Arvind Kejriwal : “அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்கிறார்” டெல்லியின் அடுத்த முதல்வர் இவரா..?
பாஜக ஆளாத மாநில முதல்வர்களுக்கு மத்திய பாஜக அரசு தன்னுடைய புலனாய்வு அமைப்புகள் மூலம் நெருக்கடி கொடுத்து வருவது பிரிட்டீஷ் ஆட்சியாளர்களை விட மோசமானது - கெஜ்ரிவால்

டெல்லி முதல்வராக உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்திருக்கும் நிலையில், டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
ஏன் ராஜினாமா ? என்ன காரணம் ?
2021-2022 ஆம் ஆண்டிற்கான மதுபான கொள்கை திருத்தப்பட்டதில் பெரும் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த புகார் ஆம் ஆத்மி கட்சியின் அஸ்திவாரத்தையே அசைத்து பார்த்துள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக வழக்கு பதிவு செய்த மத்திய புலனாய்வு அமைப்புளான சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்டவை தீவிர விசாரணைக்கு பிறகு டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை அதிரடியாக கைது செய்தது. அதேபோல், அந்த கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங்கும் கைது செய்யப்பட்டார்.
நிபந்தனையால் ராஜினாமாவா ? முதல்வராக இருந்தும் அதிகாரமில்லை..!
தொடர்ந்து அமலாக்கத்துறை பல்வேறு முறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இறுதியாக அவரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பிறகு உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால், நிபந்தனைகளை விதித்தது. அதன்படி, முதல்வராக இருந்தாலும் முதல்வர் அலுவலகத்திற்கோ தலைமைச் செயலகத்திற்கோ அவர் செல்லக் கூடாது, துணை நிலை ஆளுநரின் ஒப்புதல் இல்லாத கோப்புகளில் அரவிந்த் கெஜ்ரிவால் கையெழுத்து போடக்கூடாது உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகள் அவருக்கு விதிக்கப்பட்டன.
கொள்கையே முக்கியம் ; பதவி அல்ல - கெஜ்ரிவால்
இதனையடுத்து, ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால், தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும், மீண்டும் மக்கள் மன்றத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே முதல்வர் நாற்காலியில் அமருவேன் என்றும் அறிவித்தார். மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு லோக்பால் மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்ற முடியாத காரணத்தால், 49 நாட்கள் முதல்வர் பதவியில் இருந்து விலகியிருந்தேன் என்பது உங்களுக்கெல்லாம் நினைவிருக்கும் என்றும் எனக்கு பதவியை விட கொள்கையே முக்கியம் என்றும் பேசினார். அதோடு, அதிகாரத்தை பிடிப்பதற்காக மட்டுமே அரசியலுக்கு தான் வரவில்லையென்றும் என்றுமே முதல்வர் நாற்காலிக்கு நான் ஆசைப்பட்டதில்லை என்றும் குறிப்பிட்டார்.
மத்திய பாஜக அரசை சாடிய கெஜ்ரிவால்
மேலும், பாஜக ஆளாத மாநில முதல்வர்களுக்கு மத்திய பாஜக அரசு தன்னுடைய புலனாய்வு அமைப்புகள் மூலம் நெருக்கடி கொடுத்துவருவதாகவும் குறிப்பாக, கர்நாடக முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் பினராய் விஜயன், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்டோர் மத்திய பாஜக அரசால் பழிவாங்கப்பட்டு வருவதாகவும் இது இந்தியாவை அடிமையாக்கி வைத்திருக்க நினைத்த பிரிட்டீஷ் ஆட்சியாளர்களை விட கொடுமையான முறை என்று அந்த கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்திருந்தார்.
குற்றமற்றவன் என்பதை மக்கள் நிரூபணம் செய்வார்கள்
அதோடு, நீதிமன்றத்தால் தற்போது ஜாமீன் பெற்றிருக்கும் நான் என்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன் என்றும் நான் குற்றமற்றவன் என்பதை மக்கள் நம்பி எனக்கு மீண்டும் வாக்களித்து வெற்றி பெற செய்தால் மட்டுமே மீண்டும் முதல்வர் பதவியில் அமருவேன் என்று சூளுரைத்தார். இதனால், முதல்வர் பதவியில் இருந்து கெஜ்ரிவால் இன்று அல்லது நாளை ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது.
டெல்லியின் அடுத்த முதல்வர் யார் ?
அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்தால், டெல்லியின் அடுத்த முதல்வராக, கெஜ்ரிவால் சிறையில் இருக்கும்போது பல்வேறு பொறுப்புகளையும் கவனித்து வந்த பெண் அமைச்சர் ஆதிஷி முதல்வராக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது அமைச்சர்களாக இருக்கும் கோபால் ராய், இம்ரான் ஹூசைன், கைலாஷ் கெலாட், சவுரப் ப்ரத்வாஜ் ஆகியோரில் ஒருவரை கெஜ்ரிவால் முதல்வர் பதவியில் அமரவைப்பார் என்று கூறப்படுகிறது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

