Exit Poll 2024: பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் திமுக.. இந்தியா கூட்டணிக்கு இனிப்பை தந்த தமிழ்நாடு!
TN Exit Poll 2024: ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றியை பதிவு செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களாக நடந்து வந்த மக்களவை தேர்தல் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. ஏழு கட்ட வாக்குப்பதிவு முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் திமுக: தேசிய அளவில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெறும் என ஏறக்குறைய அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய அளவில் பாஜக வெற்றி பெற்றாலும் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வரலாற்று வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஏபிபி - சி வோட்டர் வெளியிட்ட கருத்துக்கணிப்பின்படி, தமிழ்நாட்டில் 37 முதல் 39 தொகுதிகள் வரை இந்தியா கூட்டணி வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. 0 முதல் 1 தொகுதிகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெறும் என ABP-Cvoter கணித்துள்ளது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் 46.3 சதவிகித வாக்குகளை இந்தியா கூட்டணி பெறும் என்றும் 21 சதவிகித வாக்குகளை அதிமுக கூட்டணி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணிக்கு இனிப்பான செய்தி தந்த தமிழ்நாடு: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 18.9 சதவிகித வாக்குகள் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுக்கு 13.8 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலிலும், திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது. தேனியை தவிர்த்து அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி பிரம்மாண்ட வெற்றியை பெற்றிருந்தது.
போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் திமுக வெற்றி வாகை சூடியது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக, கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெற்றிருந்தது.
திமுக கூட்டணி, 159 இடங்களில் வென்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது. திமுக மட்டும் 133 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2019 மக்களவை தேர்தலிலும் சரி, 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் சரி பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
ஆனால், இந்த முறை பாஜக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி என தனித்தனியே களம் கண்டது. பாஜக கூட்டணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக, புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
திமுக கூட்டணியை பொறுத்தவரையில், 2019 மற்றும் 2021 தேர்தலை சந்தித்த அதே கூட்டணியே இந்த முறையும் தொடர்ந்துள்ளது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
பலமே இல்லாத மாநிலங்களில் கூட குறுகிய காலத்தில் பாஜகவால் வெற்றியை பெற முடிந்தது. இதற்கு எடுத்துக்காட்டாக பல மாநிலங்களை சொல்லலாம். மேற்குவங்கம் தொடங்கி தெலங்கானா வரை பாஜகவால் இதை சாதித்து காட்ட முடிந்தது.
கேரளாவில் கூட கணிசமான வாக்குகளை பெறுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும்தான் பாஜகவால் வெற்றியை பெற முடியாமல் உள்ளது.