OPS: சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவராக அங்கீகாரம் செய்ததை பாசிட்டிவாக பார்க்கிறேன் - ஓ.பன்னீர்செல்வம்
அதிமுக சட்ட விதியை மாற்றுவது அபாயகரமானது, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எண்ணத்திற்கு மாறானது ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய நிலையில், இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து பேர்வையை விட்டு வெளியே வந்த ஓ.பன்னீசெல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.
”பாசிட்டிவாக பார்க்கிறேன்”
அப்போது அவர் பேசியதாவது, அதிமுக சார்பாக ஜனநாயக கடமையை நிறைவேற்ற சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்றோம். தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவராக அங்கீகாரம் செய்யப்பட்டதை பாசிட்டிவாக பார்க்கிறேன்
மேலும், சட்டமன்ற அலுவல் ஆய்வு குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை முழுமனதோடு ஏற்று கொண்டிருக்கிறோம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
View this post on Instagram
இதையடுத்து எதிர்கட்சி துணை தலைவர் பதவி தொடர்பாகவும், சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளை, இபிஎஸ் புறக்கணிப்பு தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், அவர்களை பற்றிய கேள்விகளை அவர்களிடம் கேளுங்கள் என தெரிவித்தார்.
”விதிகளை காக்கும் பொறுப்புள்ளது”
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் மறைவிக்கு பிறகு அதிமுக விதிகளை காக்கும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. எங்களுக்கு தொண்டர்களின் ஆதரவு இருக்கிறது. அதிமுக சட்ட விதியை மாற்றுவது அபாயகரமானது. இது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எண்ணத்திற்கு மாறானது
சட்டப்பேரவை கூட்டத்தொடர்:
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான மழைக் கால கூட்ட தொடர், இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்ட தொடரின் முதல் நாளான இன்று, அவைக்கு வராமல் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் புறக்கணிப்பு செய்தனர். எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி தொடர்பாக, பேரவைத் தலைவர் முடிவு எடுக்காததால் புறக்கணிப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை, இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய நிலையில், மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. இதையடுத்து, சட்டப் பேரவையை நாளை காலை 10 மணிக்கு ஒத்திவைப்பதாக பேரவை தலைவர் அப்பாவு அறிவித்தார்.
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு பேரவையில் கேள்வி எழுப்பினால், அதற்கான பதில் அழகாக பேரவையில் தரப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
ஆன்லைன் தடை சட்டம்:
சமீபத்தில் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு நிரந்தர அந்தஸ்து வழங்க, சட்டப்பேரவையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
ஸ்டெர்லைட் மற்றும் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை:
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, ஸ்டெர்லைட் விவகாரத்தில் துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை ஆகியவை தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.