Amith Sha to Chennai: ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. நாளை தமிழகம் வரும் அமித் ஷா.. 11-ம் தேதி 2 முக்கிய அறிவிப்புகள்.?
மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நாளை சென்னை வர உள்ள நிலையில், 11-ம் தேதி இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக மூத்த தலைவர் அமித் ஷா நாளை சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் பாஜகவை பொறுத்தவரை, இரண்டு முக்கிய விஷயங்கள் முடிக்கப்பட வேண்டியுள்ளன. அது, பாஜக தமிழ்நாடு அடுத்த தலைவர் யார் என்பதும், அதிமுக உடன் கூட்டணி உண்டா இல்லையா என்பதும் தான். அதனால், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல், தமிழ்நாடு வரும் அமித் ஷா இந்த இரண்டு விஷயங்கள் குறித்தும் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக தமிழ்நாடு - இழுபறியில் உள்ள 2 முக்கிய விஷயங்கள்
தமிழ்நாட்டில் பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பது, சமீப காலமாகவே பேசுபொருளாக உள்ளது. தலைவர் ரேஸில் சீனியர்கள் இருப்பதாக முதலில் கூறப்பட்டது. பின்னர், நயினாருக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், திடீரென கருப்பு முருகானந்தம் ரேஸில் குதித்திருப்பதாக தகவல்கள் வெளியானது. அதிலும், தற்போதைய தலைவர் அண்ணாமலையே அவரை பரிந்துரைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனால், டெல்லி சென்று திரும்பிய அண்ணாமலை, தலைவர் ரேஸில் தான் இல்லை என்றும், யாரையும் தான் பரிந்துரைக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தினார். இதைத் தொடர்ந்து, நயினார் நாகேந்திரனுக்கான ரூட் க்ளியராகிவிட்டதாகவே கருதப்படுகிறது.
இதேபோல், அதிமுக உடனான கூட்டணி விஷயமும் இழுபறியில் உள்ளது. சொல்லப் போனால், அதிமுக கூட்டணிக்காகத் தான், பாஜக தமிழ்நாடு தலைவரே மாற்றப்படுகிறார் என்பதுதான் உண்மை. அண்ணாமலைக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் மோதல் போக்கு உள்ளதால், அண்ணாமலை தலைவராக இருந்தால் கூட்டணி வைக்க முடியாது என அதிமுக தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியானது.
மேலும், முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதில் அதிமுக தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளதால், அண்ணாமலை தலைவராக இருப்பது அந்த விஷயத்திலும் சிக்கலை ஏற்படுத்துவதாக உள்ளது. இதனால் தான், மாநிலத் தலைவரை மாற்றும் முடிவிற்கு பாஜக வந்தது. இந்நிலையில், அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் இணக்கமாக உள்ளதால், அவரை தலைவராக்கிவிட்டால், அதிமுக உடன் கூட்டணி வைப்பது சுலபமாகிவிடும் என பாஜக தலைமை கணக்கு போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நயினார் நாகேந்திரன் திடீரென நேற்று டெல்லி சென்று அமித் ஷா-வை சந்திப்பதாக தகவல் வெளியானதால், அவர் தலைவராகும் தகவல் கிட்டத்தட்ட உறுதியான விஷயமாக மாறியுள்ளது.
சென்னை வரும் அமித் ஷா 11-ம் தேதி முக்கிய அறிவிப்பு.?
அதன் தொடர்ச்சியாக, தற்போது அமித் ஷா சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 நாட்கள் பயணமாக நாளை(10.04.25) இரவு சென்னை வரும் அமித் ஷா, மறுநாள், கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், அதிமுக கூட்டணி குறித்தும் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிகிறது.
அதேபோல், பாஜக தமிழ்நாடு முக்கிய நிர்வாகிகளுடனும் அவர் ஆலோசனை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, பாஜக தமிழ்நாட்டின் அடுத்த தலைவர் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. இதனால், 11-ம் தேதி, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல், ஒரே பயணத்தின் மூலம், அடுத்த மாநிலத் தலைவர் மற்றும் அதிமுக உடனான கூட்டணி குறித்து, அமித் ஷா முக்கிய முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலால், தமிழ்நாட்டில் அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது.





















