ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ADMK alliance: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக கூட்டணியை வருகிற பொங்கலுக்கு முன்னதாக இறுதிவடிவம் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடி ஜனவரி 23ஆம் தேதி கலந்துகொள்ளவுள்ள கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களை மேடையேற்ற அதிமுக தீவிரமாக களம் இறங்கியுள்ளது.

நெருங்கும் தமிழக தேர்தல்- சூடு பிடிக்கும் அரசியல் களம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களில் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இதன் காரணமாக தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. அதிலும் அதிமுக கூட்டணி வேகவேகமாக தேர்தல் கூட்டணியை உறுதி செய்து வருகிறது. அந்த வகையில் பலம் வாய்ந்த திமுக கூட்டணியை வீழ்த்த எதிர்ப்பு வாக்குகள் பிரிந்து செல்லாமல் ஒருங்கிணைக்கும் வகையில், பாஜகவை தங்கள் அணியில் இணைத்த அதிமுக, அடுத்தாக பாமகவையும் இணைத்துள்ளது. விரைவில் தேமுதிகவையும் அதிமுக கூட்டணியில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
அதிமுக கூட்டணியில் புதிய கட்சிகள்
பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித் ஷா திருச்சி வந்து சென்ற நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைந்தது. கூட்டணியில் பாமக இணைந்த நிலையில் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திரும்பியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அடுத்தாக அமமுகவை இணைக்க தொடர்ந்து திரைமறைவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதே போல தேமுதிகவையும் கூட்டணியில் இணைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை முடிந்த சில நாட்களுக்குள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இறுதிவடிவம் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
23ஆம் தேதிக்குள் அதிமுக கூட்டணி இறுதி வடிவம்
அந்த வகையில், அமமுக, தேமுதிகவை இணைத்து தேசிய ஜனநாயக கூட்டணியை வலுவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பேச்சுவார்த்தையில் உள்ள கட்சிகளிடம் இருந்து சாதகமான பதில்களை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிப்பங்கீடு உள்ளிட்ட அம்சங்களின் உடன்பாட்டை ஏற்படுத்தி முக்கிய கட்சிகளை வரும் 23ம் தேதிக்குள் கூட்டணியில் இணைக்க தீவிரப்பணியானது தொடங்கியுள்ளது. கூட்டணி இறுதி வடிவம் பெற்ற உடன் வரும் 23ம் தேதி தமிழ்நாட்டில் பிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டணிக்குள் அமமுக, தேமுதிக கட்சிகள் வரும்பட்சத்தில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களையும் பிரதமருடன் வரும் 23ம் தேதி மேடை ஏறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
நாளை முக்கிய பேச்சுவார்த்தை
வருகிற 23ம் தேதிக்குள் கூட்டணி இறுதிவடிவம் பெறவில்லை என்றால் 28ம் தேதிக்குள் இறுதிவடிவம் பெறும் வகையில் ஏற்பாடு நடைபெற்று வருவதாக அதிமுக வட்டார தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நாளை காலை எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக குழுவினர் சந்தித்து பேசவுள்ளனர். ஜனவரி 23 ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியுடன் நாளை நடைபெறும் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.





















