Edappadi Palanisamy: அதிமுக பொதுச்செயலாளர், ஆதீனம், ஆன்லைன் சூதாட்டம் - எடப்பாடி பழனிசாமியின் முழுப் பேட்டி...!
அதிமுகவும் ஆட்சியில் இருந்தபோது ஆதீனத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. இப்போது உள்ள ஆட்சியாளர்கள் சதிசெய்கின்றனர்.
சேலம் மாவட்டம், ஓமலூரில் புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சி ஓராண்டு காலத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு அழிந்துவிட்டது என்றார். ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் சொத்துகளை இழந்து, இன்னுயிரையும் இழந்துவிட்டனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு நடிகர்கள் உள்பட பிரபலங்கள் யாரும் துணை போகக்கூடாது என்று கேட்டுக்கொண்ட அவர், அரசும் ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதேபோல் தமிழகத்தில் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. அதனை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர், ஏழை குழந்தைகளின் நலனுக்காக அதிமுக ஆட்சியில் அரசுப்பள்ளிகளில் கொண்டுவரப்பட்ட எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் ரத்து செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார். அதிமுக பொதுச்செயலாளர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அந்தக்கேள்வி கற்பனையானது என்று விமர்சித்தார். கந்துவட்டி மிகப்பெரிய கொடுமை, காவல்துறையை சேர்ந்த ஒருவரே அதனால் உயிரிழந்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர், அரசு, கந்துவட்டியை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தமிழகத்தில் ஆளுங்கட்சியை தவிர்த்து எல்லாமே எதிர்க்கட்சிதான் என்று கூறிய அவர், அதில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக உள்ளது என்றார். மேலும், விஞ்ஞான முறைப்படி ஊழல் செய்யும் கட்சி திமுக என்பதை கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறையில் சாலை அமைக்காமலே ஊழல் செய்து மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது என்றும் விமர்சித்தார்.
கட்சியிலேயே இல்லாத சசிகலா குறித்து, ஊடகத்தினர் மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்புவதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார். கூட்டுறவே நாட்டுயர்வு என்று கூறிய இவர், அதிமுக ஆட்சியில் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் பதவிகாலத்தை தற்போது குறைக்கப்பட்டுள்ளதாகவும், காரணம் கேட்டால் ஊழல் என்று கூறுகிறார்கள். ஊழல் நடைபெறும் சங்கங்களை மட்டும் கலைக்கலாம். 13 வகையான கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. எதற்காக ஒட்டுமொத்த சங்கங்களையும் கலைக்கவேண்டும். இதுகுறித்து ஆளுநரும் முறையாக ஆய்வு செய்துதான் நடவடிக்கை எடுப்பார் என கருதுகிறேன். அதிமுகவும் ஆட்சியில் இருந்தபோது ஆதீனத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. இப்போது உள்ள ஆட்சியாளர்கள் சதிசெய்கின்றனர். எந்த கோயில், எந்த மதமாக இருந்தாலும் அவர்களுடைய ஐதீக முறைப்படி செயல்பட வேண்டும். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொலைபேசியில் பேசிய ஆடியோ குறித்த கேள்விக்கு. யாராக இருந்தாலும், தொலைபேசியில் நம்பிக்கையின் அடிப்படையில் பேசுவதை வெளியில் சொல்வது துரோகச் செயல், கண்டிக்கத்தது என்றார். மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே தண்ணீர் திறப்பது தேவையற்றது என்றும் பருவகாலத்தை வைத்தே தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் கூறிய அவர், முன்கூட்டியே தண்ணீர் திறந்த காரணத்தால் டெல்டா மாவட்டங்களில் கால்வாய்கள் முழுமையாக தூர்வார முடியவில்லை என்றும் கூறினார்.