நட்ட நடுரோட்டில் பனியனுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. - காரணம் இதுதான்..!
தெலங்கானாவில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் ஆளுங்கட்சியின் எம்.எல்.சி.க்கு எதிராக சாலையில் பனியனுடன் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்தியாவின் மிக முக்கியமான மாநிலங்களில் ஒன்றாக இருப்பது தெலங்கானா. இந்த மாநிலத்தில் தற்போது சந்திரசேகர் ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ். கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், அந்த மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
தெலங்கானா சட்டமன்ற தேர்தல்:
ஆட்சியை தக்க வைக்க பி.ஆர்.எஸ். கட்சியும், ஆட்சியை பிடிக்க எதிர்க்கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த மாநிலத்தில் உள்ள மொத்தம் 119 தொகுதிகளில் 115 தொகுதிகளுக்கு பி.ஆர்.எஸ். கட்சிசத் தலைமை ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துள்ளது. முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், பி.ஆர்.எஸ். கட்சியில் வேட்பாளர் அறிவிக்கப்படாத 4 தொகுதிகளுக்கு கட்சிக்குள் கடும் போட்டி நிலவி வருகிறது. ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக அந்த தொகுதியில் இருப்பவர்களும், புதியதாக அந்த தொகுதியில் போட்டியிட விரும்புபவர்களும் என பி.ஆர்.எஸ். கட்சியில் உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் தீவிரமாக வெடித்த வருகிறது.
அரைநிர்வாணமாக போராடிய எம்.எல்.ஏ.:
வேட்பாளர் அறிவிக்கப்படாத 4 தொகுதிகளில் ஜங்காவ்ன் தொகுதியும் ஒன்றாகும். இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக தற்போது ஆளுங்கட்சியின் முத்திரெட்டி யதகிரி உள்ளார். இவர் வரும் தேர்தலில் தனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதேசமயம் இந்த தொகுதியில் போட்டியிட எம்.எல்.சி. பல்லாராஜேஸ்வரும் ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. இதனால், இவர்கள் இருவருக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில், எம்.எல்.சி. பல்லா ராஜேஸ்வருக்கு எதிராக தனது ஆதரவாளர்களுடன் கடந்த சனிக்கிழமை எம்.எல்.ஏ. முத்திரெட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அந்த ஆர்ப்பாட்டத்தில் ஜாங்காவன் தொகுதியை விட்டு வெளியே போ என்று ராஜேஸ்வருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது. அப்போது, போராட்டத்தின்போது திடீரென தனது ஆதரவாளர்களுடன் எம்.எல்.ஏ. முத்திரெட்டி சட்டையை கழட்டி வெறும் பனியனுடன் அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார்.
சீட்டுக்காக மோதல்:
மேலும், எம்.எல்.சி. ராஜேஸ்வர் தொகுதியில் உள்ள பட்டியலின மக்களுக்கு எதிரானவர் என்றும், அவர் பட்டியலின மக்களின் துரோகி என்றும் சரமாரியான குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இந்த போராட்டம் ஜாங்காவ்ன் தொகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு நடைபெற்றது.
கடந்த ஜூன் மாதம் எம்.எல்.ஏ. முத்திரெட்டி மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியதால் அவருக்கு சீட்டு ஒதுக்குவதில் சிக்கல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, எம்.எல்.ஏ.வின் மகள் துலிஜா பவானி 1270 சதுர அடி பொது நிலத்தை அவரது பெயருக்கு பதிவு செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அந்த நிலத்தின் மதிப்பு சுமார் ஆயிரம் கோடி ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, அவருக்கு சீட்டு ஒதுக்குவதில் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் எம்.எல்.சி. ராஜேஸ்வர் எம்.எல்.ஏ. சீட்டைப் பெறுவதற்கு காய்களை நகர்த்தி வருகிறார் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டது முதல் தெலங்கானாவில் நாளுக்கு நாள் பி.ஆர்.எஸ். கட்சியில் மோதல் வலுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Udhayanidhi Stalin: சனாதனத்தைத்தான் பேசினேன்; பேசுவேன்; மோடி பேசுனதுக்கு அர்த்தம் என்ன? - சரமாரியாக சாடிய அமைச்சர் உதயநிதி