டெல்லி அரசு அதிகாரிகள் மசோதா - மக்களவையில் காங்கிரஸ், தி.மு.க. கடும் எதிர்ப்பு
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள டெல்லி அதிகாரிகள் மசோதாவிற்கு காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
டெல்லி அரசு அதிகாரிகள் நியமன அதிகாரம் தொடர்பான மசோதானை மத்திய அரசு இன்று மக்களவையில் தாக்கல் செய்தது. அந்த மசோதா தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா அரசு அதிகாரிகள் நியமனம் தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று பேசினார்.
மத்திய அரசு கொண்டு வந்த இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்தது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழு தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக பதிவு செய்தார். தி.மு.க. சார்பிலும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நம்பிக்கையில்லா தீர்மானம் நிலுவையில் உள்ளபோது மசோதாவை விவாதத்திற்கு கொண்டு வருவது தவறு என்று டி.ஆர்.பாலு கூறினார்.
அதிகார மோதல்:
நாட்டில் பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களுக்கும், அந்த மாநில அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. நாட்டின் தலைநகரான டெல்லியிலும் இந்த நிலை நீடித்து வருகிறது. அந்த மாநிலத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும், அம்மாநில துணை நிலை ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து அதிகார மோதல் போக்கு நிலவி வருகிறது.
டெல்லியில் ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அரசு அதிகாரிகளை நியமிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. மத்திய அரசு முழு அதிகாரத்தையும் எடுத்துக்கொள்ள முனைந்ததற்கு எதிராக டெல்லி மாநில அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் உண்டு என்று அதிரடியான தீர்ப்பு வழங்கியது.
மக்களவையில் மசோதா:
உச்சநீதிமன்ற தீர்ப்பு மத்திய அரசுக்கு பின்னடைவாக அமைந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. மேல்முறையீடு செய்தது மட்டுமின்றி உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக அவசர சட்டம் ஒன்றையும் கொண்டு வந்தது. அந்த சட்டப்படி, டெல்லியில் அதிகாரிகள் நியமனம் மற்றும் மாறுதல்களை மேறகொள்ள மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உண்டு என்று இயற்றப்பட்டிருந்தது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததால் அந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது.
மத்திய அரசால் அவசர சட்டம் நிறைவேற்றப்படும்போது, அந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மசோதாவாக நிறைவேற்ற வேண்டியது மரபு ஆகும். இதன்படி, மத்திய அரசு சார்பில் டெல்லி அதிகாரிகள் நியமன மசோதாவை உள்துறை அமித்ஷா தாக்கல் செய்தார்.
பா.ஜ.க. அரசை வீழ்த்த வேண்டும் என்று அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணி இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த மசோதாவால் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசின் அதிகாரம் பறிபோகும் ஆபத்து என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Abp Exclusive : காலாவதியான J&J காப்புரிமை.. மலிவு விலையில் காசநோய் மருந்துகளை இந்தியாவுக்கு கொண்டுவரும் 3 நிறுவனங்கள்..
மேலும் படிக்க:Independence Day 2023: இந்திய வரலாற்றை பற்றி தெரிந்துகொள்ள சிறந்த புத்தகங்களின் பட்டியல் இதோ..