Ponmudi: மிரட்டிவிட்ட ஸ்டாலின்: உடனே பகிரங்க மன்னிப்பு கேட்ட பொன்முடி!
Ponmudi Apologized: சைவ மற்றும் வைண சமயம் குறித்து சர்ச்சை குறித்து பேசிய திமுக அமைச்சர் பொன்முடி பேசிய நிலையில், தற்போது பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

சைவ மற்றும் வைணவ சமயம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக அமைச்சர் பொன்முடிக்கு எதிர்க்கட்சியினர் மட்டுமன்றி, திமுக கட்சியினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
பொன்முடி சர்ச்சை பேச்சுக்கு கடும் எதிர்ப்பு:
திமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகவும், தமிழ்நாட்டின் அமைச்சராகவும் பதவி வகித்த வந்த பொன்முடி, சில தினங்களுக்கு முன்பு, சைவ மற்றும் வைணவ சமயங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இவரின் சர்ச்சை பேச்சின் வீடியோவானது, சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து இவரது பேச்சுக்கு கடுமையாக எதிர்ப்பு எழுந்தது. அதிமுக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமன்றி, திமுக கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கட்சி பதவி பறிப்பு:
இதையடுத்து பொன்முடியை, கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கம் செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து அமைச்சர் பதவியும் பறிக்கப்பட வேண்டும் என எதிர்ப்புகள் வந்தன.

இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது, “ பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கீழ்த்தரமான முறையில் ஆபாசமாகப் பேசியுள்ள விடியா திமுக அரசின் அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணியின் சார்பில் சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி கனிமொழி தெரிவித்த கண்டனத்தில், அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது என தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே பலமுறை சர்ச்சை பேச்சு தொடர்பாக அமைச்சர் பொன்முடி பலமுறை சிக்கிய நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் வரும் நிலையில், கட்சியின் பெயரை கெடுக்கும் வகையில் ஏன் தொடர்ந்து நடந்து கொள்கிறீர் என தற்போது கடுமையாக எச்சரித்ததாக விடுத்ததாக கூறப்படுகிறது.
மன்னிப்பு கேட்ட பொன்முடி:
இதையடுத்து, தற்போது அமைச்சர் பொன்முடி பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்கிறார். அவர் தெரிவித்துள்ளதாவது, “ தவறான பொருளில், தவறான சொற்களை பயன்படுத்தி நான் பேசியதற்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு, இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன் என தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், பொன்முடியின் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்ட நிலையில், அமைச்சர் பதவியும் பறிக்கபடுமா என கேள்வி எழுந்து வந்த நிலையில், மன்னிப்பு கோரியதன் மூலம் அமைச்சர் பதவி பறிக்கப்படாது எனவும், இது பொன்முடிக்கு கொடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கை எனவும் தகவல் தெரிவிக்கின்றன.





















