Prakash Raj: "ஆந்திரா, பீகார் பட்ஜெட் இது! மற்ற மாநிலங்களுக்கு அல்வா" பிரகாஷ்ராஜ் கடும் கண்டனம்
மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டை பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சித்துள்ளார். குறிப்பாக, ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களுக்கு அல்வா கொடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
நிதிஷ்குமார் – சந்திரபாபு நாயுடு உதவியுடன் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள மோடி அரசு, இந்த ஆட்சியின் முதல் பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தனர். கூட்டணி அரசின் உதவியுடன் ஆட்சியைப் பிடித்துள்ள மத்திய அரசு 2024-2025ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பீகார் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு ஏராளமான சிறப்புத் திட்டங்களை அறிவித்துள்ளது.
மற்ற மாநிலங்களுக்கு அல்வா:
ஆனால், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மற்ற தென்னிந்திய மாநிலங்களுக்கும், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கும் பட்ஜெட்டில் போதியளவு நிதி ஒதுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், மத்திய அரசின் பட்ஜெட்டை விமர்சித்து பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது, ஆந்திரா – பீகார் பட்ஜெட் வந்துள்ளது. மற்ற மாநிலங்கள் இதை அனுபவிக்கவும் என்று அல்வா புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
aNDhra-bihAr budget unveiled…rest of the state’s can enjoy this … #justasking pic.twitter.com/aJ4tdwr9tA
— Prakash Raj (@prakashraaj) July 23, 2024
தமிழ்நாடு பெயர் புறக்கணிப்பு:
மோடி அரசை மிக கடுமையாக விமர்சித்து வருபவர் பிரகாஷ்ராஜ். பிரகாஷ் ராஜ் கடந்த சில ஆண்டுகளாக மோடி தலைமையிலான மத்திய அரசை மிக கடுமையாக விமர்சித்து வருகிறார். கடந்த மக்களவைத் தேர்தலிலும் பா.ஜ.க.விற்கு எதிரான தனது கருத்துக்களையும் மிக வலுவாக பதிவு செய்தார். 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெங்களூரில் சுயேட்சையாக போட்டியிட்டார். இந்த சூழலில், மத்தியில் ஆட்சியை 3வது முறையாக கைப்பற்றியுள்ள மோடி அரசின் பட்ஜெட்டை தற்போது அவர் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசின் பட்ஜெட்டிற்கு இந்தியா கூட்டணி கட்சிகளும் கடும் விமர்சனத்தை தெரிவித்துள்ளனர். ஆந்திரா மற்றும் பீகாரைத் தவிரவும், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கும் எந்தவொரு சிறப்பு அறிவிப்புகளும், திட்டங்களும் இல்லை என்று விமர்சித்துள்ளனர். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு என்ற வார்த்தையே இடம்பெறாததற்கு தமிழ்நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்கள் மிகக்கடுமையாக எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
மத்திய பட்ஜெட்டில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு போதிய திட்டங்கள் ஒதுக்கப்படாததை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க. கூட்டணி கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.