அண்ணாமலை நீக்கம்? திருநெல்வேலிக்காரர்தான் இனி எல்லாம்.. எல்லாத்தையும் மாற்றிய டெல்லி விசிட்!
எடப்பாடி பழனிச்சாமி விடுத்த நிபந்தனையை தவிர்த்து, அண்ணாமலையை பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கும் முடிவுக்கு பல காரணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலையை நீக்கிவிட்டு, அந்த பதவிக்கு திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மூத்த தலைவரை நியமிக்க பாஜக மேலிடம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதிமுக - பாஜக இடையேயான கூட்டணி சுமூகமாக அமைவதற்காக அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்க பாஜகவின் தேசிய தலைவர்கள் சமீப காலமாகவே திட்டமிட்டு வந்ததாக அக்கட்சியின் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தமிழக அரசியலை மாற்றிய டெல்லி விசிட்:
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரே ஆண்டே உள்ள நிலையில், அரசியல் களம் சூடிபிடித்து வருகிறது. ஆட்சியில் உள்ள திமுகவை அகற்ற அதிமுக தீவிரமாக வேலை செய்து வருகிறது. பலமான கூட்டணியை கொண்டிருக்கும் திமுகவை வீழ்த்த அதற்கு இணையான பலம் பொருந்திய கூட்டணி அமைக்க அதிமுக திட்டமிட்டு வந்தது.
குறிப்பாக, அதிமுகவில் ஒரு பிரிவினர், பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். பாஜகவும், இதற்காக பல வேலைகளை செய்து வந்தது. செங்கோட்டையனை வைத்த அவர்கள் காய் நகரத்தி வந்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
குறிப்பாக, பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை அதிமுக தலைவர்கள் டெல்லியில் சந்தித்தது கூட்டணிக்கான அச்சாரமாக மாறியது. அந்த சந்திப்பின்போது, அமித் ஷாவுடன் தனியாக ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிச்சாமி, பல நிபந்தனைகளை விதித்ததாகக் கூறப்படுகிறது.
தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்?
அதில், முக்கியமானது தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலையை நீக்குவது. இதற்கு அமித் ஷா தரப்பில் இருந்து கிரீன் சிக்னல் தந்ததாகவே கூறப்படுகிறது. இந்த நிலையில், தலைமை பதவியில் இருக்கும் அண்ணாமலையை நீக்கிவிட்டு வேறு ஒருவரை நியமிக்க பாஜக மேலிடம் முடிவு செய்திருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
எடப்பாடி பழனிச்சாமி விடுத்த நிபந்தனையை தவிர்த்து, அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்கும் முடிவுக்கு பல காரணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, எடப்பாடி பழனிச்சாமியும் அண்ணாமலையும் ஒரே சமூகத்தை சேர்ந்தவராக இருப்பதால், அது கூட்டணிக்கு பலவீனத்தை தரும் என பாஜக மேலிடம் கருதியதாகவும் எனவே, வேறு சமூகத்தை சேர்ந்தவரை தலைவராக நியமிக்க பாஜக மேலிடம் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, கொங்கு பகுதிகளில் குறிப்பிடத்தகுந்த வாக்குவங்கியை வைத்திருக்கும் பாஜக, தனது ஆதரவை பெருக்க தென் தமிழகத்தை குறிவைத்து வேலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதோடு, பாஜக - அதிமுக கூட்டணியை சுமூகமாக வழிநடத்தும் ஒருவரை தலைவர் பதவியில் கொண்டு வர அமித் ஷா திட்டமிட்டு வந்ததாகவும் பேசப்பட்டது.
அந்த வகையில், அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு வந்த நயினார் நாகேந்திரனை தலைவராக நியமிக்க அமித் ஷா முடிவு செய்திருப்பதாக டெல்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நயினார் நாகேந்திரன், அதிமுக தலைவர்களுடன் இணக்கமான போக்கை பேணி வருகிறார். அதோடு, முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவராக இருப்பது அவருக்கு கூடுதல் பிளஸ் ஆகி விட்டது என கருதுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.





















