ADMK Single Leadership : ”பொதுக்குழு திட்டமிட்டபடி நடக்கும்.. சந்தர்ப்பவாதிகள் திட்டம் நிறைவேறாது..” : கே.பி.முனுசாமி திட்டவட்டம்
அதிமுக. பொதுக்குழு மற்றும் செயற்குழு திட்டமிட்டபடி நடைபெறும் என்று துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வரும் 23-ந் தேதி நடைபெற உள்ளது. ஒற்றைத் தலைமை விவகாரம் சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இந்த கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் மோதல் வலுபெற்றுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இந்த கூட்டத்தை ஒத்திவைக்குமாறு இணை ஒருங்கிணைப்பாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில், பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்தை நேரில் ஆய்வு செய்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,
"அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வரும் 23-ந் தேதி கூட்டப்பட்டுள்ளது. அந்த கூட்டத்திற்கு வருகை தர வேண்டிய மாவட்டச்செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகரச்செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகளுக்கு தலைமை கழகத்தில் இருந்து பதிவுத்தபால் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் கடிதத்தை பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சி தலைமை கழகத்திற்கு வந்துவிட்டது. எனவே, திட்டமிட்டபடி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உறுதியாக நடைபெறும்.
துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஓ.பன்னீர்செல்வம் எழுதியதாக கூறப்படும் கடிதம் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. அதன் சாரம்சம் என்னவென்று தெரியவில்லை. அதுபற்றி எங்களுக்கு தெரியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கடந்த 14.6.2022ல் கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் இறுதியாக பேசிய ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பொதுக்குழு கூட்டப்படவில்லை. உள்கட்சித் தேர்தல் முடிந்துள்ளது. பொதுக்குழுவில் உட்கட்சி தேர்தலை அங்கீகரித்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும். எனவே, சிறப்ப அழைப்பாளர்களை அழைக்கக்கூடாது என்று ஒருங்கிணைப்பாளர் கூறி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் இந்த கூட்டம் நடைபெறாது. இரண்டு நாட்களுக்கு முன்புகூட பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து கருத்துக்கள் கூறி மாற்றிச் சென்றுள்ளார். தீர்மானக்குழு கமிட்டியில் அமர்ந்து முடிவு செய்துள்ளார். சிறப்பு அழைப்பாளர்களை அடுத்த கூட்டத்திற்கு அழைக்கலாம் என்று ஒருங்கிணைப்பாளரே அறிவிக்கிறார். இன்று புதியதாக அவரே கருத்துச் சொல்வது என்ன காரணம்? என்று தெரியவில்லை.
பொதுக்குழுவில் நடக்கும் தீர்மானங்கள் குறித்து இப்போது சொல்வது அழகல்ல. ஒரு சில சந்தர்ப்பவாதிகள் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இந்த இயக்கத்திற்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். காலம் அவர்களுக்கு தண்டனை வழங்கும். ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக பொதுக்குழு கூட்டத்திற்கு வருவார். பொதுக்குழு என்ன முடிவு செய்கிறதோ, அதை ஒருங்கிணைப்பாளரும் ஏற்றுக்கொள்வார். இணை ஒருங்கிணைப்பாளரும் ஏற்றுக்கொள்வார். அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். "
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்