பாஜக கிளப்பிவிட்டதா? எப்போ? எங்கே? டெஸ்ட் பண்ணிட்டு எங்க மேல பழியா? - உதயநிதிக்கு அண்ணாமலை கேள்வி!
சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட பிறகு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டார்
இரண்டு பருக்கைகளை சாப்பிட்டு பார்த்தால் எப்படி அதன் தரம் தெரியும் ? உண்மையாக அம்மா உணவகத்தின் தரம் தெரிய வேண்டுமென்றால், அரசு விழாக்களிலும் சட்டமன்றத்திலும் அனைவருக்கும் மதிய உணவாக அம்மா உணவகத்தில் இருந்து தான் உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்
முப்பெரும் விழா
சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: முதலமைச்சரை பொறுத்தவரையில் ஒரு விஷயத்தை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும். சட்டம் ஒழுங்கு அதல பாதாளத்தில் உள்ளது. விலைவாசி உயர்வு என்பது தமிழ்நாட்டில் தான் அதிகமாக உள்ளது. 17.5% வேலை வாய்ப்பு இன்றி இருக்கிறார்கள். அதை விட்டுவிட்டு காலை உணவு திட்டத்தில் புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பேன், அம்மா உணவகத்தில் உணவு ருசி பார்ப்பேன் என முதலமைச்சர் புகைப்படம் எடுத்து வெளியிட்டாலும், மக்கள் விலைவாசி உயர்வை மறப்பதாக இல்லை முதலில் விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும்.
அம்மா உணவகம் நாடகம்
மக்களுக்கு தேவை சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு , இதையெல்லாம் முதலமைச்சர் செய்யாமல் புகைப்படம் எடுத்து வெளியிடுவது நாடகமாகத்தான் பார்க்கிறோம். இதை ஆக்கபூர்வமாக பார்க்கவில்லை. அம்மா உணவகத்தில் உள்ள உணவுகளை தான் அமைச்சர்கள் சாப்பிட வேண்டும் என அறிவிப்பு வெளியிட வேண்டும் . அதை விடுத்து விட்டு இரண்டு பருக்கை எடுத்து ருசி பார்த்துவிட்டு இதில் தரம் இருக்கிறது என எப்படி முதலமைச்சர் கூற முடியும். அப்படி உண்மையாக அம்மா உணவு, ஏழை மக்களுக்கு பயன்பட வேண்டும் என்றால் தலைமைச் செயலகத்தில், அம்மா உணவகத்தில் இருந்துதான் உணவு , அனைவருக்கும் வழங்கப்படும் அமைச்சர்கள் அதைத்தான் உணவருந்த வேண்டும்.
அரசு நிகழ்ச்சிகளிலும் அம்மா உணவகத்தில் இருந்து தான் உணவு வரும் என முதலமைச்சர் கூறினால் முதலமைச்சர் தெளிவாக இருக்கிறார் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். மற்றபடி இது மக்களின் கோபத்தை மறைப்பதற்கான நாடகமாக தான் இதை பார்க்கிறோம்.
உதயநிதி துணை முதலமைச்சர்
உதயநிதி துணை முதலமைச்சர் என அவர்கள் கட்சிக்காரர்களே பேசினார்கள். முதலமைச்சர் ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா செல்கிறார்கள். அதற்கு முன் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் என பத்திரிகைகள் வெளியிட்டது. ஆனால் தமிழக மக்கள் அதை யாரும் ரசிக்கவில்லை. தொடர்ந்து மீடியாக்களில் கொடுத்து சோதனை செய்து பார்த்தார்கள். இதை மக்கள் ரசிக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டு பாரதிய ஜனதா கட்சி இதை கிளப்பி விட்டு விட்டார்கள் என கூறினார்கள். நான் எங்காவது கூறினேனா அல்லது எனது கட்சியை சார்ந்தவர்கள் யாராவது அடுத்த துணை முதலமைச்சர் என கூறினார்களா? எங்கள் மீது பழி போட்டு புரளியை கிளப்பி விட்டார்கள். பாரதிய ஜனதா கட்சி பரப்பியது என்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்.
அரசியல் மாறிவிட்டது
அதானி சென்னைக்கு வந்த பொழுது, முதலமைச்சரின் மருமகன் அவர்களை சந்தித்துள்ளார். இல்லை என்று கூறினால் நான் புகைப்படம் வெளியிடத் தயார். இதுவரையில் அம்பானி அதானியை தவறாக பேசி அரசியல் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரே வாரத்தில் மருமகன் அதானியையும், மகன் அம்பானியையும் சந்தித்துள்ளார். இன்று அரசியல் மாறிவிட்டது இன்று மாற்றத்தை நோக்கி தமிழகம் வெற்றி நடை போடுவதற்கு தயாராக இருக்கிறது, வேறு அரசியல் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். மக்கள் புதிய கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்க தயாராக இருக்கிறார்கள் என தெரிவித்தார்