ADMK: கூட்டணியில் புதிய கட்சி - பாஜக சப்போர்ட், க்ரீன் சிக்னல் கொடுத்த எடப்பாடி? எதிர்பாராத ட்விஸ்ட்
ADMK EPS: பாஜக உடனான கூட்டணியில் புதிய கட்சி இணைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

ADMK EPS: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை எடப்பாடி பழனி சாமி திரும்பப் பெற்றுள்ளார்.
வழக்கை வாபஸ் பெற்ற ஈபிஎஸ்:
கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இந்த காலத்தில், டிடிவி தினகரனுக்கு எதிராக ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதில், அதிமுகவின் கொடி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயர், புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அந்த வழக்கை, எடப்பாடி திடீரென வாபஸ் பெற்றுளார். இதனால், கூட்டணிக்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பலன்கள் இன்றி அரசியல்வாதிகள் ஒரு சிறு அறிக்கையை கூட வெளியிடமாட்டார்கள் என்பதே இதற்கு காரணம்.
பாஜக கூட்டணியில் டிடிவி:
உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோதே, டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் தங்கள் கூட்டணி இருப்பதை உறுதி செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அன்று அத்தகைய அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இருப்பினும், டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ்-ஐ பாஜகவை கைவிடவில்லை என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்தார். அதைதொடர்ந்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தினகரன் மற்றும் ஓபிஎஸ் பாஜக கூட்டணியிலேயே இருப்பதாக உறுதிபட தெரிவித்தார். இதன் மூலம், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில், டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது.
க்ரீன் சிக்னல் கொடுத்தாரா ஈபிஎஸ்?
நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளால் ஏற்பட்ட நிர்பந்தத்தின் காரணமாகவே, பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் ஓபிஎஸ், டிடிவி மற்றும் சசிகலாவை கட்சியில் மீண்டும் இணைக்க வலியுறுத்தக்கூடாது என, அமித் ஷாவிடம் ஈபிஎஸ் நிபந்தனை விதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே கூட்டணி தொடர்பான அறிவிப்பின்போது, ஓபிஎஸ் மற்றும் டிடிவி அந்த மேடையில் இடம்பெறவில்லை எனவும் தெரிகிறது. இந்நிலையில் தான், டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை எடப்பாடி பழனிசாமி வாபஸ் பெற்றுள்ளார். இதனால், தனது முடிவை மாற்றி டிடிவியை கூட்டணியை சேர்க்கும் நோக்கில் வழக்கை திரும்பப் பெற்றாரா? அல்லது டெல்லி பாஜகவின் நிர்பந்தத்தால் இந்த முடிவை எடுத்தாரா? என்பதே தற்போது கேள்வியாக உள்ளது.
எதிர்பாராத ட்விஸ்ட்:
ஓபிஎஸ், டிடிவி மற்றும் சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்கும் எண்ணமே இல்லை என ஈபிஎஸ் திட்டவட்டமாக பேசி வருகிறார். ஆனால், பாஜக உடன் இனி கூட்டணியே கிடையாது என்ற நிலைப்பாட்டில் இருந்தும் தடாலடியாக மாறியுள்ளதால், மேற்குறிப்பிட்ட 3 பேரையும் அதிமுகவில் இணைப்பது என்பதும் எதிர்காலத்தில் சாத்தியமாகலாம் என கூறப்படுகிறது. அதன் முதல்படியாகவே டிடிவிக்கு எதிரான வழக்கு வாபஸ் கருதப்படுகிறது.அப்படி நடந்தால் அதிமுகவில் ஒற்றுமை இருக்குமா? திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கம் அவர்களுக்கு பலனளிக்குமா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.






















