இரவோடு இரவாக 14 நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கிய எடப்பாடி பழனிசாமி.! இது தான் காரணமா.?
EPS ADMK: தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவில் இருந்து மாஜி எம்பி உள்ளிட்ட 14 பேரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் அதிரடி
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு கட்சியிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிமுவில் உட்கட்சி மோதலை சரிசெய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடப்பாடி பழனிசாமி எடுத்து வருகிறார். தனித்தனி அணியாக இருப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தும் கட்சியில் இருந்தும் நீக்கி வருகிறார். அந்த வகையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்ட நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்திருந்தார். அதே நேரம் அதிமுவின் வாக்குகள் சிதறியதால் ஓட்டுக்கள் பிரிந்து வெற்றி வாய்ப்பை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
செங்கோட்டையன் கட்சியில் நீக்கம்
கடந்த 9 வருடங்களாக அதிமுக சந்தித்த தேர்தல்களில் தோல்வி மேல் தோல்வி கிடைத்து வருகிறது. இந்த நிலையில் தான் பிரிந்து சென்ற தலைவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என மூத்த நிர்வாகியாக இருந்த செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். இதனையடுத்து செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கட்சி பதவியில் இருந்து நீக்கி எட்டப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து சசிகலா, ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை சந்தித்து செங்கோட்டையன் பேசியிருந்தார். இதனால் அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை ஒட்டுமொத்தமாக கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து செங்கோட்டையன் ஆதரவாளர்களான மாஜி எம்,பி உள்ளிட்ட நிர்வாகிகளையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுக மாஜி எம்பி நீக்கம்
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த V, சத்தியபாமா, Ex. M.P.. தம்பி (எ) K.A. சுப்பிரமணியன், N.D. குறிஞ்சிநாதன், K.S. மோகன்குமார்.
A.V.M. செந்தில் (எ) கோடீஸ்வரன்,அருள்ராமச்சந்திரா, K.A. மௌதீஸ்வரன், P. ராயணன், S.R. செல்வம், K.K. கந்தவேல் முருகன், V.P. தமிழ்செல்வி, B,U.முத்துசாமி,S.S. ரமேஷ்,S.D. காமேஷ், ஆகியோர், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.





















