Anna University Convocation : ’பேசிக்கொள்ளாமலும் பார்த்துக்கொள்ளாமலும் ஒரே மேடையில் அருகருகே அமர்வது எப்படி?’ டெமோ செய்துகாட்டிய ஆளுநரும் அமைச்சரும்..!
Anna University 43rd Convocation : ’மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டம் வழங்கிக்கொண்டிருக்கும்போதே ஓய்வறைக்கு சென்றார் அமைச்சர் பொன்முடி’
சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலினும் ஒ.பன்னீர்செல்வமும் பேசிக்கொண்டதை விமர்சித்து ’ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும் பேசிக்கொண்டும்’ என சசிகலா பேசிய வார்த்தைகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில், பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவியும் பொன்முடியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ளாமலும் பேசிக்கொள்ளாமலும் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்திருந்தனர்.
ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பதையும் பேசுவதையும் தவிர்த்தனர்
அண்ணா பல்கலைக்கழகத்தின் 43வது பட்டமளிப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. வேந்தர் என்ற முறையில் ஆளுநர் ஆர்.என்.ரவியும், இணை வேந்தர் என்ற முறையில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியும் பங்கேற்றனர். விழா தொடங்கியது முதலில் மேடையறிய பொன்முடி தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார். அடுத்ததாக வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி சபையை நோக்கி வணக்கம் செலுத்திவிட்டு அவருடைய இருக்கையில் அமர்ந்தார். ஆளுநருக்கு அருகே பொன்முடி அமர்ந்திருந்தும் பட்டமளிப்பு விழா முடியும் வரை ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பதையும் பேசுவதையும் தவிர்த்தே வந்தனர்.
முதலில் குத்துவிளக்கேற்றிய ஆளுநர், தன்னுடைய கையில் இருந்த ஜோதியை பொன்முடியிடம் கொடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்தபோது, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நிதி ஆயோக் துணைத் தலைவரிடம் சைகை காட்டி அவரை விளக்கு ஏற்றச் சொன்னார் பொன்முடி. பின்னர், பொன்முடி விளக்கேற்ற, பட்டமளிப்பு விழா தொடங்கியது. துணை வேந்தர் வேல்ராஜ், நிதி ஆயோக் துணைத் தலைவர் ஆகியோர் உரை நிகழ்த்தும்போதும், கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் எழுந்து நின்று மாணவர்களுக்கு ஆளுநர் பட்டம் வழங்கியபோதும் பொன்முடியும் ஆர்.என்.ரவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமலும் முகத்தை எதிரெதிர் திசையில் திருப்பி வைத்துக்கொண்டனர்.
அதே நேரத்தில் தொடக்க உரை நிகழ்த்திய துணை வேந்தர் வேல்ராஜ், ஆளுநர் ஆர்.என்.ரவியை நீண்ட நேரம் புகழ்ந்து வரவேற்ற நிலையில், இணை வேந்தரான அமைச்சர் பொன்முடியை வரவேற்கும்போது ஒரு சில வார்த்தைகளுடன் முடித்துக்கொண்டார்.
நீண்ட நேரம் நிற்க முடியாத பொன்முடி
பட்டம் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் அமைச்சர் பொன்முடியால் தொடர்ந்து நின்றுகொண்டிருக்க முடியவில்லை. அவர் அடிக்கடி வாயை ஊதியும் முதுகை வளைத்தும் தன்னை ஆஸ்வாசப்படுத்திக்கொண்டாலும் அவருக்கு உள்ள உடல் நல பிரச்னைகள் காரணமாக நீண்ட நேரம் அவரால் ஆளுநருக்கு ஈடுகொடுத்து நிற்க முடியவில்லை. அதனால், பாதியில் ஓய்வறைக்கு சென்ற பொன்முடி சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு அதன்பிறகு மீண்டும் வந்து ஆளுநர் அருகே நின்றுகொண்டார்.
இரண்டரை மணி நேரமாக பேசிக்கொள்ளவில்லை
ஒன்றரை மணி நேரம் பட்டமளிப்பு, உரை, நிகழ்வுகள் என கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் ஒரே மேடையில் விழா முடியும் வரை அருகருகே அமர்ந்திருந்த ஆளுநர் ஆர்.என்.ரவியும் அமைச்சர் பொன்முடியும் பேசிக்கொள்ளாததும் குறைந்தப்பட்சம் வணக்கம் சொல்லிக்கொள்ளாததும் மாணவர்கள் இடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு அரசுக்கு எதிரான கருத்துகளை தெரிவிக்கும் ஆளுநர் ?
தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு எதிரான கருத்துகளை ஆளுநர் பேசிவரும் நிலையில், ஆளுநரிடம் பொன்முடியும், பொன்முடி மீதான வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில் பொன்முடியிடம் ஆளுநரும் பேசவில்லை என்று கூறப்படுகிறது. தமிழக அரசின் பொது பாடத்திட்டத்தை பின்பற்ற தேவையில்லை என்று ஆளுநர் பல்கலைக்கழகங்களுக்கு கடிதம் எழுதியது, நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து போட மாட்டேன் என்று சொல்லியது, செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது, சைலேந்திரபாபுவை டி.என்.பி.எஸ்.சி தலைவராக நியமிக்கும் கோப்பை திருப்பி அனுப்பியது என ஆளுநரின் செயல்பாடுகள் தமிழக அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆளுநரிடையே சுமூகமான அணுகுமுறையை கடைபிடிக்க பொன்முடி விரும்பவில்லை என கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியும் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் அவரும் இதே பாணியை பட்டமளிப்பு விழாவில் கடைபிடித்துள்ளார்.
அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல்களும் முரண்பாடுகளும் இருந்தாலும் அது மாணவர்களின் கல்வியில் எந்தவிதமான எதிர்மறை தாக்கத்தையும் ஏற்படுத்திவிடக்கூடாது.