ஒரு பிரதமர் என்றும் பாராமல்...மோடி பிறந்தநாளை வேலையில்லா திண்டாட்ட நாளாக அனுசரிக்கும் காங்கிரஸ்!
"செப்டம்பர் 17 ஆம் தேதியை நன்றாக குறித்துக் கொள்ளுங்கள். இது தேசிய வேலையில்லா திண்டாட்ட நாள். இது கோடிக்கணக்கான இளைஞர்களின் வேலையை பறித்த இளைஞர்களுக்கு எதிரான பிரதமர் மோடியின் பிறந்தநாள்."
நாளை செப்டம்பர் 17. நேரெதிர் கொள்கை கொண்ட இருவர் பிறந்தநாள். ஒருவர் தமிழ்நாட்டில் சமூக நீதியை நிலைநாட்டிய தந்தை பெரியார். மற்றொருவர் பிரதமர் நரேந்திர மோடி. இதில் தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 17 ஆம் தேதி அரசு சார்பில் சமூக நீதி நாளாக கொண்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
மற்றொரு புறம் பிரதமர் மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதி நாடு முழுவதும் தேசிய வேலையில்லா திண்டாட்ட நாளாக கடைபிடிக்கப்படும் என திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் அறிவித்து உள்ளது. இதற்காக சமூக வலைதளங்களில் தீவிர பிரச்சாரத்தை காங்கிரஸ் முன்னெடுத்து இருக்கிறது. பிரதமர் மோடியின் பிறந்தநாளையும், அவரது அரசியல் பயணம் 20 ஆண்டுகளை கடந்ததை முன்னிட்டும் சேவா சமர்பன் அபியான் என்ற திட்டத்தின் கீழ் 20 நாட்கள் மக்கள் நலப் பணிகளில் ஈடுபட இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி அறிவித்து இருந்தது.
இதற்கு எதிர்விணையாற்றும் வகையில் காங்கிரஸ் பிரதமர் மோடியின் பிறந்தநாளை தேசிய வேலையில்லா திண்டாட்ட நாளாக கடைபிடிக்கிறது. இதுகுறித்து இளைஞர் காங்கிரஸ் தெரிவிக்கையில், “வேலையில்லா திண்டாட்டம் காரணமாக நாடு முழுவதும் கோடிக்கணக்கான இளைஞர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். நாடு முழுவதும் 32 லட்சம் பேர் தங்கள் வேலையை இழந்து தவிக்கின்றனர். அதே நேரம் பிரதமர் நரேந்திர மோடியின் நண்பர்களான பெரு முதலாளிகளின் செல்வம் இந்த கொரோனா பெருந்தொற்று காலத்திலும் பல மடங்கு பெருகியுள்ளது. பகோடா பொருளாதாரம் (PAKODANOMICS) பேசியது போதும். இந்திய நாட்டின் இளைஞர்களுக்கு நிரந்தரமான வேலையை மத்திய அரசு வழங்க வேண்டும்.” என குறிப்பிட்டு உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் அன்று நாட்டில் வேலையின்றி தவிக்கும் இளைஞர்களின் துயரங்களையும், வேலையில்லா திண்டாட்டத்தால் நாடு எதிர்கொண்டுள்ள அபாயங்களையும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த தேசிய இளைஞர் காங்கிரஸ் முடிவு செய்து உள்ளது.
தேசிய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி.ஸ்ரீநிவாஸ் இதுகுறித்து கூறுகையில், “இந்திய நாட்டின் இளைஞர்களை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு வேலை இன்றி வீதியில் அலைய வைத்து உள்ளது. இளைஞர்களுக்கு இந்தியாவில் 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என தேர்தல் வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி தற்போது மவுனம் காக்கிறார். செப்டம்பர் 17 ஆம் தேதியை நன்றாக குறித்துக் கொள்ளுங்கள். இது தேசிய வேலையில்லா திண்டாட்ட நாள். இது கோடிக்கணக்கான இளைஞர்களின் வேலையை பறித்த இளைஞர்களுக்கு எதிரான பிரதமர் மோடியின் பிறந்தநாள்.” என சாடியுள்ளார்.