EPS Pressmeet: ” யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், அது விஜயின் உரிமை" - எடப்பாடி பழனிசாமி பேச்சு!
அரசியல் நாகரிகம் கருதி, முதலமைச்சர் ஸ்டாலின் செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சிகளில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "அதிமுக என்பது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்டது. 2021 ஆம் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. தமிழகத்தில் நிலவும் மக்கள் பிரச்சினைகளை தங்கு தடையின்றி அரசின் கவனத்திற்கு எடுத்து செல்கின்ற வகையில் அதிமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது. நாங்கள் யாருக்கும் அடிமையில்லை. மத்தியில் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. காலத்திற்கேற்ற முறையில் திமுக அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறது. ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கை இருக்கிறது. அதிமுக அதன் கொள்கைக்கேற்ப செயல்படுகிறது. யாருக்கும் அதிமுக அடிமை இல்லை. ஆனால் திமுகதான் அடிமையாக இருக்கிறது. மிசா, எமர்ஜென்ஸி காங்கிரஸால் கொண்டு வரப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட திமுக, ஆட்சி அதிகாரத்திற்காக காங்கிரசிடம் அடிமைப்பட்டு கிடக்கிறது. அதிமுகவை பொறுத்தவரை புதுவை உள்பட 40 இடங்களிலும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் சூழல் பிரகாசமாக உள்ளது. அதற்கேற்ப நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
செந்தில் பாலாஜி விஷயத்தில் முதல்வரின் நடவடிக்கை நகைப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. ஊழலில் ஈடுபட்டவரை தொடர்ந்து அமைச்சராக வைத்திருப்பது சரியல்ல. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, குற்றச்சாட்டிற்குள்ளான ஆலடி அருணா, என்.கே.பி.பி ராஜா ஆகியோரை அமைச்சரவையில் இருந்து நீக்கினார். இதேபோன்று அதிமுக ஆட்சியில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஜெயலலிதா நீக்கினார். தமிழகத்திற்கென்று ஒரு அரசியல் நாகரிகம் இருக்கிறது. அரசியல் நாகரிகத்தை கடைப்பிடித்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும். சிறைக்கைதியாக இருப்பவர் பதவியல் தொடர்வது மோசமான உதாரணமாக போய்விடும். அரசியல் நாகரிகம் கருதி செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் நீக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஒவ்வொருவருக்கும் அவர் கருத்தை தெரிவிக்க உரிமை உண்டு. அதன் அடிப்படையில் நடிகர் விஜய் தன்னுடைய கருத்துக்களை சொல்லி இருக்கிறார்.
நீட் வரக்கூடாது என்பதில் அதிமுக முதன்மையாக இருக்கிறது. 2010 டிசம்பர் 21 ஆம் தேதி திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போதுதான் அரசாணை வெளியிடப்பட்டது. திமுகவைச் சேர்ந்த இணை அமைச்சர் காந்திசெல்வன் இருந்தபோதுதான் நீட் தேர்வு வந்தது. ஆனால் அதை பூசி மெழுகி மறைக்கப் பார்க்கிறார்கள். இந்தியா முழுவதும் நீட் தேர்வு வர காரணமாக இருப்பவர்கள் திமுக-காங்கிரஸ் கட்சியினர்தான். நீட் தேர்வுக்கு மாற்றாக அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்காக 7.5 சதவீத இட ஒதுக்கீடு அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. இட ஒதுக்கீட்டுக்கு முன்பாக 9 பேர் மட்டுமே மருத்துவம் படித்த நிலையில் தற்போது 577 பேர் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இடஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தன்மை இருக்கிறது. தேர்தல் வரும்போதுதான் கூட்டணி பற்றி தெரியும். அதுவரை அவரவர் கட்சி நலனுக்காக மட்டுமே பேச முடியும். திமுக கூட்டணி போல அப்படியே ஒட்டிக் கொண்டிருக்க முடியாது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படியே கைது செய்த அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக திமுக கூட்டணி கட்சிகள் பேசுகின்றனர். எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் இருந்தபோது செந்தில் பாலாஜி குறித்து குற்றம் சாட்டினார். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் நீதிமன்றம் சென்றதால் அதனடிப்படையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கரூர் சோதனையின் போது வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை" என்று தெரிவித்தார்.