“ரொம்ப கஷ்டமா இருக்கு; ஜெயலலிதா இருந்திருந்தா இப்படி விட்டிருக்கமாட்டார்” - சசிகலா
”இருக்கும் குறைந்த நாட்களில் சொன்னதை மக்களுக்கு செய்யப்பாருங்கள், இல்லையெனில் 2026 இல் நாங்கள் வந்து மக்களை பார்த்துக் கொள்கிறோம்”-சசிகலா
அம்மாவின் வழியில் மக்கள் பயணம் என்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை சசிகலா நடத்தி வரும் நிலையில் நெல்லை மாவட்டத்தில் ஐந்து நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். முதல் நாளான இன்று நெல்லை மாநகர் பகுதிகளில் உள்ள தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மக்கள் சந்திப்பு பயணத்தை துவங்கினார். பின்னர் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் மற்றும் டவுண் காட்சி மண்டபம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் மத்தியில் கொட்டும் மழையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் வழியில் ஜெயலலிதா ஆட்சி நடத்தி பொதுமக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செய்து கொடுத்தார். ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து நலன்களையும் திட்டங்களாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஏழை எளிய மக்களுக்காக செய்து கொடுத்திருந்தார். ஆனால் இந்த மக்களுக்கு அரசாங்கம் எதுவுமே செய்யவில்லை. ஆட்சியில் இருக்கும் திமுக நாள்தோறும் மக்களை கசக்கி பிழிந்துக் கொண்டு இருக்கிறது. சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. யாருக்குமே பாதுகாப்பு இல்லை. அறிவிக்கப்படாத மின்வெட்டு வேறு. 60 மாதத்தில் 40 மாதம் இந்த ஆட்சி கடந்துவிட்டது. இந்த காலத்தில் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. கல்லணை பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 4 ஆயிரம் மாணவிகள் படிக்கும் சூழலில் அந்த பள்ளிக்கு கழிப்பிட வசதி இல்லை என்கின்றனர். மாநகராட்சியை பொறுத்தவரை ஒரு மேயர் இப்பதான் போனார். அவர்களுக்குள் அடிதடி சண்டை தான் என்று இருந்தால் இவர்கள் எப்படி மக்களுக்கு நல்லது செய்ய முடியும்? ஒரு பணியும் நடக்கவில்லை.
வரும் வழியில் மக்கள் கஷ்டங்களை தான் பார்த்து வருகிறேன். மனதிற்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது. ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி விட்டிருக்கமாட்டார். முதலில் இந்த மாநகராட்சியில் என்ன வேலைகள் நடக்கிறது என்று முதல்வர் கேட்டு அதை செய்ய வைக்க வேண்டும். கடந்த டிசம்பரில் பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அந்த சமயத்தில் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த மக்களை அவர்கள் திரும்பி பார்க்கவே இல்லை. இந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சி அல்ல, 39 ஆண்டுகள் ஜெயலலிதா கூடவே பயணித்துள்ளேன், அதனால் அரசாங்கத்தில் என்ன செய்ய வேண்டும்? எப்படி மக்களுக்கு போய் சேர வேண்டும் என்பது எனக்கு தெரியும். இந்த ஆட்சியில் பேசுவது முழுவதும் பொய். மேடைப் போட்டு பொய் சொல்கின்றனர். தேர்தலுக்கு முன் சொன்ன எதையுமே நிறைவேற்றவில்லை. ரேஷன் கடைகளில் பருப்பு பாமாயில் என எதுவும் தற்போது கொடுக்கப்படவில்லை. ரேஷன் கடைகளில் வழங்கும் அரிசி எடை குறைவாக தரமற்ற முறையில் வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இருக்கும் குறைந்த நாட்களில் சொன்னதை மக்களுக்கு செய்யப்பாருங்கள், இல்லையெனில் 2026 இல் நாங்கள் வந்து மக்களை பார்த்துக் கொள்கிறோம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை, ஆனால் 10 லட்சம் பேருக்கு வேலை கொடுத்துவிட்டோம் என்கின்றனர். ஜெயலலிதா ஆட்சியில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருந்தது. அதை கீழே இறங்கி கொண்டு வந்துவிட்டனர். ஜெயலலிதா வழியில் வந்தால் சொல்றது ஒன்று. செய்வது ஒன்று என்று இருக்க மாட்டோம். என்ன நம்மால் முடியும் என்பதை செய்வதற்கான வேலையை பார்ப்போம். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். லாரியை வைத்து கொல்ல பார்த்தனர், 4 வருடம் சிறையில் அடைத்தனர். ஏனென்றால் நான் முதல்வராக வந்துவிடக்கூடாது என்பதால்.. அதனால் தான் நான் துணிந்து பேசுகிறேன். திமுக கூட்டணியில் அனைத்து கட்சியும் இருக்கின்றனர். அதனால் திமுக ஆட்சியை விமர்சிப்பது இல்லை. பெண்கள் தனியாக வெளியே செல்ல முடியவில்லை, இந்த மாவட்டத்தில் மட்டும் 4 ஆண்டு காலத்தில் 240 கொலை நடந்துள்ளது. காவல்துறையை சரியாக செயல்படாமல் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை, ஆனால் கடன் மட்டும் 8 லட்சம் கோடிக்கு மேல் வாங்கி வைத்துள்ளனர், இதற்கெல்லாம் முடிவு கட்டுவது மக்கள் கையில் தான் உள்ளது என்று பேசினார்.