புகைப்படத்துடன் ஆபாசக் கருத்து.. திமுக பிரமுகர் மீது காயத்ரி ரகுராம் போலீஸில் புகார்..
தி.மு.க. பிரமுகர் ஜெயச்சந்திரன் மீது தமிழக பா.ஜ.க. நிர்வாகி காயத்ரி ரகுராம் சென்னை காவல் ஆணையர் அலுவகத்தில் புகார் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகையும், நடன இயக்குனராகவும் பணிபுரிந்தவர் காயத்ரி ரகுராம். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க.வில் இணைந்தார். தற்போது, தமிழக பா.ஜ.க.வின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவராக பொறுப்பு வகிக்கிறார். இந்த நிலையில், தி.மு.க. பிரமுகர் ஜெயச்சந்திரன் காயத்ரி ரகுராமின் புகைப்படத்தை வெளியிட்டு ஆபாசமாக கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் தமிழக பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால்கனகராஜ் மற்றும் நிர்வாகிகளுடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தனர். அப்போது, பெண்களை தொடர்ந்து அவமதித்து வரும் தி.மு.க. பிரமுகர் ஜெயச்சந்திரனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று காவல் ஆணையரிடம் மனு அளித்தார்.
பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்த பால்கனகராஜ் கூறியதாவது, ”பா.ஜ.க. பிரிமுகர் காயத்ரி ரகுராமை தி.மு.க. பிரமுகர் ஜெயச்சந்திரன் ஆபாசமாக சித்தரித்துள்ளார். காயத்ரி ரகுராம் வீடியாவை எடுத்துக்கொண்டு தவறான முறையில் பயன்படுத்தி உள்ளார். இவர் திமுகவைச் சேர்ந்த பெண்களை இதுபோல் செய்வாரா? தி.மு.க. ஆட்சியில் உள்ள தி.மு.க. எம்.பி. செந்தில்குமார் அல்லது கனிமொழி எம்.பி. இதுபற்றி ஒருவார்த்தை கூட கேட்கவில்லை. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.” இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, திமுக பிரமுகர் ஜெயச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தி தமிழக காவல்துறை தலைவரிடமும் காயத்ரி ரகுராம் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அப்போதே, திமுக பிரமுகர் ஜெயச்சந்திரன் தனது வீடியோவை பகிர்ந்து அவதூறாக கருத்துக்களை பதிவிட்டுள்ளார் என்றும், இது பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல், ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், குற்றவாளியை தமிழ்நாடு காவல்துறை கைது செய்ய வேண்டும் என்றும் காயத்ரி ரகுராம் வலியுறுத்தி இருந்தார்.
ஆனால், அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழலில் இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் காயத்ரி ரகுராம் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைனில் நடக்கும் அத்துமீறல்களை எதிர்த்து, பெண்கள் அதிகமாக புகாரளிக்க முன்வர வேண்டும் என்பது சைபர் நிபுணர்களின் கருத்தாக உள்ளது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்