’மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பேசியது என்ன?’ பரபரப்பு தகவல்கள்..!
’ஜெகன்மோகன் ரெட்டி பாணியில்வ் விரைவில் பாத யாத்திரை சென்று மக்களை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி’

தேர்தலுக்கு தயாராகும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்றும் நாளையும் மாவட்ட செயலாளர்கள் / பொறுப்பாளர்கள் கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இன்று காலை நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
என்ன பேசப்பட்டது ?
2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க அனைவரும் இப்போதிலிருந்தே தயாராக இருக்க வேண்டும் என்றும் பூத் கமிட்டியை வலுப்படுத்தும் பணிகளை மிகத் தீவிரமாக செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுக்கு இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மூலம் உத்தரவிட்டிருக்கிறார். மேலும், மாவட்ட வாரியாக உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்குச்சாவடி முகவர்களை நியமித்து, அதற்கான பட்டியலை தலைமையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
இன்று பங்கேற்றது யார் யார் ?
சிவகங்கை அரியலூர் திண்டுக்கல் பெரம்பலூர் நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி விழுப்புரம் கடலூர் திருவண்ணாமலை ராணிப்பேட்டை ஆகிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களோடு காலை ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி, மாலையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
எடப்பாடி பழனிசாமி பேசியது என்ன ?
இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசமை, பூத் கமிட்டியை முழுமையாக நிறைவு செய்து ஜூலை 10ஆம் தேதிக்குள் அதிமுக தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும், பூத் கமிட்டியில் நியமிக்கப்படும் பொறுப்பாளர்களுக்கு கட்டாயம் புகைப்படம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதோடு, விரைவாக பணிகளை முடித்து தேர்தல் பணிகளை தீவிர படுத்த கட்சி நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
விரைவில் எடப்பாடி சுற்றுப்பயணம்
அதே நேரத்தில் விரைவில் தேர்தலுக்கு அதிமுக தொண்டர்களையும் நிர்வாகிகளையும் தயார்ப்படுத்தும் வகையில் தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது என்றும் விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஜெகன்மோகன் பாணியில் பாத யாத்திரை
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு உதவிய அரசியல் வியூக வகுப்பு நிறுவனமே தற்போது அதிமுகவிற்கு பணியாற்றி வருகிறது. இந்நிலையில், ஆந்திராவில் ஜெகன்மோகன் தன்னுடைய பாத யாத்திரை மூலமாக மக்களை சந்தித்த பிறகே தேர்தலை சந்தித்தார். அது அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த நிலையில், அவர் முதல்வராகவும் ஆனார்.
அதே பாணியில், தமிழ்நாட்டிலும் எடப்பாடி பழனிசாமியை பாத யாத்திரை செல்ல வைக்க அந்த நிறுவனம் திட்டமிட்டு வருவதாகவும், அதற்கு முன்னர் மாவட்டம் வாரிய கட்சி நிர்வாகிகளை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிறகு, மக்கள் சந்திப்பிற்கான பாத யாத்திரை அறிவிப்பு வரும் என்றும் கூறப்படுகிறது.
கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம்
இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, கூட்டணியை தான் பார்த்துக்கொள்வதாகவும் கூட்டணி பற்றி யாரும் எந்த கவலையும் அடைய வேண்டாம் என்றும் கூறியுள்ளார். மேலும், திமுகவின் பொய் வாக்குறதிகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். மக்களிடம் அதை கட்சியின் நிர்வாகிகள் எடுத்துச் சொல்லவும் அறிவுறுத்தல் கொடுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு, IT wing பயிற்சி கொடுத்து வாக்காளர்களை கவர வேண்டும். 10 பூத் கமிட்டி நிர்வாகிகளை இணைத்து பயிற்சி கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.




















