ADMK; அதிமுக உண்ணாவிரதம்..! திமுகவை கண்டித்தா..? தன் பலத்தினை சோதிக்கவா..? அரசியல் வியூகம் என்ன..?
ADMK; கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் திமுக அரசைக் கண்டித்து அதிமுக இன்று உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்தவுள்ளது.
ADMK; கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் திமுக அரசைக் கண்டித்து அதிமுக இன்று உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்தவுள்ளது. தமிழக அரசியல் களத்தில் கொங்கு மண்டலம் அதிமுகவின் பலம் என்றே கூறவேண்டும். அங்கு அதிமுக வேட்பாளர்கள் தேர்தலுக்குப் பின்னர் தொகுதிப் பக்கம் செல்லாவிட்டாலும் அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்றுவிடும் அளவிற்கு அதிமுகவின் கோட்டையாக கொங்கு மண்டலம் விளங்குகிறது. கடந்த 2021சட்டமன்ற தேர்தலிலும் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஆளும் திமுக அரசுக்கு வாக்களிக்க, கொங்கு மண்டலம் மட்டும் அதிமுகவின் எதிர்கால அரசியலுக்கு நம்பிக்கை அளிக்கும் படியாக அதிமுகவின் பக்கம் நின்றது.
அவ்வகையில் இன்று அதிமுக தன் பலத்தினை மீண்டும் சுயபரிசோதனை செய்து கொள்ளும் விதமாக ஆளும் திமுக அரசினை கண்டித்து கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்ட மன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டத்தினை இன்று நடத்தவுள்ளது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார், மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இந்த உண்ணாவிரதப் போராட்டமானது, ஆளும் திமுக அரசு தொடர்ந்து கோவை மாவட்டத்தினை புறக்கணித்து வருவதாகவும், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களை கிடப்பில் போட்டுள்ளதாகவும், தமிழ்நாடு மக்களுக்கு வாழ்வாதார பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சொத்து வரி, பால் விலை, மின் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த உண்ணாவிரத போராட்டமானது நடக்கிறது.
காலை 9 மணிக்கு துவங்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னாள் முதல்-அமைச்சரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்து உரையாற்றுகிறார். கோவை மாவட்டத்தினை அதிமுக அதன் நிர்வாகப் பணிகளுக்காக கோவை மாநகர் மாவட்டம், புறநகர் வடக்கு மாவட்டம், புறநகர் தெற்கு மாவட்டம் என மூன்றாகப் பிரித்துள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 11 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
அதிமுக கோவை மாவட்டத் தலைமை மூன்று மாவட்டங்களில் இருந்தும் 5ஆயிரம் பேரை திரட்ட கூறியதாக தெரிகிறது. ஆனால் சட்டமன்ற நிர்வாகிகள் தொகுதிக்கு 5 ஆயிரம் பேரை திரட்டி உண்ணாவிரதப் போராட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கவனத்தினை அதிமுக பக்கமும், கோவை பக்கமும் திருப்பிட வெகுமுனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இந்த உண்ணாவிரதப் போராட்டம் எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான தன் பலத்தினை வலுப்படுத்த சிறு முன்னோட்டமாக கருதப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் உள்ள தொகுதிகள் மட்டும் இல்லாது தமிழ்நாடு முழுவதும் உள்ள பாராளுமன்ற தொகுதிகளை கைப்பற்றவே இந்த உண்ணாவிரதப் போராட்டம் எனப்படுகிறது.
அதுமட்டும் இல்லாமல், வரும் பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் தலைமையில் தான் மிகப்பெரிய கூட்டணி அமையும் என அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். அதற்கான வியூகங்கள் கட்சியின் உள்வேலையாக நடந்து வந்தாலும், இந்த உண்ணாவிரதப்போராட்டம் என்பது, அடுத்தடுத்து தமிழ்நாடு முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் நீட்சியாகத்தான் கோவையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது.
அதிமுகவிற்கு எதிர்காலம் இல்லை என்றால் தங்களுக்கு இனி அரசியலில் எதிர்காலம் இல்லை என்பதினை உணர்ந்த அதிமுக நிர்வாகிகள் இந்த போராட்டத்தினை மிகப்பெரிய அளவில் நடத்திட தீவிரமாக களப்பணி செய்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதிமுக தலைமையின் வியூகத்திற்கு ஏற்றவாறு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போராட்டத்தை மிகப்பெரிய அளவில் நடத்துவதற்கு திட்டமிட்டு தொண்டர்களை திரட்டி வருகிறார். அதுமட்ட்டும் இல்லாமல் கடந்த சட்டமன்ற தேர்தலை போன்று கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளை கைப்பற்றுவதற்கு வியூகம் வகுத்து செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.