதிமுக கட்சி கொடியை ஏற்றி வைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, "கிராமம் வளர்ந்தால் தான் நாடு முன்னேறும், கிராம வளர்ச்சிக்கு அதிமுக வித்திட்டது. அதிமுக 31 ஆண்டுகால ஆட்சிதான், நாடு வளர்ச்சி பெற்றுள்ளது. எந்த மாநிலங்களும் இல்லாத அளவிற்கு தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் அதற்கு அதிமுக தான் முக்கிய காரணமாக இருந்துள்ளது.
உள்ளாட்சி துறை மூலமாக தான் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியும், உள்ளாட்சி அமைப்பில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது, 140 விருதுகளை பெற்று தேசியளவில் சாதனை புரிந்தது. இதுமட்டுமில்லாமல் சமூகநலத்துறை, மின்சாரத்துறை, போக்குவரத்துதுறை, உணவுதுறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் விருது மேல் விருது பெற்று தமிழகம் அனைத்திலும் முதலிடம் என்ற பெருமை அதிமுக ஆட்சியில் பார்க்கப்பட்டது.
மேலும் 2019-2020 ஆண்டில் உயர்கல்வி படிப்பதில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெற்றது. இந்தியாவிலேயே கல்வி கற்பதில் தமிழகம் முதலிடம் பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் ஆராய்ச்சியில் உருவாக்கப்பட்ட, 2 காளைகளை ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு கொடுத்தால் போதும் 80 லிட்டர் பால் கறக்கும், ஏழை குடும்பம் சராசரியாக நல்லபடியாக வாழமுடியும், அதேபோன்று திட்டங்களை பார்த்து பார்த்து கொண்டு வந்தது. ஆனால் இன்றைய திமுக அரசாங்கம் கிடப்பில் போட்டுவிட்டது எனவும் கூறினார்.
சரமாரி விமர்சனம்:
ஏழை மக்களை பற்றி கவலைப்படாமல், வீட்டு மக்களை பற்றி கவலைப்படுகின்ற அரசாங்கம் திமுக அரசாங்கம் மட்டும்தான் எனவும் விமர்சனம் செய்தார். அதிமுக ஆட்சியில் பெரும்பாலான ஏரிகள் தூர்வாரப்பட்டு மழைக்காலங்களில் நீர் தேக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயிகள் பயனடைந்தனர். திமுகவின் இரண்டு ஆண்டு கால ஆட்சியில் திமுக செய்த சாதனை மின்கட்டண உயர்வு மட்டும்தான்.
ஏற்கனவே மக்கள் தாக்குபிடிக்க முடியாமல் இருக்கும் நிலையில், மீண்டும் சுமையை அதிகரிக்கும் விதமாக மின்சார கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். மேலும் திமுக நிறைய அறிவிப்புகளை வெளியிட்டது. தேர்தல் வந்தால் அறிவிப்பு வரும், தேர்தல் முடிந்தால் மூட்டை கட்டி வெளியே போட்டு விடுவார்கள். எனவே திமுக ஆட்சி எந்த துறையில் சாதனை புரிந்தார்கள் என்று கேள்வி எழுப்பினார்.
லஞ்சம் வாங்கும் முதலமைச்சர்:
இந்தியாவிலேயே லஞ்சம் வாங்குவதில் முதன்மையான முதலமைச்சர் ஸ்டாலின் தான். தமிழகத்தில் ஊழல் செய்த அமைச்சர் தொடர்ந்து இயங்கி வருகிறார். இந்தியாவிலேயே இலாக்கா இல்லாத அமைச்சர் தமிழகத்தில் தான் உள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே திமுக கூட்டத்தில் அமைச்சர்களால் என்ன நடக்குமோ பயத்தில் உள்ளதாக பேசியிருந்தார். அதேபோன்று தற்பொழுது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்களால் பதறிப் போய் உள்ளார். திமுக ஆட்சியை காப்பாற்றுவதற்காக செந்தில் பாலாஜி அனைத்து அமைச்சர்களும் சென்று பார்த்து வருகிறார்கள்.
செந்தில் பாலாஜி உத்தமரா? நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தாரா? இலக்கா இல்லாத அமைச்சராக வைத்திருப்பதற்கு இந்தியாவிலேயே வழிகாட்டி முதலமைச்சர் என்று கூறும் ஸ்டாலின் ஊழல் செய்த அமைச்சரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். செந்தில் பாலாஜியின் மீது எதிர்க்கட்சியாக இருந்தபோது குற்றம்சாட்டிய ஸ்டாலின், தற்போது திமுகவிற்கு செந்தில் பாலாஜி வந்துவிட்டார். திமுக என்ற தீர்த்தம் செந்தில் பாலாஜி மீது தெளித்தவுடன் புனிதம் ஆகிவிட்டார்.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு என்று விமர்சனம் செய்தார். தமிழக மக்கள் எதிர்பார்ப்பது கைதி அமைச்சராக இருக்கக்கூடாது, அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட வேண்டும், கைதி அமைச்சராக இருப்பது தமிழகத்திற்கு தலைகுனிவு, எனவே தமிழக முதலமைச்சர் தனது பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும் எனவும் பேசினார். மத்திய அரசாங்கம் தமிழக அரசாங்கத்தை பழிவாங்குவதாக கூறுகிறார். நீதிமன்றம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே தொட்டுப் பார் சீண்டிப்பார் என்று தமிழக முதலமைச்சர் ரவுடிபோல் பேசுகிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீரழிந்து விட்டது எனவும் கூறினார்.