தண்ணீரும், பாலும் கொடுக்கமுடியாத கையாலாகாத திமுக அரசு.. சிவி சண்முகம் காட்டம்
சென்னை வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களுக்கு தண்ணீரும், பாலும் கொடுக்க முடியாமல் இந்த அரசு கையாலாகாத அரசாக உள்ளது.
விழுப்புரம் அருகிலுள்ள பில்லூர் கிராமத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் தெருமுனைப் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்:
”சென்னை வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களுக்கு தண்ணீரும், பாலும் கொடுக்க முடியாமல் இந்த அரசு கையாலாகாத அரசாக உள்ளது. சென்னையில் அரை லிட்டர் பால் இருநூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. காசு கொடுத்தாலும் இன்றைக்கு பால் இல்லை என்ற நிலையை உள்ளது. புயலுக்குப் பிறகு பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு தயாராக இருந்திருக்க வேண்டும். பொதுமக்களின் போராட்டத்திற்குப் பிறகு கர்நாடகாவில் இருந்து 2 லட்சம் லிட்டர் பால் வாங்கி ஆவின் மூலமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏன் ஒரு முதலமைச்சர், பால்வளத்துறைக்கு ஒரு அமைச்சர் என கேள்வி எழுப்பினார். தமிழகம் முழுவதும் உள்ள பாலை கொள்முதல் செய்து சென்னை மக்களுக்கு கொடுத்து இருக்கலாம் இதை ஏன் அரசு செய்யவில்லை. கர்நாடகாவிடம் தண்ணீருக்கு கெஞ்சியது, காலம் மாறி தற்போது பாலுக்கும் கெஞ்சும் நிலைக்கு தமிழகம் உள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சாராய ஆலைகள் மூடப்படும் என கனிமொழி தெரிவித்தார். ஆனால் சாராய அலைகளை நடத்துவது திமுகவினர் தான் என குற்றம் சாட்டினார். ஒரிசாவில் சாராய அலைகளின் சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்யும் ஒன்றிய அரசு, ஏன் திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகளில் சோதனை நடத்தவில்லை என கேள்வி எழுப்பினார். இதிலிருந்து தெரிகிறது திமுகவும் பிஜேபியும் கூட்டு வைத்துள்ளனர் என்பது. தமிழ்நாட்டில் மணல் விற்பனையில் 4,703 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக ஒன்றிய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரை அதிலும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் பிஜேபி நாடகமாடுகிறது. திமுகவை மிரட்டி வைக்க இதனை பயன்படுத்துகிறது.
மக்களைப் பற்றி துளியும் திமுகவுக்கு அக்கறை இல்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. ஐந்தாண்டுகள் நிறைவடையப் போகும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் பெயர் பொதுமக்களுக்கு தெரியவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரச்சனை குறித்து இதுவரை பேசவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. சட்டமன்ற உறுப்பினர் கூட பொது மக்களின் பிரச்சனை குறித்து கேட்பதில்லை. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” என்றார்
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் 33 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று சென்றார்கள். ஆனால் இதுவரை தமிழ்நாட்டின் பிரச்சினை குறித்து எதுவும் பேசியதும் இல்லை, மக்களுக்கு எந்த பயனும் இல்லை. தமிழ்நாட்டில் திமுக, பிஜேபியை மதவாத கட்சி என விமர்சனம் செய்கிறது, ஆனால் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய அரசோடு இணக்கமாக இருக்கிறார்கள் என விமர்சனம் செய்தார்.