CM Stalin Speech: வள்ளலாரைப் பற்றி ஒருவர் உளறுகிறார் - ஆளுநரை சாடிய முதலமைச்சர்?
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அறிவாலையத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், வள்ளலாரைப் பற்றி ஒருவர் உளறி வருகிறார் என கூறியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அறிவாலையத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், வள்ளலாரைப் பற்றி ஒருவர் உளறி வருகிறார் என கூறியுள்ளார்.
கடந்த வாரத்தில் ஆளுநர் ரவி வள்ளலார் குறித்து கருத்து கூறியிருந்த நிலையில், ஆளுநரை சாடும் வகையில் முதலமைச்சர் பேசியுள்ளதாக திமுக வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகிறது.
கடலூர் மாவட்டம், வடலூரில் திருவருட் பிரகாச வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழா ஜூன் 21ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சனாதன தர்மத்தை வள்ளலார் பின்பற்றியதாகப் குறிப்பிட்டார்.
குறிப்பாக, "பத்தாயிரம் ஆண்டுகால பாரம்பரியத்தைக் கொண்ட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் எனவும், காழ்ப்புணர்ச்சியாலும் அறியாமையாலும் சிலர் சனாதன தர்மத்தைப் பற்றி தவறான எண்ணத்தை கொண்டிருக்கிறார்கள்.
வெளிநாட்டிலிருந்து ஆங்கிலேயர்கள் மூலம் கொண்டுவரப்பட்ட வழிபாட்டு முறை வந்த பிறகுதான் இந்தியாவில் பிரச்னை ஏற்பட்டது. அதனால் நாம் யார் என்ற அடையாளம் தொலைந்து போனது என குறிப்பிட்டு பேசினார்.
ஆளுநரின் இந்த கருத்து தமிழ்நாடு அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. திமுக மற்றும் திமுக கூட்டணிக் கட்சியினர், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலினிடம் இருந்து எந்த பதிலும் வராத நிலையில், அண்ணா அறிவாலையத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பேசுகையில் ஆளுநரின் பெயரைக் குறிப்பிடாமல், வள்ளலார் குறித்து ஒருவர் உளறி வருகிறார், அவர் யார் என்பது குறித்து பேச விரும்பவில்லை” என குறிப்பிட்டார்.
மேலும் முதலமைச்சர் பேசுகையில், ”தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி எழுச்சியோடு நடைபெறுகிறது. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் ஒரு ஆட்சி மத்தியிலும் தேவை, பாஜக அரசு தேர்தலின் போது அறிவித்த திட்டங்களை நிறைவேற்றவில்லை” என குற்றம்சாட்டினார்.
மேலும் முதலமைச்சர் பேசுகையில், ஒன்றிய அரசு மக்கள் விரோத போக்கோடு செயல்படுகிறது, மதத்தையும் சனாதனத்தையும் மக்களிடம் திணிக்க சர்வாதிகார ஆட்சியை பாஜக நடத்துகிறது என குறிப்பிட்டார். ஏற்கனவே கிரிமினல் சட்டம் மற்றும் பொது சிவில் சட்டம் உள்ள நிலையில் புதிய பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்து பாஜக ஆட்சியை, அவர்களின் கொள்கையை எதிர்பவர்களை பழிவாங்க முயற்சி செய்கிறார்கள் என சாடினார்.