![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
பாஜகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு? சந்திரபாபு நாயுடு போடும் ஸ்கெட்ச்.. தொடரும் சஸ்பென்ஸ்!
மத்தியில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு சந்திரபாபு நாயுடுவின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால், அரசில் இடம்பெறாமல் மோடி அரசுக்கு ஆதரவு அளிப்பது குறித்து சந்திரபாபு நாயுடு யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
![பாஜகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு? சந்திரபாபு நாயுடு போடும் ஸ்கெட்ச்.. தொடரும் சஸ்பென்ஸ்! Chandrababu Naidu may not want to be part of Modi cabinet but give it outside support here is the reason why பாஜகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு? சந்திரபாபு நாயுடு போடும் ஸ்கெட்ச்.. தொடரும் சஸ்பென்ஸ்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/07/4f309c23607920d68f844989a2239ee31717776714530729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து நொடிக்கு நொடி அரசியல் நகர்வுகள் மாறி வருகின்றன. கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கும் விதமாக வெளியான தேர்தல் முடிவுகள் பல ஆச்சரியங்களை தந்துள்ளன. எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
கூட்டணி கட்சிகளை நம்பியுள்ள பாஜக: ஆனால், ஆட்சி அமைப்பதற்கு போதுமான ஆதரவு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்துள்ளது. அதாவது, 240 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருக்கும் சூழலில், ஆட்சி அமைக்க மேலும் 32 எம்பிக்களின் ஆதரவு தேவை. பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசத்திற்கு 16 எம்பிக்களும் ஐக்கிய ஜனதா தளத்திற்கு 12 எம்பிக்களும் உள்ளனர்.
இதை தவிர சிராஜ் பாஸ்வானுக்கு 5 எம்பிக்கள் உள்ளனர். எனவே, இந்த முறை மத்தியில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு, இவர்களின் தேவை. தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் ஐக்கிய ஜனதா கட்சியின் தலைவர் நிதிஷ் குமாரும் பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தந்துள்ள நிலையில், அவர்கள் பல முக்கியமான துறைகளை கேட்பதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.
அதுமட்டும் இன்றி, சபாநாயகர் பதவியை தெலுங்கு தேசம் கட்சி கேட்பதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், மத்திய அமைச்சரவையில் தெலுங்கு தேசம் கட்சி இடம்பெறாது என தகவல் வெளியாகி வருகிறது. பாஜகவுக்கு சந்திரபாபு நாயுடு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு தர உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
சந்திரபாபு நாயுடு போடும் செம்ம ஸ்கெட்ச்: மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்துவிட்டு, தன்னை நம்பி பாஜக இருக்கும்படி செய்ய சந்திரபாபு நாயுடு விரும்புவதாக கூறப்படுகிறது. கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், வாய்பாய் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தவர் சந்திரபாபு நாயுடு. அமைச்சரவையில் இடம்பெற மறுத்துவிட்டார்.
எனவே, இதே வியூகத்தை தற்போது கடைபிடிக்க உள்ளதாக பேசப்படுகிறது. வாஜ்பாய் அரசில் இடம்பெறவில்லை என்றாலும் அந்த அரசில் செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்தார் சந்திரபாபு நாயுடு. அரசின் ஒவ்வொரு முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது சந்திரபாபு நாயுடுவை ஆலோசிக்க வேண்டியிருந்தது.
அப்துல் கலாமை குடியரசு தலைவராக ஆக்குவதிலும் சந்திரபாபு நாயுடு முக்கிய பங்காற்றினார். பலக்கட்ட ஆலோசனைக்கு பிறகே, சபாநாயகர் பதவியை ஏற்று கொண்டார். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஜி.எம்.சி. பாலயோகி, கடைசி நேரத்தில் சபாநாயகர் பதவிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
மத்திய அமைச்சரவையில் இடம்பெற போகிறோமா? இல்லையா? என்பது குறித்து சந்திரபாபு நாயுடு இன்னும் தனது எம்பிக்களிடம் பேசவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த தகவலுக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் அளித்த பேட்டி.
"அமைச்சரவை பதவிகளை வாங்குவதில் கட்சிக்கு விருப்பம் இல்லை" என நாரா லோகேஷ் கூறியிருந்தார். ஆந்திர பிரதேசத்தில் ஆட்சி செய்யும்போது மத்தியில் தெலுங்கு தேசம் கட்சியில் இன்னொரு அதிகார மையம் உருவாவதில் சந்திரபாபு நாயுடுவுக்கு விருப்பம் இல்லை என கூறப்படுகிறது.
கடந்த காலத்தில் மற்ற கட்சி எம்.பி., எம்.எல்.ஏக்களை பாஜக தன் பக்கம் இழுத்திருக்கிறது. எனவே, இதை கருத்தில் கொண்டு சந்திரபாபு நாயுடு இந்த முடிவை எடுக்கலாம் என கூறப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)