சாதிவாரி கணக்கெடுப்பு: வைகோ, திருமாவளவன் மௌனம் ஏன்? 69% இட ஒதுக்கீடு! அன்புமணி ராமதாஸ் கேள்வி!
"சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து வைகோ, திருமாவளவன், செல்வ பெருந்தகை குரல் கொடுக்காமல் அமைதி காப்பது ஏன் ? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். "

தமிழ்நாட்டில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க, தமிழ்நாட்டில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களை கண்டறிந்து அவர்களை மேம்படுத்த உடனே சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திற்கு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பாஜக,நாம் தமிழர், அமமுக, புரட்சி பாரதம் உள்ளிட்ட 10-கும் மேற்பட்ட கட்சிகளும், பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டனர். சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க மறுக்கும் தமிழக அரசை கண்டித்து கண்டன முழக்குங்கள் எழுப்பப்பட்டது.
பாமகவின் 36 ஆண்டுகால போராட்டம்
பின்னர் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மேடைப்பேச்சு: சமூக நீதியின் பிறப்பிடமான தமிழ்நாட்டில் திமுக சமூக நீதியை குழி தோண்டி புதைத்து விட்டது. தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக கடந்த 36 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறது.
சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த வேண்டும், மாநில அரசு எடுத்தாலும் நீதிமன்றங்கள் ரத்து செய்து விடும், மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று 3 விதமான பொய்களை தமிழக முதலமைச்சர் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார்.
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஒரு சாதிக்கான பிரச்சனை கிடையாது இது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பிரச்சனை சமூக நீதி காண பிரச்சனை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சாதியின் பெயரால் அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாயங்கள் மேல் எழும்பி வருவதற்கு சாதி வாரி கணக்கெடுப்பு அவசியம்.
146 கோடி மக்கள் தொகை உள்ளது
தற்போது வழங்கப்படும் இட ஒதுக்கீடு என்பது 95 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1931 இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலே வழங்கப்பட்டு வருகிறது. 1931 இல் இந்தியாவின் மக்கள் தொகை 28 கோடி ஆனால் இன்று 146 கோடி மக்கள் தொகை உள்ளது.
எனவே மாநில அரசு தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால்தான் தற்போது தமிழ்நாடு மக்களின் உண்மையான நிலை என்ன என்பது குறித்து தெரியவரும்.
தமிழ்நாட்டு மக்களில் யார் யாருக்கு கல்வி வேலை வாய்ப்பு பொருளாதாரம் ஆகியவற்றில் தன்னிறைவு கிடைத்திருக்கிறது. இன்னும் யார் யாருக்கு கூடுதலாக தேவைப்படுகிறது என்ற உண்மையான புள்ளி விவரங்கள் தெரியவரும். அந்த புள்ளி விவரங்களின் அடிப்படையிலே அவர்களுக்கு தேவையான நலத்திட்டங்களை தமிழக அரசு செய்து கொடுக்கலாம். தமிழ்நாட்டில் 67 லட்சம் குடும்பங்களுக்கு இன்னும் சொந்த வீடு கிடையாது குடிசைகளில் வசித்து வருகிறார்கள்.
69 சதவீத இட ஒதுக்கீடு
பீகாரில் நிதீஷ்குமார் மீண்டும் ஆட்சியைப் பிடித்ததற்கு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தியதும் ஒரு முக்கியமான காரணம். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டும் 69 சதவீத இட ஒதுக்கீடு பாதுகாப்பாக இருப்பதற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முக்கிய காரணம்.
சமூக நீதிக்கு எதிரானவர்கள் 2010ல் 69 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தை நாடிய போது ஓராண்டுக்குள் உரிய தரவுகளை கொடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர்.
ஆனால் தமிழக அரசு அந்த தரவுகளை திரட்டுவதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தால் தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் ஆபத்து உள்ளது. பட்டியல் சமுதாயத்தில் (SC) 6 முதல் 8 சமுதாயங்கள் மட்டுமே 90 சதவீத இட ஒதுக்கீட்டை அனுபவித்து வருகிறார்கள்.
அன்புமணி புள்ளி விவரங்களோடு குற்றச்சாட்டு
பட்டியல மக்களுக்கு தமிழ்நாட்டில் 18 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதில் மூன்று விழுக்காடு அருந்ததிய மக்களுக்கும். ஒரு விழுக்காடு பழங்குடியின மக்களுக்கும் வழங்கப்படுகிறது. பட்டியல் என சமுதாயத்திற்குள் 76 உட்பிரிவுகள் இருக்கிறது. அந்த உட்பிரிவில் உள்ள 76 சமுதாயங்களுக்கும் சமமான இட ஒதுக்கீடு கிடைக்கிறதா என்றால் இல்லை.
பட்டியல் சமுதாயத்தில் 6 முதல் 8 சமுதாயங்கள் மட்டுமே 90 சதவீத இட ஒதுக்கீட்டை அனுபவித்து வருகிறார்கள். இதை ஆதாரங்களுடன் நாம் எப்படி தெரிந்து கொள்ள முடியும் என்றால் அதற்கு கணக்கெடுப்பு அவசியம். பின் தங்கிய நிலையில் உள்ள மக்களை முன்னேற்றி விடுவதற்கு இந்த கணக்கெடுப்பு அவசியம்.
பழங்குடியினருக்கு ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில் அவர்களில் 36 உட்பிரிவுகள் இருக்கிறது. அதில் 6-7 பிரிவினர் 75 சதவீத இட ஒதுக்கீட்டை அனுபவிக்கிறார்கள் மீதம் இருப்பவர்களுக்கு கிடைப்பதில்லை. தமிழ்நாட்டில் சுமார் 2 கோடி குடும்பங்கள் உள்ளது 8 கோடி மக்கள் வசிக்கிறார்கள். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி புள்ளி விவரங்கள் அடிப்படையில் திட்டங்களை செயல்படுத்தினால் தமிழ்நாடு 50 ஆண்டுகளில் வளர வேண்டிய வளர்ச்சியை 20 ஆண்டுகளில் எட்டி விடலாம்.
தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் முடியாது? அன்புமணி கேள்வி
இந்தியாவில் பீகார், கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்து நடத்தி முடித்து விட்டன. ஆந்திரா, ஜார்கண்ட், ஒரிசா போன்ற மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்து வருகின்றன. தெலுங்கானாவில் வீடு வீடாக ஒரு படிவம் கொடுத்து 75 விதமான கேள்விகளை கேட்டு மக்களின் கல்வி பொருளாதார நிலையை கண்டறிந்தார்கள் தெலுங்கானாவில் 300 கோடி செலவு செய்து வெறும் ஒன்றரை மாதத்தில் இந்த கணக்கெடுப்பை நடத்தி முடித்து விட்டார்கள்.
இதேபோல் தமிழ்நாட்டிலும் வீடு வீடாக அதிகாரிகள் சென்று மக்களின் கல்வி வேலை வாய்ப்பு பொருளாதாரம் வசதி வாய்ப்பு உள்ளிட்ட அவற்றை கணக்கெடுத்தால் நமக்கு சரியான புள்ளி விவரங்கள் கிடைக்கும் பின் தங்கிய மக்களின் நிலை பற்றி துல்லியமாக கண்டறியலாம். அந்தப் பெண் தங்கிய மக்களை முன்னேற்றுவதற்கு தேவையான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி தமிழ்நாட்டு மக்களை முன்னேற வைக்கலாம்.
திமுக இஸ்லாமியர்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டும் தான் பயன்படுத்தி வருகிறது. இஸ்லாமியர்களில் ஏழு உட்பிரிவுகள் இருக்கிறது இந்த ஏழு பிரிவுகளில் இட ஒதுக்கீட்டை அதிகமாக அனுபவிக்கும் பிரிவினர் யார் என்பதை எப்படி கண்டறிவது? அப்படி கண்டறிந்தால் தானே கிடைக்காதவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்க முடியும்.
திருமாவளவன், வைகோ, செல்வப் பெருந்தலைக்கு அன்புமணி கேள்வி ?
இந்த போராட்டத்திற்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது தேர்தலுக்கு முதல் நாள் வரை நாங்கள் தொடர்ந்து இதை வலியுறுத்திக் கொண்டுதான் இருப்போம். அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட வங்கிக்கப்பட்ட மக்கள் எல்லாம் படிக்க வேண்டும் வேலைக்கு தள்ள வேண்டும் அனைத்து சமுதாய மக்களும் சுயமரியாதையோடு வாழ வேண்டும் அதற்கு சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்.
நான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை பார்த்து கேட்கிறேன் உங்களுடைய ஆட்சிதானே கர்நாடகாவில் நடக்கிறது அவர்கள் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் போது நீங்கள் ஏன் குரல் கொடுக்க மறுக்கிறீர்கள்?. திராவிட கழகம் ஆசிரியர் வீரமணியை கேட்கிறேன், வைகோ திருமாவளவன் ஆகியோரையும் கேட்கிறேன். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால், அதிகமாக பயன்பட போவது பட்டியல் சமுதாய மக்கள்தான் நீங்கள் ஏன் வாயை மூடி மௌனமாக இருக்கிறீர்கள்? தேர்தலுக்காக அமைதியாக இருக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார்.





















