'ஒ.பி.எஸ். திமுகவிற்கு சென்றுவிட்டார்’ - சரவெடியாய் வெடித்த எடப்பாடி பழனிசாமி
"ஒ.பி.எஸ் திமுகவிற்கு சென்றுவிட்டார். அவர் சூடு,சொரணை இல்லாமல் பேசி வருகின்றார்."
கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் அரசின் தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆளுநர் 10 சட்ட முன் வடிவுகளுக்கு அனுமதி வழங்காமல் இருப்பதாக, தனி தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பெரும்பாலான சட்ட முன்வடிவுகள் வேந்தர் நியமனம் குறித்தது தான். ஏற்கனவே சட்டப்பேரவையில் நிறைவேற்றபட்டு ஆளுநருக்கு அனுப்பி அனுமதி அளிக்காததால், திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. வழக்கு நிலுவையில் இருக்கும் போது, அவசர அவசரமாக தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. சட்ட முன்வடிவுகளை மறு ஆய்வுக்கு எடுத்து கொள்ள இந்த தனிதீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. சட்ட மன்றத்தில் எங்கள் கருத்துகளை தெரிவித்து இருக்கின்றோம்.
ஆளுநர் சட்டமுன்வடிவுற்கு அனுமதி வங்காமல் இருப்பதை சுட்டிகாட்டி வழக்கு தொடுத்து இருக்கும் நிலையில், சிறப்பு சட்டமன்ற விவகாத்தம் நடத்த என்ன காரணம்? இதற்கு முறையான பதில் சட்டமன்றத்தில் கிடைக்கவில்லை. சட்ட முன்வடிவுகள் குறித்து நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், ஏன் அவசர அவசரமாக சட்டமன்றத்தை கூட்டி இருக்கின்றனர். சுயலாபத்திற்காக இந்த சட்ட முன்வடிவு திமுக அரசால் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தால், இந்த கூட்டமே அவசியம் கிடையாது.
1994 ஜனவரி மாதம் இதே கோரிக்கைக்காக சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டபோது திமுக என்ன நிலைப்பாடு எடுத்தது? அனைத்து பல்கலைகழகத்திலும் துணைவேந்தர் நியமனம் அரசால் செய்வது என்பது ஜனநாயகத்தில் ஏற்றுகொள்ள கூடிய நல்ல நோக்கமல்ல என அன்பழகன் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் நெஞ்சுக்கு நீதி என்ற புத்தகத்தில் 511 பக்கத்தில் கருத்தை தெரிவித்துள்ளார். பல்கலை கழக வேந்தர் தொடர்பாக சட்டம் அவையில் நிறைவேற்றி இருக்கின்றனர். குடியரசு தலைவர் ஆட்சி நடந்தால் யார் வேந்தராக இருப்பார் என கலைஞர் எழுதியிருக்கிறார். சட்ட முன்வடிவுகள் குறித்து ஆளும்கட்சியாக ஒரு நிலைப்பாடு, எதிர்கட்சியாக ஒரு நிலைப்பாடு என்று இருக்கும் கட்சி திமுக.
துணைவேந்தர் நியமனம் குறித்து அதிமுக கொண்டு வந்ததை அன்றைக்கே ஏற்றுக்கொண்டு இருந்தால் இன்று இந்த பி்ரச்சினை வந்திருக்காது. 29 ஆண்டுகளுக்கு முன்பே இந்த சட்ட முடிவை கொண்டு வர முயன்றது அதிமுக. இப்போது இருக்கின்ற பிரச்சினை, துணைவேந்தர் நியமனம் குறித்து மாநில அரசு நியமனம் செய்பவர்களை ஆளுநர் ஏற்கவில்லை என்பதுதான். ஆளுநருக்கும், திமுக அரசுக்கும் இருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக இது தீர்மானம் கொண்டு வரப்படுகின்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் அமைக்க, விவசாயிகளின் விளைநிலங்களை கையகப்படுத்த அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. பண்படுத்த பூமியை பறித்து சிப்காட் அமைக்க முயற்சிக்கின்றனர். அறவழியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை பழிவாங்கும் விதமாக இந்த அரசு செயல்படுகின்றது. அதிமுக அறிக்கை கொடுத்த பின் 6 பேர் மீது குண்டர் சட்டம் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் அதிமுக ஆட்சியில் 1163 ஏக்கர் தரிசு நிலங்களை எடுத்து சிப்காட் அமைக்கப்பட்டது. தொழிப்பேட்டைக்கு புறம்போக்கு நிலங்களை எடுத்து சிப்காட் அமைக்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கின்றது. தமிழ்நாடு மீன்வளப் பல்கலைகழகம் குறித்து பேசிய போது தொலைக்காட்சி நேரலை இணைப்புகள் துண்டிக்கபட்டது. மீன்வளப்பல்கலை கழகத்திற்கு ஜெயலலிதா பெயர் வைக்கப்பட்டதை இந்த அரசு ரத்து செய்தது. ஒ.பி.எஸ் திமுகவிற்கு சென்றுவிட்டார். அவர் சூடு,சொரணை இல்லாமல் பேசி வருகின்றார். துணை வேந்தர் நியமனம் குறித்து கலைஞர், அன்பழகன் சொன்ன கருத்துக்கு எதிராக ஸ்டாலின் இதை செய்கின்றாரா? முதல்வராக இருப்பவர்களுக்கு தில், திராணி வேண்டும். இப்போது இருப்பவரிடம் இல்லை. பூனைகுட்டி வெளியில் வந்துவிட்டது என்று சபாநாயகர் சொல்கின்றார். பா.ஜ.கவில் இருந்து வெளியே வந்து விட்டோம். சிறுபான்மை வாக்கு அதிமுகவிற்கு வந்து விட்டது.
நான் கேட்ட கேள்விக்கு சட்டமன்றத்தில் பதில் அளிக்கவில்லை. தேர்தலுக்கு கால அவகாசம் இருக்கின்றது.
தேர்தல் நேரத்தில் நல்ல கூட்டணி அமையும். திமுக ஆட்சி அவலங்களை எடுத்து சொல்வோம். இதை மக்கள் நன்கு புரிந்து இருக்கின்றனர். கோவையில் ஒரு திட்டம் கூட செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை ஸ்டிக்கர் ஓட்டி திறந்து வைத்து கொண்டு இருக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். திமுக மட்டுமே சிறுபான்மை மக்களுக்கு செய்தது என்கின்றனர். ஆட்சிக்கு வந்த பின்னர் சிறுபான்மை மக்களுக்கு எதுவும் திமுக அரசு செய்யவில்லை. திமுக ஆட்சி இருக்கும் போது ஆயிரம் காவலர்கள் உக்கடம் பகுதியில் கொள்ளையடித்து சென்றனர். இதை சிறுபான்மை மக்கள் மறக்க மாட்டார்கள். சிறு குறு தொழில்கள் மின்கட்டணத்தால் பாதிக்கப்பட்டு இருக்கின்றது. இதற்கு நாளுமன்ற தேர்தலில் தக்க பதில் சொல்வார்கள்” எனத் தெரிவித்தார்.